அமெரிக்க முகமத் அலியும், பருத்தித்துறை சாண்டோ துரைரத்தினமும்....(கறுப்பும் சாதியும்)

இன்று முகநூலின் பதிவுகளில், நேற்று மறைந்த குத்துச்சண்டை வீரன் முகமது அலிக்கான அஞ்சலிகள் ஏராளம். வீரவிளையாட்டு மேன்மைகளை விட, அலிக்கு வேறொரு முகமுண்டு. அமெரிக்க நிறவெறியை, அதனூடான போர்வெறியை வெறுத்த மானிடன் அவன். அவனது மதமாற்றம் பற்றிய இன்றையக் கேள்வியதிகாரத்தை நான் ஆதரிக்கவேயில்லை. அடிமையுணற்சியிலிருந்து நீ வெளியேற வேண்டுமெனில், பரஸ்பரச்சகோதர மதமொன்றை நீ அடையவேண்டும். அன்று அவனடைந்த மதம். இன்று,அடைந்த வன்முறை மாற்றத்தை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். போகட்டும்...

குத்துச்சண்டையின் தாக்குதல் வகுமுறைகளில் 'வண்ணாத்திப்பூச்சியின் நடனம்' என்று அலி வகுத்த பிரசித்திபெற்ற நளினம் இன்று எவராலும் கைப்பற்றப் படுவதில்லை. அதற்கு,தாக்குதலையேற்றுப் பழகி, எதிர்த்தாக்குதல் கொடுத்தல் என்ற பழகுமுறை மாறி, எதிராளியின் தொய்வுப்பகுதிகள் கவனத்திலெடுக்கப்பட்டு, கவனத்தாக்குதல் கொடுத்தல் எனும் இயங்குதல் பொறிமுறையாக குத்துச்சண்டை மாற்றமடைந்து விட்டது. அதைவிட, குத்துச்சண்டை பணம் வலைக்கும் பொறியாகி விட்டது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு யவ்வனப்பெண் ப்பூவென ஊதினால், பஞ்சாகப் பறக்கும் நெத்தலிப்பயில்வான் நான். என் சக மாணவநண்பன் உதயகுமார், மந்திகை பத்திரகாளியம்மன் திருவிழாவிலே சிலம்படி வியூகமெடுத்து, பதினாறு வீடுகட்டிக் கம்புசுழற்றி வந்தபோது, பார்வையாளனாக நின்ற எனக்கு, சிலம்படி பழகவேண்டுமென்ற அவா வந்தது. அவனிடம் கேட்டேன்.

அடுத்தநாள் அவனது சிலம்படிஆசானிடம் கூட்டிச்சென்றான். மந்திகை ஆஸ்பத்திரிக்கு தெற்காகவுள்ள தோட்டவலயத்துள் வெங்காயப்பாத்திக்கு தண்ணீர் மாறிக்கொண்டிருந்த கருத்துருண்ட சிலம்படிஆசான்,
என் ஊரைக்கேட்டார்...
என் சாதியைக்கேட்டார்...
பழக்க மாட்டேன் என்றார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~

வேலாயுதம் உயர்நிலைப் பள்ளியிலிருந்து, உட்பாதையால் என் வீடுசெல்லும்வழியில், சவனாய்க்கிராமத்தைக் கடக்கும் போது, சாண்டோ துரைரத்தினத்தின் வீட்டைத் தாண்டிச் செல்வேன். எப்போதுமே அவரது வீட்டு முற்றத்தில் நான்கைந்து பயில்வான்கள்,மல்யுத்தமோ, குத்துச்சண்டையோ, உடற்பயிற்சியோ பயின்று கொண்டிருப்பார்கள்.

சிலம்பு பழகுவதுதான் இல்லையென்றாயிற்றே என மனம் நொந்துகொண்டு, ஒருநாள் சாண்டோ வீட்டில் நுழைந்தேன்... சாய்மனைக்கதிரையில் இருந்துகொண்டு, நாடியைத் தூக்கி என்ன என்று மொழியற்று வினவினார்...

"மல்யுத்தம் பழக வேண்டும் சேர்"

"ஓ.. பழகு.. ஆனால் உடம்பைக் கொஞ்சம் வலுப்படுத்தோணுமேடா"

"சரி அந்தத் தடியைப் பிடிச்சுக்கொண்டு 1500 தடவை (sit-up) இருந்து எழும்பு பாப்பம்"

நானும் ஏதோ மாரித்தண்ணியில் பொய்நீச்சல் அடிப்பது மாதிரி இருந்தெழும்பினேன். எண்ணிக்கை முடியும் போது, turbulenceஇல் அகப்பட்ட விமானம் போல என் கால்கள் நடுங்கின.

"சரி நாளைக்கும் இதேநேரம் வா" என்றார்.

அன்றிரவு அன்றாடக்கடன் கழிக்க ஏலாமல் நொய்யலப்பட்டும், அடுத்தநாள் நண்டுக்கும், தவளைக்கும் இடைப்பட்ட புதிர்நடையில் சாண்டோ வீட்டுக்குச் சென்றேன்.

அதே சாய்வுநாற்காலியில்(அப்போது கேர்ணியா ஓப்பரேசன் செய்திருந்தார்) படுத்திருந்துகொண்டு, வியப்புடன் என்னை வரவேற்றார். அன்றிலிருந்து தொடங்கிய என் மல்யுத்த, குத்துச்சண்டைப் பயிற்சிகள் மூன்றாண்டுகள் தொடர்ந்த, எந்தவொரு கணத்திலும், நான் என்ன சாதி என எப்போதுமே கேட்டதில்லை.

மல்யுத்தப்பயிற்சியில் முறைதவறும் ஒவ்வொரு பொழுதும் தன் முழங்காலால் என் கொட்டையை நோக்கித் தாக்குவதிலும் ஆசான் மறப்பதில்லை.
ஆசான்களை மறப்பதொரு வாழ்வு வாழ்வல்ல என்பதே துணிபு.

ஜெயரூபன் (மைக்கல்)

Quelle - Facebook

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை