சந்தி வாடகைக்கார்

இராமநாதனும் நடேசனும் நல்ல நண்பர்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது வல்லிபுர ஆழ்வாரை தரிசிக்கப் போன இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியிருந்தது.

எங்கள் ஊரின் சங்கக்கடை முகாமையாளராக இருந்தவர்தான் இராமநாதன். சங்கக்கடை முகாமையாளராக இருந்த பொழுதிலும் மேலதிக வருமானத்திற்காக கிராமக்கோட்டுச் சந்தியில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அவரது கடையில் நான்கு சைக்கிள்கள் வாடகைக்கும் இருந்தன. இலவசம் என்ற சொல்லை அவர் அறவே மறந்து விட்டிருந்தார் என்றே சொல்லலாம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற பேதமும் அவரிடம் கிடையாது. அவரது கடைக்குப்போய் சைக்கிளுக்கு காற்று அடித்தால் அது யாரானாலும் ஐந்து சதம் அறவிட்டு விடுவார். "காசு கொண்டு வர மறந்து போனேன் பிறகுதாறன்" என்று சொன்னால், "சைக்கிளை வைச்சிட்டு வீட்டை போய் காசை எடுத்திட்டு வா" என்று அவரிடமிருந்து பதில் வரும். அவரது கடைக்குப் பக்கத்தில் இருந்த தாமோதரத்தாரின் தேத்தண்ணிக்கடையில் அவர் தேனீர் வாங்கிக் குடித்ததைக் கூட கண்டவர்கள் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

நடேசன் சொந்தமாக ஒரு ஹில்மன் கார் (Hillman car) வைத்திருந்தார். காலையில் மாணவிகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் வீட்டில் திரும்ப கொண்டு வந்து சேர்ப்பதும் அவரது வேலை. ஒரு மாணவிக்கு மாதாந்தம் பத்து ரூபா முதல் பதினைந்து ரூபாவரை அவரவர்கள் வசதிக்கேற்ப கட்டணம் வாங்கிக் கொள்வார். அந்தச் சிறிய ஹில்மன் காரில் ஒருதடவைக்கு குறைந்த பட்சம் பன்னிரண்டு மாணவிகளை உள்ளே அடைத்து காரை ஓட்டிச் செல்வார். வெளியில் இருந்து பார்த்தால் சிலவேளைகளில் கார் ஓட்டும் நடேசனைத் தெரியாது அந்தளவுக்கு உள்ளே நெருக்கமாக இருக்கும். கோணல்மாணலாக உள்ளே அடைந்திருக்கும் மாணவிகளின் தலைகள், அவர்களது வெள்ளை ஆடைகள், கறுத்த றிபனால் மடித்துக் கட்டிய பின்னல்கள்… தான் தெரியும். அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது மாணவிகளை இப்படி பனங்கிழங்குகள் போல அடுக்கி கசங்க விடுகிறாரே என்று இளசுகளான எங்கள் மனங்கள் கசங்கிப்போகும்.

பாடசாலைக்குப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களில் நடேசனின் கார் வாடகைக்குப் போய்விடும். எதுவித ஓட்டமும் இல்லை என்றால் நடேசன் வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க வந்து விடுவார்.

வல்லிபுரக்கோவிலுக்குப் போகும் வீதியில் இபோச (இலங்கை போக்குவரத்து கூட்டுஸ்தாபனம்) நாகர்கோவிலுக்கு ஒன்றும், தாளையடி/செம்பியன்பற்றுக்கு ஒன்றுமாக இரண்டு பஸ்களை போக்குவரத்துக்கு விட்டிருந்தது. அதுவும் மணிக்கு ஒரு பஸ்தான். பஸ் போகும் நேரம் தவிர மற்றும்படி அந்த வீதி எப்பொழுதும் அமைதியாக வெறிச்சோடி இருக்கும். அந்த வீதியில்தான் இராமநாதனுக்கு நடேசன் கார் ஓட்டப் பழக்கிக் கொடுத்தார்.

சைக்கிள் கடை, சங்கக்கடை என்று சிறுகச் சிறுக சேர்த்த காசு மற்றும் கடைகளில் தேனீர் கூட வாங்கிக் குடிக்காமல் சேமித்த காசு என கொஞ்சப் பணம் இராமநாதனிடம் இருந்தது. காரும் ஓட்டப் பழகியாயிற்று. இனி ஒரு காருக்கு சொந்தக்காரனாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணம் இராமநாதனுக்கு வர, அந்த அவரது எண்ணத்துக்கு உதவ நடேசன் முன் வந்தார். நடேசனின் மாமன் ஒருவர் கார் திருத்தும் நிறுவனம் ஒன்றை மருதடிச் சந்தியில் நடத்திக் கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து சொந்தமாகக் கார் வாங்கும்வரை மாமனாரின் நிறுவனத்தில்தான் நடேசன் வேலை செய்தார். அதனால் கார் திருத்துவதில் நடேசனுக்கு நல்ல அனுபவம் இருந்தது. எந்தக் காரானாலும், அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டாலும் மீண்டும் கச்சிதமாக பொருத்தி விடும் ஆற்றலும் நடேசனுக்கு இருந்தது. நடேசனின் திறமையை இராமநாதன் நன்கு அறிந்து வைத்திருந்ததால் தனக்கான கார் வாங்கும் பொறுப்பை நடேசனிடமே விட்டு விட்டார்.

தனது நண்பன் இராமநாதனுக்காக நடேசன் தெரிவு செய்தது தன்னிடம் உள்ளது போன்ற ஹில்மன் கார் ஒன்றைத்தான். அந்தக் கார்தான் கிராமக்கோட்டுச் சந்தியில் முதன் முதலாக நின்ற வாடகைக்கார்.

இராமநாதனது கார் எப்பொழுதும் 'பளிச்' என்றிருக்கும். நண்பர்களின் கார்கள் வாடகைக்குப் போகாத மாலை நேரங்களில் இருவரும் வல்லிபுர ஆழ்வாரிடம் போய் விடுவார்கள். அங்கே குளத்தில் தங்கள் கார்களைக் கழுவி பின்னர் கேணியில் சுத்தமான தண்ணீர் எடுத்து மீண்டும் கார்களை புனித நீராட்டி, ஆழ்வார் நாமமும் போட்டு அழகு படுத்துவார்கள். சிலவேளைகளில் தங்களது கார்களை கிராமக்கோட்டுச் சந்தியிலே நிறுத்தி வைத்து விட்டு, சைக்கிள் கடைக்கு முன்னால் இரண்டு கதிரைகளைப் போட்டு அதில் பெருமையாக உட்கார்ந்திருப்பார்கள்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. நடேசனது காருக்கு நோய் ஒன்று வந்து சேர்ந்தது. நன்றாக ஓடிக்கொண்டிருந்த கார் 'மக்கர்' பண்ணத் தொடங்கியது. ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் எதையோ நினைத்துவிட்டு திடீரென வீதியிலே நின்றுவிடும். பிறகு நாலுபேர் சேரந்து தள்ளிவிட்டால்தான் கார் மறுபடி ஓட ஆரம்பிக்கும். பாடசாலை மாணவிகளோடு நடேசனது கார் வீதியிலே நின்று போனால் இளைஞர்களான எங்களுக்கு சப்பரத் திருவிழா. அம்பிகைகள் எல்லாரும் காரை விட்டு இறங்கி தெருவில் நின்று காட்சி தருவார்கள். நடேசன் எங்களை உதவி என்று கேட்கவே தேவையில்லை. அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நாங்கள் ஓடிப்போய் காரைத் தள்ளி விடுவோம். சிலவேளைகளில் நேரம் எடுத்து மெதுவாகத் தள்ளுவோம். காருக்குள்ளே ஸ்ரேரிங்கை பிடித்திருக்கும் நடேசனது முகம் எரிச்சலைக் காட்டினால் மரியாதை நிமித்தமாக வேகமாகத் தள்ளி விடுவோம்.

பாடசாலைக்குப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் போது கார் நின்று விட்டால் தள்ளிவிட நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருந்தோம். ஆனால் மற்றைய நேரங்களில் குறிப்பாக சினிமா இரண்டாவது காட்சியின் போது நடேசன் பலத்த சிரமங்களுக்கு ஆளானார். நடேசனது சிரமத்தைக் குறைக்க அவரது ஆத்ம நண்பன் இராமநாதன் முன் வந்தார். தனது காரை மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாடகையாக நடேசனுக்குக் கொடுத்தார். நடேசனுக்கு அது நிறைந்த வசதியாக இருந்தது. மாமனாரின் நிறுவனத்தில் தனது காரை திருத்த வேலைக்கு விட்டு விட்டு இராமநாதனின் காரில் தனது தொழிலைத் தொடர ஆரம்பித்தார்.

இராமநாதன் பெருந்தன்மையுடன் தனது காரை நடேசனுக்கு வாடகைக்கு க் கொடுத்ததில் ஒரு உள்நோக்கமும் இருந்தது. இரண்டு தேனீர் கடைகள், ஒரு சைக்கிள் திருத்தும் கடை, ஒரு பேக்கரி, ஒரு யூனியன் கடை, ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையம், எப்பொழுதாவது நடைபெறும் கிராம(கோட்) நீதி மன்றம், ஒரு ஆயுள்வேத நிலையம், ஒரு முடி திருத்தும் நிலையம், என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே கிராமக்கோட்டுச் சந்தி அடங்கி இருந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து, மந்திகை ஆஸ்பத்திரிக்கோ அல்லது பருத்தித்துறை நகரத்துக்கோ ஐந்து சதத்துடன் ஐந்து நிமிடங்களுக்குள் பஸ்ஸில் போய்விடலாம். அப்பொழுது பிரதானமாக சைக்கிளையே எல்லோரும் பயன்படுத்தினார்கள். பெண்களும் வீதிக்கு வந்து சைக்கிள் ஓட ஆரம்பித்திருந்த காலம் அது. அப்பொழுது ஆண்களுக்கு நிகராக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த மகேஸ்வரியை எங்கள் முழுக் கிராமமே 'பெடியன் மகேஸ்' என்று விழித்ததை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். நான் அறிந்து முதன் முதலில் எங்கள் கிராமத்தில் சைக்கிள் ஒடியவர் மிஸிஸ் வேலாயுதம் ரீச்சர்தான். அவர் 'அடுத்த வீட்டுப் பெண்' திரைப்படத்தில் 'கன்னித் தமிழ் மணம் வீசுதடி காவியத் தென்றலுடன் பேசுதடி..." பாடல் காட்சியில் அஞ்சலிதேவியோடு சைக்கிள் ஓடிக் கொண்டு நடித்ததை பலர் அன்றும்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக எங்கள் கிராமத்தில் போக்குவரத்துக்கு சைக்கிளே பிரதானமாகப் பயன் படுத்தப்பட்டதால் வாடகைக்குக் காரை எடுத்துப் பயன்படுத்த ஆட்களில்லை. இது இராமநாதனுக்கு ஒரு பின்னடைவாகவே இருந்தது. நடேசனது கார் 'மக்கர்' செய்யத் தொடங்கிய அந்தச் சந்தர்ப்பத்தை தனது வருவாய்க்கு இராமநாதன் பயன் படுத்திக் கொண்டார்.

கிராமக்கோட்டுச் சந்தியில் சும்மா காட்சிப் பொருளாக நின்ற இராமநாதனது கார் இப்பொழுது காசு சம்பாதிக்கத் தொடங்கியது. வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பெற்றோல் செலவும் இராமநாதனுக்கு இப்பொழுது மிச்சமானது. இராமநாதனது காரை நடேசன் வைத்திருந்ததால் எரிபொருள் தொடங்கி இதர செலவுகளையும் நடேசனே பார்க்க வேண்டியதாயிற்று. இப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தால் இன்னுமொரு கார் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் கூட இராமநாதனுக்கு வந்திருக்கலாம். அவர் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். அவரது முகத்தில், பேச்சில், நடையில் ஒரு முதலாளிக்கான களை தென்பட ஆரம்பித்தது.

ஒருபக்கம் தொழில் அத்தோடு சேர்ந்து வல்லிபுர ஆழ்வார் தரிசனம் என்றிருந்தாலும் மறுபுறம் தனது காரைத் திருத்தி எடுப்பதில் நடேசன் மும்முரமாக இருந்தார். தனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மாமனது வாகனம் திருத்தும் நிலையத்தில் தனது காரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். கார் பற்றிய நடேசனது ஆழ்ந்த அறிவு ஏனோ அவரது ஹில்மன் காரோடு மட்டும் பலிக்கவில்லை. ஆனாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தனது ஹில்மன் காரை மூன்று மாதங்களில் மறுபடியும் உயிரத்தெழ வைத்தார். இராமநாதனதுக்குத்தான் மாதாந்தம் வாடகையாகக் கிடைத்த பணம் இல்லாது போயிற்று. மீண்டும் அவரது கார் கிராமக் கோட்டுச் சந்தியில் அமைதியாக நின்றது.

எதுவித சிரமங்களும் இல்லாமல் நடேசனது கார் இப்பொழுது தனது சேவையைச் செய்து கொண்டிருந்தது. இராமநாதனுக்கோ கிரக மாற்றத்தில் சனி பிடித்துக் கொண்டது. ஒருநாள் வல்லிபுரக் கோவிலுக்கு ஆழ்வாரைத் தரிசிக்க இராமநாதன் போன பொழுது அவரது கார் எஞ்சின் இயங்காமல் வீதியில் நின்று விட்டது. காரைத் தள்ளி விட்டால்தான் மீண்டும் எஞ்சின் இயங்கும் நோய் இராமநாதனது காருக்கும் தொற்றி விட்டிருந்தது.

"எஞ்சின் அடிக்கடி நின்று போறது ஹில்மன் காருக்கு பிடிக்கிற ஒரு நோய் போலை. நடேசன் உனக்கு வேறை கார் வாங்கித் தந்திருக்கலாம்"

"உன்ரை கார் கிராமக் கோட்டுச் சந்தியிலை நின்றால் என்ன, கராச்சுலை நின்றால் என்ன? இரண்டும் ஒண்டுதானே. வாடகைக்குப் போகாமல் சும்மாதானே நிக்கப்போகுது" என்று சிலர் அமுத வாக்குகள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த இராமநாதனுக்கு யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதுதான் நித்திரையையே இல்லாமல் செய்து விட்டது.

அந்தப் புண்ணியவான் இராமநாதனிடம் சொன்னது இதுதான், "ஒருவேளை நடேசன் உன்ரை கார் எஞ்சினை தன்ரை காருக்கு மாத்தியிருப்பானோ? கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது. நடேசனின்ரை மாமன்காரனும் ஒரு எம்டன்தான்"

இராமநாதனைச் சந்தேகம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் நடேசனிடம் நேரடியாக இதைப் பற்றிப் பேச அவருக்கு ஏனோ துணிவு வரவில்லை. நாள் தவறாமல் வல்லிபுர ஆழ்வாரை போய்ப் பார்த்து முறையிட்டும் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை.

உண்மையில், இராமநாதனது கார் எஞ்சினை நடேசன் தனது காருக்கு மாற்றிய விடயம் வல்லிபுர ஆழ்வாருக்குத் தெரியாமலா போயிருக்கும்? ஆனால் ஆழ்வாரோ வழமைபோல எதுவுமே நடக்காதது மாதிரி அசைவின்றி சயனித்திருந்தார்.

(உண்மைச் சம்பவம். இரண்டு பெயர்களில்தான் மாற்றம் செய்திருக்கிறேன்)

பொறுமை மற்றும் நேரம் இருந்தால் மட்டும் மிஸிஸ் வேலாயுதம் ரீச்சர் 'அடுத்த வீட்டுப் பெண்' திரைப்படத்தில் அஞ்சலிதேவியோடு "கன்னித் தமிழ் மணம் வீசுதடி..." பாடலில் நடித்த காட்சியை பாருங்கள்.

(https://m.youtube.com/watch?v=idVecTnfwWU )

- ஆழ்வாப்பிள்ளை
2.06.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை