மூக்கை அரிக்கும் வாசம் (ஈழப்போர்)

பத்தி/Column/Kolumn Zugriffe: 2945

சிறுவயதின் நினைவுப் புத்தகத்துப் பக்கங்களில் என்றுமே மறக்கமுடியா அந்நிகழ்வு. 1990களின் நடுப்பகுதி. இந்திய அமைதி காக்கும் படை நாட்டை விட்டுச் சென்றதால் தனிக்காட்டு ராஜாவாய் இலங்கை இராணுவம் கோலோச்ச ஆரம்பித்த ஆரம்பகாலப் பகுதி.

சூரியக்கதிர்கள் தென்னைவட்டுக்குள் விழுந்து மறையத்துடிக்கும் மாலை நேரம் எங்கோ தூரத்திலிருந்து வானூர்தி ஒன்றின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் கிராமத்துவானை நெருங்கிக் கொண்டிருந்தது.

திடீரென வேட்டுக்கள் தொடராய் வெடிக்கும் ஒலி. பதட்டத்தின் உச்ச நிலையில் வாழ்வது அன்றைய கிராமத்து ஜனங்களுக்கு அன்றாட இயல்பாயிருந்ததால், வீடுகளுக்குள்ளேயே இருப்பது தலைக்கு ஆபத்தானது என்பதால், அனைவரும் வீடுகளை விட்டு வீதிக்கு வந்திருந்தோம். இரு பக்கமுமான அயல் கிராமங்களை இணைப்பதில் எங்கள் வீதி பிரதானமானது, அதுவும் கிராமத்தின் மத்தியிலே எங்கள் குடியிருப்பு அமைந்திருந்ததும் தகவலறிதல்களுக்கு முக ஏதுவாய் அமந்ததெனலாம்.

இப்போது துப்பாக்கி வேட்டுக்கள் மிகத்தெளிவாயும் அண்மையாகவும் இன்னும் இன்னும் அண்மித்ததாகவும் தொடர்ந்தது. வானத்தில் வானூர்தியொன்று பாண்டிருப்புக் கிராமத்தின் உச்சியில் இருந்து எங்களை நோக்கி வருவதும் புலனானது.

இப்போது எங்கள் வீதியில் இருபது, இருபத்தைந்தை அண்மித்த கிராமவாசிகள் குழுமிக்கொண்டு நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நின்றோம். என்னால் இன்றும் அந்தக் குழுவில் நினைவுகூரக்கூடிய முகங்கள் முன்வீட்டு நைனாமுகம்மது, இப்றாலெப்பை அப்பா, கடைக்கார கரீம் மாமா, நாசர் அங்கிள் போன்றவர்கள். யூசுப் சேரும், உமர் அலியின் மாமா சம்சுதீனும் இருந்தார்களா என்பது தெளிவாய் நினைவில்லை.

வானூர்தி எங்களை நெருங்க நெருங்கத்தான் துப்பாக்கி சுடப்படுவதும் வானூர்தியிலிருந்துதான் என்பதும் புலனானது.

திடீரென பெரும் கூக்குரல்களோடு சிறுவர்களா, இளைஞர்களா எனப் பிரித்தறிந்துவிட முடியாத வயதிலும், தோற்றத்திலும் நான்கைவர் மேலாடைகளின்றியும், வெறுங்கால்களுடனும் மூச்சிரைத்துக்கொண்டு 'ஜங்க்சனாரின்' சந்தியில் திரும்பி எங்களை நோக்கியபடி ஓடிவந்தனர். வானூர்தியும் மேலிருந்து அவர்களைத்தான் துரத்திச் சுட்டுக்கொண்டே வந்தது. குழுமியிருந்த நாங்களும் இப்றாலெப்பையப்பாவின் வீட்டுக் காரை பேர்ந்த 'கொங்கிறீற் சிலப்பிற்கு' கீழே சிலரும், கரீம் மாமாவின் கடை ஒத்தாப்பின்கீழ் சிலரும், நிஸாயா தாத்தாவின் வீட்டு பக்கமுமாய் சிலரும் ஒன்றிக்கொண்டோம். ஓடிவந்தவர்கள் எங்களுடன் கலந்து விடவும் வழியில்லை. தலைக்கு மேலே தாழப்பறந்த வானூர்திக்கு யாரைச் சுடவேண்டுமென தெளிவாகத்தெரிந்திருந்தது என்பது வேட்டுக்களின் பயணப்பாதையிலேயே புரிந்துகொள்ள இயலுமாயிருந்தது. தவறிக்கூட துப்பாக்கிகள் எங்களை நோக்கித் திருப்பப் பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன்.

ஓடி வந்தவர்களும் புத்திசாலிகள் தான். ஒரே நேர்கோட்டில் ஓடாமல் நெளிந்தும் வளைந்துமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். எங்களை அண்மித்து தாண்டிப் போகும் தருணத்தில் அவர்களின் முகங்களை சில நொடிகளே மிக மிக அருகில் பார்க்கக் கிடைத்தது. அந்த முகங்களில் வழிந்த உணர்வுகளை எழுத்தில் வடித்துவிட முடியாது, "உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோடுதல்" எப்படி என்பதை நான் நேரிடையாகக் கண்களில் கண்ட தருணம் அது.

மரைக்கார் வீதிச் சந்தியை ஓடி வந்தவர்கள் அடைந்ததுதான் தாமதம் இருவர் எங்கள் வீட்டுப் பக்கமாய்த் திரும்பி அதில் ஒருவர் நூறு முகம்மது சேரின் வீட்டை நோக்கியோடவும் இன்னொருவர் திறந்திருந்த வெளிக்கதவிற்குள்ளால் எங்கள் வீட்டு வளவுக்குள்ளும் நுழைந்து கொள்ள, மற்றமூவரில் ஒருவர் 'பெத்தா மூத்தம்மாவின்' வீட்டுக் காணிக்குள் ஓடியும், மற்ற இருவரும் அப்துர் ரஹ்மான் (அத்தறமான்) கண்டக்டர் அவர்களின் கடை வரை ஓடி அமினுதீன் சேரின் வீட்டுப் பக்கம் திரும்பி விட்டார்கள், இந்தத் திடீர்த் திருப்பத்தை எதிர்பாராத வானூர்தி குழம்பி விட்டது, மிக மிகத் தாழ்வாய் கூரைகளைத் தொட்டுவிடும் உயரத்தில் பறந்து ஒரு வட்டமடித்தது அந்தோ பரிதாபம் எங்கள் காணிக்குள் நுழைந்தவர் அந்த யெஃகுப் பறைவையின் கண்களில் மீள மாட்டிக் கொண்டார், மீண்டும் வானூர்தி எங்கள் வீட்டுக் கூரை ஓடுகள் சிதறித்தெறிக்கும் வண்ணம் சுட்டுக்கொண்டே இருந்தது.

'கிளிங், கிளிங் என்ற சத்தத்தோடு வெற்றுத்தோட்டாக்கள் கீழே கொட்டின, மூக்கை அரிக்கும் வித்தியாசமானதொரு வாசம் நாசியை நிறைத்தது.

எங்கள் வீட்டுக் காணியோ நாற்புறமும் உயர்ந்த சுவர்களால் சூழப்பட்டது. உள்ளே சென்றவர் வெளியே வர முன்வாசல் ஒன்றே வழி, வானூர்தியின் தொடர்தாக்குதலுக்குள் அப்படிச் செய்வது பாரிய அபாயமன செயலேயாகிலும் அதை அவர் துணிந்து செய்து மீண்டும் வீதிக்கிறங்கி நூறுமுகம்மது சேரின் வீட்டுப்பக்கமாய் ஓடி தம்பிராசா தண்டயரின் வளவுக்குள்ளே நுழைந்து ஓடுவது வரை கண்ணுக்குத் தெரிந்தது. இரையைத் துரத்தும் பருந்தாய் வானூர்தியும் அவர் பின்னாலேயே சுட்டுக்கொண்டே பறந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் சத்தம் தேய்ந்துபோனது.

வானூர்திகளிலிருந்து மக்கள் கூடும்வேளை சுடுதல் என்பது அன்று அவ்வளவு அசாதாரணமான ஒன்றாய் இருக்கவில்லையென்பதும் அதனாலேயே பொதுமக்கள் கூடும் பொதுக்கட்டடங்களுக்கு மேலே கூரை ஓடுகளில் வெள்ளைப் பூச்சுக்களால் "School, Hospital, Mosque, Temple" எனப் பெயெரெழுதி அவற்றை அடையாளப்படுத்தி தேவையற்ற அசம்பாவிதங்களை மக்கள் தடுத்துக்கொண்டனர் என்பதையும் நான் பின்நாட்களில் அறிந்து கொண்டேன்.

வானூர்தி தூரத்தே சென்று மறைந்ததும் ஒதுங்கிடங்களில் இருந்து வெளியே வரத்துவங்கினோம், நாசர் மாமா வெற்றுச் சன்னங்களைப் பொறுக்கி எடுத்தார், நானும் ஒன்றை அவரிடம் இருந்து வாங்கிப் பார்த்தேன், பித்தளையில் உருவான நான்கங்குலக் கோது நெருப்புத்தணலாய்ச் சுட்டது, மெல்லிய வெண்புகை வெளியாகி வாசம் மூக்கை அரித்தது.

மறுநாட் காலை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தை அண்மித்த 'இருபது வீட்டுத்திட்ட' குடியிருப்பை அண்டிய பகுதியில் வானூர்தி தன் பசியைத் தீர்த்துக் கொண்டதாயும், கொல்லப்பட்டவரின் சடலம் படையினரால் காலையில்தான் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் நான் தெரிந்து கொண்டேன்.

வருடங்கள் பல கடந்தும் இன்றும் அந்த மூக்கை அரிக்கும் வாசம் நாசியில் தங்கிவிட்டதாய் ஒரு பிரம்மையில் மனதில் இனம்புரியா ஒரு வெண்புகை வெளியாகிச் சுழல்கிறது.

- Abu Noor
Quelle - Facebook

Drucken

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை