எனக்கு எட்டிய எட்டுக்கள்

எட்டுப் பதிவுக்கு நிர்மலாவும், சுதர்சனும், கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிருக்க என்னத்தை எழுதுவது என்ற யோசனை ஒரு புறமும், நேரமின்மை மறுபுறமுமாய் சில நாட்கள் ஓடி விட்டன.

1
அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை.. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 47வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன். அது சாதனைதானே.

2
சனிக்கிழமை பெரியார் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் இது நினைவில் வந்தது. எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் எங்களுக்குத் தலைமயிர் வெட்டும் கதிரமலைக்கு தேங்காய்ச் சிரட்டையில்தான் தேநீர் கொடுப்பார்கள். சாதித்திமிர் என்பது எனது அம்மம்மா, பாட்டாவுக்கு மட்டுமன்றி எங்கள் ஊரான ஆத்தியடி மக்களுக்கும் அதிகமாகவே இருந்தது. அந்தச் சிரட்டைப் பழக்கத்தை நிற்பாட்டி கிளாசில் தேநீர் கொடுத்தேன்.

3
எனக்கு நினைவு தெரிந்து அவதானிக்கத் தொடங்கிய காலங்களில் (அறுபது, எழுபதுகளில்) மாதத்தில் மூன்று நாட்கள் எங்கள் வீட்டுப் பெண்கள், அதாவது அம்மா, மாமிமார், சித்தி, பக்கத்து வீட்டு குஞ்சியம்மா... என்று பலரும் ´தொடமாட்டாள்´ என்ற பட்டப் பெயரோடு தள்ளி வைக்கப் பட்டார்கள். சாப்பாடு கூட தீண்டத்தகாதவர்கள் என்பது போல வெளியிலே கொண்டு போய்க் கொடுக்கப் பட்டது. அந்த நேரத்தில் சாப்பிடத் தனிக்கோப்பை.

அப்பாச்சி வீட்டில் வெளியில் கரிக்கட்டியால் பெட்டி போட்டு அதற்குள்ளேதான் மாமிமார் இருந்தார்கள்.

எங்கள் வீட்டில், அந்த மூன்று நாட்களிலும் எனது அம்மா குசினிக்குள் போவதில்லை. அம்மம்மாதான் வந்து சமைப்பா. அம்மா குசினி வாசலில் வந்து நிற்க அம்மம்மா சாப்பாட்டைப் போட்டுக் கொடுப்பா. அம்மா ஒரு ஓரமாக விறாந்தை நுனியில் இருந்து சாப்பிடுவா. அந்த நாட்களில் அம்மா சுவாமி அறைக்குள் போக மாட்டா. அலுமாரிக்குள் இருக்கும் காசு தேவைப்பட்டாலும் என்னையோ, அண்ணனையோ அனுப்பித்தான் எடுப்பா. கிணற்றில் தண்ணி அள்ள மாட்டா. வீட்டின் வெளி விறாந்தையில்தான் அந்த மூன்று நாட்களும் படுக்கை. இது பற்றி நான் சின்னவளாக இருந்த போது பெரிதாகச் சிந்திக்கவில்லை. அதென்ன தொடமாட்டாள், எதையும் தொடக் கூடாதோ என்ற கேள்விகள் எனக்குள் எழுந்திருந்தாலும், பெரிதாக அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் எனது 12வது வயதில் என் முறை வந்த போதுதான் நான் விழித்துக் கொண்டேன். முதல் முறை எட்ட நின்றே சாப்பாட்டை அம்மாவிடம் வாங்கிச் சாப்பிட்டேன். ´தீட்டு´ என்று சொல்லி அம்மம்மா என்னிலிருந்து இரண்டடி தள்ளி நடந்த போது மௌனமாய் இருந்து எரிச்சல் பட்டேன்.

ஆனால் இரண்டாவது முறை என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனது வீட்டுக்குள் நான் போவதற்கு யாரும் கோடு போட்டு வைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நான் சண்டை பிடிக்கவோ கூப்பாடு போடவோ இல்லை. அம்மாவிடம் பக்குவமாகச் சொன்னேன். வீட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டுக்கு வருபவர்களுக்கும் இதைப் பறை தட்டுவது போல, தெரியப் படுத்த வேண்டுமா? என்று தொடங்கி, இன்னும் சில கருத்துக்களையும் சொன்னேன். குறிப்பாக “எனது வீட்டுக்குள்ளேயே அங்கு போகாமல், இங்கு போகாமல் என்னால் இருக்க முடியாது“ என்பதையும் அம்மாவிடம் விளக்கினேன். அம்மாவின் சம்மதம் கிடைக்க முன்னரே பசித்த போது குசினிக்குள் போய் சாப்பிட்டேன். எனது வழமையான கட்டிலிலேயே படுத்தேன். அம்மா கொஞ்சம் சங்கடப் பட்டா. அம்மம்மாவுக்குத் தெரிந்தால் வில்லங்கம் என்று பயந்தா. ஆனாலும் என்னைத் தடுக்கவில்லை. சில மாதங்களில் அம்மாவும் அந்த மூன்று நாட்கள் பற்றி யாரிடமும் சொல்லாமல் தானே குசினிக்குள் போய் சமைக்கத் தொடங்கி விட்டா.

மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் அம்மம்மாதான் இடையிடையே அம்மாவிடம் கேட்டா “உவளென்ன மாசம் முழுக்க வீடெல்லாம் திரியிறாள். இவளுக்கு எல்லாம் ஒழுங்கா வாறதோ“ என்று.

4 – ஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன். இற்றை வரைக்கும் எழுத்திலோ, படிப்பிலோ அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. ஒரு பத்திரிகை நிரூபராக, எடிட்டிராக இருக்கிறான்.

5 – பாடசாலையில் மிகவும் கெட்டித்தனமாக இருந்தேன். கணக்கிடும் வேகத்தை வைத்து எனக்கு ´கொம்பியூட்டர்´ என்ற பட்டப் பெயரை கணித ஆசிரியர்கள் தந்திருந்தார்கள். பரீட்சையில் Algebraவுக்கு மட்டுமல்லாது, Geomatryக்கும் 100புள்ளிகளையே பெறுவேன். இத்தனை இருந்தும், ஒரு ஆர்க்கிரெக் ஆக வரும் எனது எண்ணத்தை மட்டுமல்லாது, எனது அம்மா, அப்பாவின் கனவையும் காதலுக்காகத் தூக்கி எறிந்தேன். இந்த சாதனைக்காக நானே வருந்தியிருக்கிறேன். (இப்போது வருத்தம் இல்லை. பிள்ளைகளை சீராக வளர்த்து விட்டேன் என்ற பெருமைதான் இருக்கிறது.)

5 – சின்ன வயதிலேயே காதல் திருமணம். அம்மா, அப்பாவின் சம்மதத்தைப் பெற நிறையப் போராட வேண்டி இருந்தது. போராட்டம் என்பதை விட சகிப்புத்தன்மை அவசியமாயிருந்தது. பேச்சு, அடி.. எல்லாம் வாங்கினேன். என்றைக்குமே அடிக்காத அப்பாவிடம் கூட முதலும் கடைசியுமாக காதலுக்காக ஒரு அடி வாங்கினேன். அது வாழ்நாளுக்கும் மறக்காத அடி.

ஆனால் திருமணத்தின் போது தாலி வேண்டாமென்று சொல்லி விட்டேன். பெரிய புரட்சி செய்கிறேன் என்ற எண்ணம் எதுவும் இருக்கவில்லை. மனதால் ஒன்று பட்டிருக்கிறோம். தாலி என்னத்துக்கு என்ற உணர்வே இருந்தது. மஞ்சள் கயிறைக் கூட விரும்பவில்லை. அம்மா, அப்பாவும் பெரிய தடைகள் எதுவும் சொல்லவில்லை. இன்றை வரைக்கும் தாலி கட்டவில்லை.

6 – 17வயதிலேயே முதற் குழந்தையைப் பெற்றெடுத்தேன். இந்த வயதில் எப்படிப் பெற்றெடுக்கப் போகிறாள் என்று எங்களூர்க் கிழவிகள் அவலாய் மென்றார்கள். அக்கறையோடு கதைத்தார்கள். அம்மா தந்த புத்தகங்களையும், தைரியமான வார்த்தைகளையும் பெரிதும் நம்பினேன். எந்தப் பிரச்சனையுமின்றிய சுகப்பிரசவமே.

7 – பேனா பிடித்து எழுதத் தொடங்கிய காலத்திலேயே அப்பா தந்த டயறியில் எனது அன்றாட உணர்வுகளை எழுதத் தொடங்கினேன். அப்போதிருந்து நான் எதையாவது தினமும் எழுதிக் கொண்டிருந்தாலும், எனது முதற்கவிதையை 1975இல் எழுதினேன். அதை 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்தேன். உடனேயே அது ஒலிபரப்பானது. அன்றிலிருந்து ஊடகங்களுக்கு எனது ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினேன். அந்த நாட்களில் எனது கவிதையோ, கட்டுரையோ அன்றி விமர்சனமோ வெளி வராத நாட்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு எழுதித் தள்ளினேன். எனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. பாராட்டுக் கடிதங்கள் இந்தியாவிலிருந்து கூட வந்து குவிந்தன. இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய கடிதங்கள் வைத்திருந்தேன். (இந்திய இராணுவத்தினர் 1989இல் அவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்.)

8
இன்று இணையத்திலும் எழுதுகிறேன். எல்லோரையும் போல எனக்கெனச் சொந்தமாக இணையத்தளம், வலைப்பதிவு என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிள்ளைகளுக்கும் திருமணமாகி, பேரப்பிள்ளைககளுடனும் கொஞ்சுகிறேன். முடிந்தவரை தேவைப்படுகின்ற எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு, அமைதியாக வாழ வேண்டும் என்பதே விருப்பம்.

கடவுள் நம்பிக்கை இல்லை. சின்னவயதில் இருந்தது. அம்மாவோடு சேர்ந்து விரதங்களும் பிடிப்பேன். இப்போது இல்லை. கோயிலுக்கும் செல்வதில்லை. மற்றவர்களைத் துன்புறுத்தாமல், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது கோயிலுக்குச் செல்வதை விட நல்லது என நினைக்கிறேன். அதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தடுப்பதும் இல்லை. மதங்களைத் தூற்றுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் உள்ள மூடக் கொள்கைகளை முற்றிலுமாக வெறுக்கிறேன்.

இவையெல்லாம் பெரும் சாதனைகள் என்று நான் சொல்லவில்லை. இவைகளை விடப் பெரிதாக நான் எதையும் சாதிக்கவும் இல்லை.

சந்திரவதனா
12.7.2007

Post a Comment


நேச குமார் said...
 சந்திரவதனா,


படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

Thursday, July 12, 2007 3:14:00 pm   நேச குமார் said...

இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.எனது நண்பர் ஒருவர், இப்போது பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வெளியே வசித்து வருபவர், பேசிக்கொண்டிருந்தபோது உங்களது பதிவு ஒன்றில் பூசனிக்காய் சாப்பிட்டால் எதோ ஒரு உடல் உபாதை/நோய் குணமாகும் என்று எழுதியிருந்தீர்களாம், அவரும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார். பிரச்சினை சரியாகிவிட்டது. என்னிடம் ஆச்சர்யப்பட்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

அதே போல, உங்களது குழந்தைப்பேறு சம்பந்தமான பதிவுகளை முன்பு எனது தோழியொருவர் படித்து நிறைய தெரிந்து கொண்டேன் என்றார்.

தொடர்ந்து எங்களுக்காக எழுதிக்கொண்டிருங்கள்.

அன்புடன்,

நேச குமார்.

Thursday, July 12, 2007 3:18:00 pm    ஜெஸிலா said...

2-வது பிடித்திருந்தது. 3 வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறீர்கள், 12 வயதிலேயே அம்மாவுக்கு புத்திமதி. தாலி கட்டாத திருமணம். எட்டும் இனிப்பாக இருந்தது.

Thursday, July 12, 2007 3:40:00 pm    வவ்வால் said...

சந்திரவதனா!

அருமையான வெளிப்படையான , அலங்காரம் அற்ற ஒரு பதிவு!

Thursday, July 12, 2007 4:05:00 pm    மலைநாடான் said...

சந்திரவதனா!

நிறைவாக, இருந்தது.

Thursday, July 12, 2007 10:41:00 pm    G.Ragavan said...

சந்திரவதனா, நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கிறேன். நல்ல பதிவுதான். அருமை.நல்லதைத்தான் செய்திருக்கின்றீர்கள். கண்டிப்பாக நிம்மதியாக இருக்கலாம். :)

Thursday, July 12, 2007 11:18:00 pm    சுதர்சன்.கோபால் said...

படிக்க ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.அடிக்கடி எழுதுங்கள்...

உங்களை அழைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது...

பதிவுக்கு நன்றிகள்...

Friday, July 13, 2007 1:00:00 am    மணியன் said...

எண்ணத்தில் எழுந்த எதிர்ப்புகளுக்கு எழுத்தில் மட்டுமே வடிகாலைத் தேடாமல் செயலிலே காட்டியதற்கு பாராட்டுக்கள் !!
எளிமையான மிகவும் வெளிப்படையான பதிவு.வாழ்த்துக்கள் !!!

Friday, July 13, 2007 3:18:00 am   
 ramachandranusha said...

சந்திரா,
// மற்றவர்களைத் துன்புறுத்தாமல், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது கோயிலுக்குச் செல்வதை விட நல்லது என நினைக்கிறேன். அதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தடுப்பதும் இல்லை. மதங்களைத் தூற்றுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் உள்ள மூடக் கொள்கைகளை முற்றிலுமாக வெறுக்கிறேன்//
இதுதான் நானும் கடைப்பிடிக்கும் நாத்தீக வாதம் :-)

பதினாறு வயதில் நீங்கள் எழுப்பிய புரட்சிகுரலின் எதிரொலி எப்படி இருந்தது? தாலி வேண்டாம் என்றதற்கு
உங்க கணவன் மற்றும் புகுந்த வீட்டில் எப்படி ரியாக்ட் செய்தார்கள் கொஞ்சம் விவரமாய் நேரமிருக்கும்பொழுது சொல்லுங்களேன்.
அது என்ன பூசணி வைத்தியம் ?

Friday, July 13, 2007 8:16:00 am    Chandravathanaa said...

நன்றி உஷா.

தாலி விடயத்தில் எனது கணவரும் எனது கருத்தோடு ஒத்துப் போனார். பிரச்சனை இருக்கவில்லை.
ஆனால் மாமி அதாவது எனது கணவரின் தாயார்(தந்தை, எனது கணவருக்கு 7வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்) கொஞ்சம் சங்கடப் பட்டார். அவருக்கு அதில் திருப்தி இருக்கவில்லை. கணவரின் ஆண் சகோதரர்களுக்கும் அவ்வளவு பிரச்சனையாக அது தெரியவில்லை. கணவரின் அக்கா கொஞ்சம் அதிருப்திப் பட்டா.

பல வருடங்களாக மாமி "தாலி கட்டுங்கள். மரியாதை இல்லை." என்று சொல்லிக் கொண்டே இருந்தா.

1992இல், 6 வருடங்கள் கழித்து மாமியை நியூசிலாந்தில் மீண்டும் சந்தித்த போதும் தாலி போடச் சொன்னா. "தாலி இருந்தால்தான் பெண்ணுக்கு நல்லது" என்றும் "கணவனுக்கும் நல்லது" என்றும் சொன்னா. அதற்கு நான் "உங்கள் மகனை நான் நெஞ்சில் சுமக்கிறேன். அதற்கு தாலி தேவையில்லை. தாலியை மதிப்பதை விட அவரை நான் மதிக்கிறேன். அவரின் மேல் அன்பு வைப்பதற்கு தாலி சாட்சியாகத் தேவையில்லை..." என்று சிலவற்றை மென்மையான முறையில் சொன்னேன். அன்றிலிருந்து மாமி தாலி பற்றிக் கேட்பதே இல்லை. என்னோடு பிரியமாகவே இருக்கிறா.

எனது கொள்கைகளை எனது கணவரின் சகோதரர்களும் மதிக்கிறார்கள். முன்னரையும் விட இப்போது இன்னும் அதகிமாக மதிக்கிறார்கள்.

Friday, July 13, 2007 8:36:00 am    Nirmala said...

நன்றி சந்திரா... வாசிக்க நிறைவாக இருந்தது.

Friday, July 13, 2007 10:01:00 am    பத்மா அர்விந்த் said...

சந்திரவதனா
நிறைவான ஒரு பதிவு.

Friday, July 13, 2007 12:44:00 pm   Chandravathanaa said...

உஷா,
இதுதான் பூசணி வைத்தியம்.
http://maruththuvam.blogspot.com/2006/10/blog-post.html

Sunday, July 15, 2007 1:41:00 am  
அமுதன் said...

திருமதி.சந்திரவதனா அவர்களே,

வெகுவாகக் கவரும் அருமையான எழுத்துக்கள்.

ஈழத்தில் உள்ள வலைப்பதிவாளர்களை ஒன்றாகசேர்க்க வேண்டும் என்றும், உங்களைப் போன்றோரின்
கருத்துக்களையும்,எண்ணங்களையும் எழுத்தார்வமுள்ள நம்மவர்களுடன் பகிரவைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

அமுதன்

Thursday, July 19, 2007 9:37:00 am   Chandravathanaa said...

நன்றி அமுதன்,

உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்
என்னாலான ஒத்துழைப்புக்களை எப்போதும் தருவேன்

Friday, July 20, 2007 10:13:00 am   Anonymous said...

நிறைவான பதிவு சந்திரவதனா.

ஒரு கேள்வி.

வன்னியில் நடந்த சந்திப்பு உங்களின் முதன்மையான எட்டுக்குள் வராதா?
அல்லது சமகாலத்தைக் கருத்திற்கொண்டு தவிர்த்தீர்களா?

Friday, July 20, 2007 11:05:00 am   மாயா said...

நிறைவான ஒரு பதிவு

நன்றி

Sunday, August 05, 2007 11:51:00 am   காரூரன் said...

மிகவும் யதார்த்தமான கட்டுரை. ஆத்தியடியை சைக்கிளில் அடிக்கடி மாணவ பருவத்தில் கடந்த ஞாபங்கள். நான் புலொக்கிற்கு புதிது. ஆனால் தேடி தேடி வாசிப்பதுண்டு. உங்கள் எழுத்துநடை மிகவும் நன்றாக இருக்கின்றது. எனக்கு நேரம் கிடைக்கும் போது கிறுக்குவதுண்டு. வந்து வாசித்து குறை நிறை சொல்லுங்கோ.

நன்றிகள்

Monday, August 27, 2007 11:52:00 pm  

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை