ஆறுமுகம் இது யாரு முகம்?

விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.

வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன.

யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறுபட்டு இருந்தது. அன்று, நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க்குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்று
ம் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது.

புது இடம்,
புதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன்.

பகலில் செய்த வேலை அலுப்பில் அன்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கனவிலா நினைவிலா என்று நான் உணரும் முன்னரே எனது மனைவி என்னை உலுப்பிய வேகத்தில் எழுந்து விட்டேன். என் வீட்டுக் கதவுதான் தட்டப் பட்டுக் கொண்டிருந்தது. நித்திரைக் குழப்பம், அத்தோடு சேர்ந்து விட்ட பயம் இரண்டும் இணைந்து என்னைச் சிறிது நேரம் இயக்கம் இல்லாமல் செய்து விட்டிருந்தன. என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் நான் இருந்த பொழுது, "கதவு உடைஞ்சிடும் போல இருக்கு" என்ற எனது மனைவியின் குரல், "யோவ் எதாவது செய்" என்று என்னை எச்சரித்தது.

"mach die Tür auf " (கதவைத் திற) என்று வெளியே இருந்து கர்ஜித்த குரல் மரக்கதவினூடாக
ப் புகுந்து காதுக்குள் நுளைந்து செவிப்பறையை உடைத்துக் கொண்டிருந்தது. வெளியே எத்தனை பேர்? ஒருவனா? அல்லது ஒரு குழுவா? நான் தனி ஒருவனாக எப்படி சமாளிக்கப் போகிறேன்? என்று கணக்குப் போட்டுப் பார்க்க பதட்டம் எனக்கு இன்னும் அதிகமாகிப் போனது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வருவதை எதிர் கொள்ளத்தானே வேண்டும். மெதுவாக என்னை நானே தயார் செய்து கொள்ளத் தொடங்கினேன். முதற் கட்டமாக பொலிஸுக்கு அறிவிக்கும்படி மனைவியிடம் சொல்லி விட்டு, பிள்ளைகள் எழுந்து விடாமல் இருக்கவும் அவர்களது பாதுகாப்பைக் கருதியும் அவர்களது அறைக்கதவுகளைச் சாத்தி வைத்தேன். கட்டில் மெத்தையைத் தாங்கும் சட்டம் ஒன்றினை எடுத்து வந்து கதவின் பக்கமாக ஒளித்து வைத்தேன். இப்பொழுது என் நினைவுக்கு வந்தவர் சாண்டோ மணியம் மாஸ்ரர்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் எனக்கு
த் தற்பாதுகாப்பிற்கான பயிற்சி தேவைப்பட்டது. சோதி அண்ணனிடம் கராட்டி பயிற்சி எடுக்கலாம் என்று நான் எண்ணி இருந்த வேளையில் ஒருநாள் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வீரவாகு கிட்டங்கிக்குள் அதிரடிப் படை புகுந்து சோதி அண்ணனையும், பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்களையும் அள்ளிக் கொண்டு போனது. அதன் பிறகுதான் சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சிகள் பெற ஆரம்பித்தேன். நான் பயிற்சிக்குப் போவது எப்படியோ எனது நட்பு வட்டத்துக்குள் கசிந்து விட்டது. "பாத்து மச்சான். கண்டபடி எக்சசைஸ் செய்யாதை. பிறகு எலும்பெல்லாம் மசில்ஸ் வைக்கப் போவுது" என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.

அன்று சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் நான் பெற்ற பயிற்சியை இப்பொழுது நினைத்துப் பார்த்தேன். "உன்னை விடப் பலசாலியான ஒருவன் உன்னை வேகமாகத் தாக்க வரும் பொழுது இடது
பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ சற்று ஒதுங்கி அவனது கையைப் பிடித்து, அவனது வேகத்தோடு உனது பலத்தையும் சேர்த்து இழுத்து கீழே விழுத்தி விட வேண்டும். பின்னர் அவனது முதுகில் இரண்டு முழங்கால்களால் அழுத்தி அமர்ந்து கொண்டு அவனது கழுத்தை நாடியோடு சேர்த்து மேல் நோக்கி இழுத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் திமிறும் பொழுதோ அல்லது உன்னை விழுத்தி எழும்ப முயற்சிக்கும் பொழுதோ அவனது கழுத்தை மேல் நோக்கி இன்னும் பலம் கொண்டு இழுக்க வேண்டும்" சாண்டோ மணியம் மாஸ்ரர் சொல்லித் தந்து, விளையாட்டின் போது பயின்றதை இப்பொழுது நிஜத்தில் செய்யப் போகிறேன்.

கதவு உடைந்து இப்பொழுது ஓட்டை விழுந்து விட்டது. ஓட்டையினூடாகப் பார்த்தேன். வெளியே ஒரேயொரு முகம்தான் தெரிந்தது. அது எனக்கு
க் கொஞ்சம் தைரியத்தைத் தந்தது. ஆனால் நிலமைதான் அந்தப் பக்கம் தீவிரமாகப் போயிருந்தது. என்னைக் கண்டவுடன் கதவை உதைக்கும் அவனது வேகம் இன்னும் அதிகரித்திருந்தது. எவ்வளவு நேரம்தான் உதைகளைத் தாங்குவது? கதவு தன் வாழ்வை முடித்துக் கொண்டு வாய் பிழந்து நின்றது. சிங்கத்தை எதிர்கொள்ள சிறு எலி வீட்டுக்குள்ளே தயாராக நின்றது.

என்ன ஆச்சரியம். முன்பு சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சி பெற்றது அப்படியே எனக்குக் கைகூடி வந்தது. நான் இழுத்து அவனைத் தள்ளி விட்ட வேகத்தில் அவன் கொரிடோரில் விழுந்து விட்டான். விழுந்தவனைப்ப பார்த்தேன். எனக்கு வசதியாக முதுகைக் காட்டிக் கொண்டு தரையில் குப்புறப் படுத்திருந்தான். சாண்டோ மணியம் மாஸ்ரரின் அடுத்த பயிற்சியும் சரியாக வந்திருந்தது. பொலிஸ் வரும் வரை அவனை இப்படியே தரையோடு அழுத்திப் பிடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்த்தது.

இதற்குள் எனது மூத்தமகனின் நித்திரையை எனது மனைவி கலைத்திருக்க வேண்டும். நித்திரைக் கலக்கத்தில் தனது அறை வாசலில் வந்து நின்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஓடிச் சென்று பொருட்கள் வைக்கும் அறையைத் திறந்து கூட்டுத்தடி எடுத்து வந்து யேர்மன்காரனின் பின் பக்கம் அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்த அடிகளில் எழுபத்தைந்து வீதமானவை தரையிலே விழுந்தன. தரையில் பட்டு கூட்டுத்தடி உடைந்து போயிற்று. மீண்டும் ஓடிப் போய் அடுத்த கூட்டுத்தடியை எடுத்து வந்து மீண்டும் தரைக்கும், யேர்மன்காரனுக்கும் அடிக்க
த் தொடங்கினான். எழுந்து, அவனைத் தடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். அன்றைய காலத்தில் எனக்கிருந்த பொருளாதரா நிலையில் ஒரு கூட்டுத்தடி வாங்கவே யோசிக்க வேண்டி இருந்தது. மலிவாகப் போட்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கூட்டுத்தடிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். அந்த இரண்டு கூட்டுத்தடிகளும் சிதிலமாக தரையில் இப்போ சிதறிக் கிடந்தன. அவைகளைக் கூட்டி அள்ள இன்னும் ஒரு கூட்டுத்தடி வாங்க வேண்டிய நிலை எனக்கு வந்திருந்தது. கூட்டுத்தடிகள் முறிந்ததால் வேறு ஏதாவது கையில் சிக்காதா என என் மகன் அங்கும் இங்குமாகத் தேடிக் கொண்டிருந்தான். கதவுக்குப் பக்கத்தில் நான் ஒழித்து வைத்த கட்டில் சட்டம் அவனது கண்ணில் பட்டு விடுமோ என்ற பயம் ஒரு கணம் எனக்கு வந்து போனது. அவனது கையில் ஏதும் கிடைப்பதற்கு முன்னர் நல்ல வேளையாக பொலிஸ் வந்து விட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள்.

பொலீஸைக் கண்டதும் நான் எழுந்து கொண்டேன். யேர்மன்காரனால் எழுந்து கொள்ள முடியவில்லை. தரையிலே அப்படியே படுத்திருந்தான். இரண்டு பொலிஸும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தினார்கள்.

"Ich habe in die Hose gemacht" (காற்சட்டையோடு போயிற்றேன்) என்று பரிதாபமாக பொலீஸைப் பாரத்துச் சொன்னான். இரண்டு போலிஸ்காரர்கள் முகத்திலும் சிரிப்பு வந்து போனது. மரண பயம் வரும் போது உடல் கழிவுகளை வெளியற்றி விடும் என எனக்குத் தெரியும். அந்தப் பயம் யேர்மன்காரனுக்கு வந்திருந்தது தெரிந்தது. ஒரு பொலிஸ் அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்துப் போனார். மற்றையவர் நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்டு
க் குறிப்பெடுத்துக் கொண்டார்.

வெளியே போயிருந்த பொலிஸ் தனியாகத் திரும்பி வந்தார். வந்தவர் எனக்கு ஒரு பிரசங்கமே வைத்தார். "அநேகமான யேர்மனிய ஆண்கள் வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் களிப்பார்கள். அதற்கு Herren Abend (ஆண்களின் மாலைப்பொழுது) என்று சொல்வார்கள். வார விடுமுறை வருவதால் வெள்ளி மாலை ஆண்கள் தங்கள் வேலைக்களைப்பை மறந்து மகிழ்ந்திருக்க Bar இல் ஒன்று கூடி பியர் அருந்தி அளவளாவி
க் களித்திருப்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை அதுதான் அவர் அதிகமாகக் குடித்திருக்கிறார். அவர் வசிப்பதும் நீங்கள் இருக்கும் இதே குடியிருப்புத்தான். மேல் மாடியில் குடும்பத்தோடு வசிக்கிறார். போதையில் வந்ததால் தன் வீடு என்று நினைத்து உங்கள் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார். உள்ளே ஆள் அரவம் கேட்டும் கதவு திறக்காததால் சினம் கொண்டு பலமாகத் தட்டி இருக்கிறார். அத்தோடு ஒரு ஆண் குரலும் உள்ளிருந்து கேட்டதால், தான் "பாரு"க்குப் போயிருந்த சமயம் பாரத்து தனது மனைவி வேறு ஒருவரோடு உள்ளே இருப்பதாகத் தவறாக நினைத்து கதவை உதைக்க ஆரம்பித்திருக்கிறார். கதவில் ஓட்டை விழுந்த பொழுது அதனூடாக உள்ளே உங்களைக் கண்டதால் தன் வீட்டில் ஒரு ஆண் இருப்பது உறுதியாகி, கோபத்தில் கதவை முழுவதுமாக உடைத்து உள்ளே வந்திருக்கின்றார். மற்றும்படி உங்களைத் தாக்கவோ அல்லது வேறு நோக்கம் கொண்டோ அவர் உங்கள் வீட்டுக் கதவை உடைக்கவில்லை. உங்களுக்கான இழப்புகளை நாளை காலையில் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இல்லை இதைக் குற்றமாகப் பதியத்தான் வேண்டுமானால் சொல்லுங்கள் எழுதிக் கொள்கிறோம்" என்றார்.

"இனி ஒரு தடவை இந்த மாதிரியான பிரச்சனை இவரால் வராது என்றால் எனக்குச் சரிதான்" என்றேன். "நல்லது" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளியே நின்ற யேர்மன்காரனை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். உடைந்திருந்த கதவை தற்காலிகமாக ஒரு பலகை வைத்து மூடி அன்றைய இரவு தூங்கா இரவாகக் கழித்தோம். மறுநாள் காலையிலேயே புதுக்கதவு வந்திருந்தது. உடனேயே பொருத்தி விட்டும் போனார்கள், மதியம் அளவில் அழைப்பு மணி அடித்தது, திறந்து பார்த்தால் பூங்கொத்தோடு புன்னகை தவழ யேர்மன்காரன் நின்று கோண்டிருந்தான். "மன்னித்துக் கொள். மதுபோதையில் நடந்து விட்டது. உனது வீட்டுக் கதவுக்கான செலவை நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பொருத்தி இருக்கும் இந்தக் கதவு முன்னர் இருந்ததைவிட பலமானது" என்றான்.

"உதைத்தால் உடையுமா, மாட்டாதா என்று இன்னுமொரு தடவை வந்து முயற்சிப்பாயா?" என்று நான் கேட்ட பொழுது சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி மறுத்தான். நடந்து போன நிகழ்வை வழக்கென்று பதியாமல், விடயத்தைச் சுமூகமாக நான் முடித்தமைக்கு மீண்டும் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டுப் போனான்.

இது நடந்து இப்பொழுது முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்றுள்ள நிலமையில் வெள்ளிக்கிழமைகளில் Herrenabend என்று ஒன்று இருக்கின்றதா என்று எனக்குத் தெறியவில்லை. அன்று கிழக்கு - மேற்கு என
ப் பிரிந்திருந்த யேர்மனி இப்பொழுது ஒரு குடைக்குள் பயணிக்கிறது. நான் யேர்மனிக்கு வந்த காலத்தில் யேர்மனியர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்று அகதிகளாக வந்தவர்கள் பயம் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அகதிகளாக வந்தவர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்று யேர்மனியர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் எனது இளைய மகனின் திருமணத்தின் பின் பெண் வீட்டார் தந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தோம். மகனின் மாமனார் ஒரு பொலிஸ் அதிகாரி. அதிகாரிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாக என்னுடன் அகதிகள் பிரச்சனை பற்றி உரையாடினார். விருந்து இருபக்கமும் இருக்கின்றதுதானே? இப்பொழுது எங்களின் முறை. "நாங்கள் உங்களை விருந்துக்கு அழைப்பதற்கான திகதியை உங்களுக்கு வசதியான நாளைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்" என்றேன். சற்று ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டுக் கேட்டார், "பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு
க் கமரா பூட்டி இருக்கிறீங்கள்தானே?“

யேர்மனியில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு வீடு உடைக்கப்பட்டு, களவாடப் படுகிறது என்ற தகவலை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதால் நாட்டில் நடக்கும் களவுப் பிரச்சனையை மனதில் வைத்து
க் கேட்கிறார் என்று நினைத்து, 'கமரா பொருத்தி இருக்கிறேன்" என்றேன். என் பதிலைக் கேட்டு அவரது முகத்தில் சிரிப்பு வந்து போனது. நான் நினைத்தது போல் இல்லாமல் அவரது கேள்விக்கான அர்த்தம் அடுத்து வந்த அவரது வார்த்தைகளில் புரிந்தது.

"ஏன் கேட்கிறேன் என்றால் முப்பது வருசத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று இன்னும் என் கண்களில் நிற்கிறது. எனக்கும் அது போல் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே கேட்கிறேன். முப்பது வருசங்களுக்கு முன்பு, அதுதான் ஒருத்தன் கதவை உடைத்து உள்ளே வர நீங்கள் அவனை நிலத்தில் வீழ்த்தி அவன் முதுகில் ஏறி இருந்தது..., " சொல்ல வந்ததை இடை நிறுத்தி விட்டு என்னைப் பாரத்தார்.

"அது எப்படி உங்களுக்கு தெரியும்?“

"முப்பது வருடங்களுக்கு முன் நான் ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர். அன்று உங்கள் வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸில் நானும் ஒருவன்"

"ஆச்சரியமாக இருக்கிறதே, நாங்கள் முன்னரே சந்தித்துக் கொண்டவர்களா?"

சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் , "எதற்கும் பெல் அடிக்கிறேன் கமராவில் பார்த்துவிட்டு கதவைத் திறவுங்களேன்"

வாழ்க்கையில் பின்னாளில் சந்தித்துக் கொள்ளப் போகும் ஒருவரை எங்களை அறியாமல் முன்னரே எதேச்சையாக சந்தித்துக் கொள்கிறோம். மீண்டும் அந்த முகம் கண்ணெதிரே வந்து நின்று. "என்னைத் தெரியலையா?" என்று கேடகும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- ஆழ்வாப்பிள்ளை
15.09.2016

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை