ஒரு இசையும் கதையும்

அவனைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகின்றன. வேலைக்கு நான் பயணிக்கும் அதே ரெயினில்தான் அவனும் பயணிக்கிறான். காலையில் ரெயினில் பயணிப்பவர்கள் பலர் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். சிலர் தினசரிப் பத்திரிகைகளிலோ அல்லது புத்தகங்களிலோ ஆழ்ந்து இருப்பார்கள். ஒருசிலர் காதுக்குள் வயர்களை மாட்டிக் கொண்டு கைத்தொலைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியான சூழலில் நான் அவனுடன் பேசிக் கொள்வதில்லை. பொதுவாகவே மெதுவாகப் பேசிப் பழக்கப்படாதவர்கள் நாங்கள். எங்களது உரையாடல்கள் அந்த அதிகாலையில் நித்திரைத் தூக்கத்தோடு பயணிப்பவர்களுக்கு எரிச்சல்களையும், உடல் நெளிவுகளையும் தந்து விடக் கூடாது என்பதற்காகவே ரெயினில் பயணிக்கும் பொழுது நான் அவனுடன் உரையாட விரும்புவதில்லை. அவனும் அதை புரிந்து கொண்டிருந்ததால், இருவரும் ரெயினில் சந்திக்கும் பொழுதுகளில் வெறும் நலன் விசாரிப்புகளிலேயே நிறுத்திக்கொள்வோம். ரெயினை விட்டு இறங்கிய பிறகு ஏதாவது என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி இருந்தால் நின்று உரையாடுவான். இல்லாவிட்டால், "அண்ணை வேலைக்கு நேரமாச்சு" என்று சொல்லி விட்டு தன் வழியே பறந்து விடுவான். எனது நண்பன் கணேசனின் நிறம்தான் அவனுக்கும் என்பதால் இங்கே அவனுக்கு கணேசன் என்று பெயரிடுகிறேன். நாட்டில் இருக்க முடியாமல் பெரும் செலவு செய்து 2014 இல் கணேசன் எப்படியோ யேர்மனிக்கு வந்து விட்டான்.

கணேசனது அரசியல் தஞ்சத்துக்கான விசாரணை இன்னமும் நடைபெறவில்லை. அவனது விண்ணப்பத்தை வாங்கி வைத்துக்கொண்டு, "போய் ஏதாவது வேலையைத் தேடிச் செய்" என்று அனுப்பி விட்டார்கள். தனது அரசியல் தஞ்சத்துக்கான விசாரணைக்கான அழைப்பிதழ் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இன்று நாளை என்று நாளை இரண்டு வருடங்களாக எண்ணிக் கொண்டிருக்கிறான். விசாரணை நடந்தால் தனது அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு மொழி தெரியாத நாட்டில் விழி பிதுங்கி இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கின்றான்.

அன்று ரெயினால் இறங்கி வேலைக்கு போக நான் எத்தனித்த போது, கணேசன் சற்று கலக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். வழமையாக "அண்ணை வேலைக்கு நேரமாச்சு" என்று சொல்லி விட்டு சிட்டாகப் பறந்து விடும் அவன் இன்று தயங்கி நிற்பதில் ஏதோ ஒரு காரணம் இருப்பது விளங்கியது. ஆனாலும் வேலைக்குப் போகும் என்னை இடைமறிக்க அவன் தயங்குகிறான் என்பதை அவனது முகம் காடிக்கொடுத்தது. நானே அவனிடம் பேச்சை ஆரம்பித்தேன்.

"வழக்கமாக அவசரமாக ஓடுவீர் இண்டைக்கு என்ன வேலைக்கு லீவோ?"
"ஓமண்ணை" "லீவ் எண்டால் என்னத்துக்கு ரெயினிலை இவ்வளவு தூரம் வந்தனீர்?"
"ரெயினிலை கதைக்கிறது கஸ்ரம். நீங்கள் அவசரமாக வேலைக்குப் போகோணுமோ?"

வேலைக்கு அவசரமாகப் போவதை விட வேலைக்கு நேரத்துக்குப் போவதையே பல வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகிறேன். இன்று கணேசனின் முகத்தில் இருந்த கலக்கம் என்னைத் தடுத்து விட்டது.

"அண்ணை ஒரு பிரச்சினையிலை மாட்டுப்பட்டிருக்கிறன் என்ன செய்யிறதெண்டு தெரியேலை" கணேசனது பேச்சில் இருந்து அவன் என்னிடம் இருந்து ஆலோசனையையோ அல்லது உதவியையோ எதிர்பார்க்கிறான் என்பது தெரிந்தது.

அவன் தனது கதையின் ஆரம்பத்தை சொல்லத் தொடங்கினான். இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான முழுத்தகமைகளும் அவனிடம் இருந்தன என்பது அவனது பேச்சில் இருந்து தெரிய வந்தது. இன்று கணேசன் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முற்பட்ட போது, அவனது கணக்கில் பணம் இல்லை என்றிருக்கிறார்கள். ஆனால் தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதாக கணேசன் அடம் பிடித்த பொழுது, அந்த மாதத்திற்கான அவனது வங்கிக் கணக்கை பிரதி எடுத்து அவனது கையில் கொடுத்து வீட்டுக்குப் போய் ஆறுதலாக இருந்து உனது கணக்கைப் பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தனது வங்கிக் கணக்கைப் பார்த்த பொழுதுதான் கணேசனுக்கு தலை சுற்றி இருக்கிறது.

Amazon நிறுவனம் அவனது வங்கியில் இருந்து 390 யூரோக்களை எடுத்திருந்தது. இத்தனைக்கும் Amazon நிறுவனத்தில் கணேசன் எந்தப் பொருட்களும் வாங்குவதேயில்லை. இது விடயமாக வங்கியில் கதைப்பதற்கு கணேசனுக்கு மொழி ஒரு தடங்கலாக இருந்திருக்கிறது. இப்பொழுது அவன் என்னை சந்தித்து கதைக்க வந்த காரணம் இதுதான்.

Amazon நிறுவனத்தால் ஒரு தடவைதான் பணம் எடுக்கப்பட்டதா? அல்லது முன்னரும் இப்படி நடந்திருக்கிறதா? என்று முதலில் அறிய வேண்டும், வீட்டுக்குப் போய் அவனது வங்கியின் மாதாந்த கணக்குகளை தேடி எடுத்து சரி பார்த்துவிட்டு எனக்கு அறிவிக்கச் சொன்னேன். "சரி அண்ணை" என்று சொல்லிவிட்டு மீண்டும் ரெயின் ஏறிப் போய்விட்டான்.

அன்று மதியம் நான் வேலையில் இருந்த பொழுது கணேசனின் அழைப்பு வந்தது. "அண்ணை கனதரம் காசு எடுத்திருக்கினம். எல்லாமா கூட்டிப் பாத்தால் 2472 யூரோக்கள் வருகுது" என்றான். தனது வங்கிக் கணக்கையே பார்க்க முடியாதளவுக்கு நாள் முழுதும் கணேசன் ஓடியோடி வேலை செய்து கொண்டிருக்கிறான். அப்படி ஒரு நிலையில் கணேசன் மட்டுமல்ல யேர்மனியில் பல தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். யேர்மனிக்கு வருவதற்கு வாங்கிய கடன், ஊரில் தங்கைகளை கரை சேர்க்கும் தமையனின் கடன் ஒரு பிள்ளையாக பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடன் என்று அவன் முன்னால் நிறையவே கடன்கள் குவிந்திருக்க நித்திரைக்கே நேரமில்லாது இருப்பவனுக்கு வங்கிக் கணக்கை பார்க்க நேரம் எங்கே இருக்கப் போகிறது?

அடுத்தநாள் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டேன். கணேசனுக்கு ஒருநாள் உழைப்பு இல்லாமல் போனது. அவனது வங்கியில் பெற வேண்டிய தகவல்களை எடுத்துக்கொண்டு பொலீஸில் இந்த விடயத்தை முறைப்பாடு செய்து கொண்டோம். பொருள் எந்த முகவரியில் விநியோகிக்கப் பட்டிருந்தது என்ற தகவல் அங்கிருந்து கிடைத்தது. முகவரியைப் பார்த்த உடன் கணேசன் சொன்னான், "இங்கைதானண்ணை நான் ஆறு மாசங்களுக்கு கிட்ட இருந்தனான்."

நான் பேசாமலேயே நின்றேன். கணேசனே தொடர்ந்தான். "யேர்மனிக்கு வந்த புதுசிலை இந்த அடரஸ்ஸிலை இருக்கிற வீட்டிலைதான் தங்கி இருந்தனான். ஊர்க்காரர். எனக்கு பாங்கிலை எக்கவுண்ட் எல்லாம் திறந்து தந்தவையள்..." கணேசன் சொல்லிக் கொண்டே போனான் எல்லாவற்றையும் என் காதுகளில் நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

இனி இந்தப் பிரச்சனையை பொலிஸ் பார்த்துக் கொள்ளும். கணேசனை அமைதிப்படுத்தி விட்டு அவரவர் வேலையை கவனிக்கச் சென்று விட்டோம். மறுநாள் பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி வந்தது. கணேசனை அழைத்துக் கொண்டு அங்கே போனேன். "உங்களுடைய நாட்டுக்காரர்தான். ஆனால் தான் இதைச் செய்யவில்லை, தனது 15 வயது மகன் விளையாட்டாகச் செய்து விட்டான் என்று அவர் சொல்கிறார். ஆனாலும் அமற்ஸோன் நிறுவனத்தில் வாங்கிய பொருட்கள் எல்லாம் 15 வயதுச் சிறுவனுக்கு அவசியமில்லாதவை. எல்லாமே பெரியவர்கள் பாவிக்கக் கூடியவை. நாங்கள் அதிகாரபூர்வமாக நடவடிக்கை எடுத்தால், அந்தப் பையனது மேற்படிப்புக்கும், வேலைக்கும் இந்தக் குற்றச் செயல் சான்றிதழ் நாளைக்கு இடையூறாக இருக்கலாம். அடுத்த பத்து வருடங்களுக்கு பொலீஸ் பதிவில் இது இருக்கும்" பொலீஸ் அலுவலர் தனது அப்பிப்பிராயத்தையும் சேர்த்துச் சொன்னார்.

"அண்ணை இப்ப நான் சட்ட நடவடிக்கை எடுத்தால் அந்தப் பெடியனிண்டை வாழ்க்கை பிழைச்சுப் போயிடலாம்"

தனது மகனின் எதிர்காலத்தை விட தான் தப்பிக்க நினைக்கும் ஒரு தந்தையை எண்ணிப் பார்த்தேன். கணேசனது மதிப்பு என்னில் உயர்ந்து இருந்தது. "உங்களது பணத்தை அடுத்த ஆறு மாத காலத்திற்குள் சிறிது சிறிதாகவோ, முழுவதுமாகவோ தந்து விடுவதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படி நடக்காத பட்சத்தில் நீங்கள் எங்களிடம் வந்து மீண்டும் முறையிடலாம் என அலுவலகர் சொன்னார்" ஆறுமாதங்கள் காத்திருப்பதில் தனக்குப் பிரச்சினை இல்லை என்று கணேசன் சொன்னான்.

அடுத்தநாள் வேலைக்குப் பயணிக்கும் பொழுது ரெயினில் கணேசனைக் கண்டேன். அவனைக் கண்டவுடன் எனக்கு இரண்டு சினிமாப் பாடல்கள் நினைவுக்கு வந்ததன. தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தில் இருந்து செளந்தரராஜன் பாடிய "போயும் போயும் மனிதனுக்கிந்தப் புத்தியைக் கொடுத்தானே..." என்ற பாடல் ஒன்று, மற்றது நீதிக்கு தலை வணங்கு திரைப்படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே.." என்ற பாடல். ரெயினில் நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு இணையத்தில் அந்த இரண்டு பாடல்களையும் தேடி எடுத்து கேட்டுப் பார்த்தேன். கவிஞர்கள் அனுபவித்துத்தான் அந்தப் பாடல்களை எழுதினார்களோ என்ற எண்ணம் வந்தது.

ஆழ்வாப்பிள்ளை
19.11.2016

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை