மார்க்கிரேற் அன்ரி

சைவர்களையும் கிறிஸ்தவர்களையும் எது பிரித்து வைக்கிறது என்று என்னைக் கேட்டால் ஒரு வீதிதான் என்று சொல்வேன். எனது கிராமத்தில் அப்படித்தான் இருந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து ஆனைவிழுந்தான்வரை செல்லும் வீதியொன்று, ஒரு பக்கம் புலோலி கிழக்கு என்றும் மறுபக்கம் புலோலி தெற்கு என்றும் பிரித்து வைத்திருந்தது. புலோலி கிழக்கில் சைவர்களும் புலோலி தெற்கில் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். (ஒரு குறிப்பிட்ட தூரம்வரைதான் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்) கிராமக்கோட்டில் இருந்து ஆனைவிழுந்தானுக்குச் செல்லும் வீதி தொடங்கும் இடத்தில் இருந்து சிறிது தள்ளி சூசையப்பர் தேவாலயம் இருந்தது. அதையொட்டியே அனேக கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. விதிவிலக்காக வீதியின் இந்தப் பக்கம் அதாவது புலோலி கிழக்குப் பக்கம் சைவர்களுடன் இணைந்து நாலு கிறிஸ்தவக் குடும்பங்களும் இருந்தன.

வீதியோ, மதங்களோ இடையில் குறுக்கிட்டாலும் இரண்டு பக்க பழக்க வழக்கங்களும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருந்தன. அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவார்கள். இவர்கள் வல்லிபுரக்கோவிலுக்குப் போவார்கள். அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள். இவர்களிலும் சிலர் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் (வெளியே தெரியாத வண்ணம் கொஞ்சம் ஒளிவு மறைவாக) சைவக்கார வீட்டுப் பெண்களை கிறிஸ்தவர்கள் ‘சைற்’ அடிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் வீட்டுப் பெண்களை சைவக்காரர் தாராளமாக ‘சைற்’ அடிக்கலாம். இப்படியான ஒற்றுமைகளும், சின்னஞ் சிறு வேறுபாடுகளும் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்கள் நெருக்கத்தை தடுத்து நின்றது. நேரில் கண்டால் மரியாதையாக சிரித்துக் கொள்வார்கள். மற்றும்படி ஒட்டுதல், உறவாடுதல்கள் எல்லாம் கிடையாது.

புலோலி கிழக்கில் வசித்தவன்தான் சூசைதாசன். எனது பள்ளித் தோழன். அவனுடன் பழகுவதை சைவர்கள் மட்டுமன்றி அவனுடைய மதம் சார்ந்தவர்களும் தவிர்த்திருந்தார்கள். சூசைதாசன் சிறு வயதில் தந்தையை இழந்தவன். அவனது தந்தை மார்ட்டின் ஒரு மகா குடிகாரன். ஒருநாள் குடிபோதையில், குளிக்கும் போது தவறி கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனான். அவனது தாய் மா மார்க்கிரேற் அன்ரி பற்றி ஊரில் நல்லவிதமான கதைகளை நான் கேட்டதில்லை. மார்க்கிரேற் அன்ரியை தெருவில் கண்டால், „அங்கை என்ன பார்வை“ என்று புருசன்மாரை அதட்டி இழுத்துச் செல்லும் மனைவிகள் எங்கள் ஊரில் அதிகம் இருந்தார்கள்.

சூசையுடன் விளையாடுவதற்கு அவனது வீட்டுக்குப் போனால், „வா ராசா, சூசையோடை விளையாட வந்தனீயே?“ என்ற அன்பான உபசரிப்பு மார்க்கிரேற் அன்ரியிடம் இருந்து வரும். விளையாடி முடிந்த பிறகு எங்கள் இருவருக்கும் கை கால்களைக் கழுவி விட்டு, சாப்பிடுவதற்கு பலகாரங்கள், தேனீர் தந்து, „விளையாடுறதோடை நிக்காமல் நல்லா படிக்கவும் வேணும்“ என்று அறிவுரையும் தருவார். அவரைப்பற்றி எதற்காக சனங்கள் இப்படி அவதூறகப் பேசுகிறார்கள் என்று எனக்கு சிலர் மீது கோபமும் இருந்தது. அதிலும் மரியநேசன் மீது எனக்கு அதிக கோபம் இருந்தது.

மரியநேசனிடம் குடி கிடி கிடையாது. சிகரெட் பிடிப்பான். எந்த மொக்கைப் படமானாலும் முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பான். இப்பொழுது உள்ளது போன்று அங்கங்கே கமரா பொருத்தி கண் காணிக்கும் வசதி எல்லாம் அப்பொழுது கிடையாது. ஆனால் ஊரில் எது நடந்தாலும் எப்படியோ மரியநேசனது காக்கா கண்ணுக்குத் தெரிந்துவிடும். வீதியில் போய் வருபவர்களை வழி மறித்து தான் அறிந்த விசயங்களைச் சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பெருமை. தான் பார்க்காத விசயங்களைக் கூட நேரில் நின்று பார்த்தது போன்று காட்சிகளாக விவரித்து ச் சொல்லும் ஆற்றல் அவனிடம் இருந்தது. நான் சூசையோடு விளையாடி விட்டு மார்க்கிரேற் அன்ரி வீட்டில் இருந்து வருவதைக் கண்டால், என் வயதைப் பற்றிக் கூட யோசிக்காமல், „என்ன, நீச்சல் பழகிட்டு வாறாய் போல“ என்று நக்கலாகக் கேட்பான்.

ஒருநாள் நான் சூசையோடு விளையாடி விட்டு வரும் போது மரியநேசன் என்னை வழி மறித்தான். நான் சூசையோடு விளையாட அவனது வீட்டுக்குப் போவது மரியநேசனுக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.

„விளையாடுறதுக்கு உனக்கு வேறை இடம் கிடைக்க இல்லையோ?“ என்று கேட்டான். நான் ஏதுவுமே பேசாமல் நின்றேன்.

மரியநேசனே தொடர்ந்தான். “உனக்கு மார்க்கிரேற்றைப் பற்றி என்ன தெரியும்? பிழையான பொம்பிளையவள். அவள் புருசனையே கொலை செய்தவள். நீ இனி சூசையோடை விளையாட அங்கை போகாதை“ என்றான்.

„மரியநேசனை, இந்தப் பக்கம் வரக்கூடாது என்று ஒருநாள் அம்மா துரத்தி விட்டவ“ என்று சூசை ஒரு தடவை என்னிடம் சொன்னது ஞாபகத்தில் வந்தது. உடனேயே மரியநேசனைக் கேட்டும் விட்டேன். “உங்களை வரவேண்டாம் என்று சொன்ன கோவத்திலைதானே என்னை அங்கை விளையாடப் போக வேண்டாமெண்டுறீங்கள்“ நான் இப்படிக் கேட்டதும் மரியநேசனுக்கு கோபம் கண்டிப்பாக வந்திருக்கும். ஆனாலும் அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “விசர்க்கதை கதைக்கிறாய்“ என்றவன், மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தான். அவன் சொன்னதைக் கேட்ட பொழுது நம்ப முடியாமல் இருந்தது. ஆனாலும் சிறிதாக ஒரு பயம் என்னிடம் ஒட்டிக் கொண்டது.

மார்ட்டின் ஒரு தண்ணீர் பிரியன். அவனுக்கு கள்ளை விட சாராயம்தான் அதிகம் பிடிக்கும். நேரம் கிடைக்கிற பொழுதெல்லாம் குடிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு இருந்தது. அதுவும் தனியாக தண்ணி அடிக்க அவனுக்கு சரிப்பட்டு வராது. யாராவது கூட்டு வேண்டும். அதற்கு மூன்று கூட்டாளிகள் அவனுக்கு இருந்தார்கள். “304 கார்ட்ஸ்” விளையாட்டோடுதான் அவர்கள் தண்ணி அடிக்க ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்தில் சந்தோசமாக, சிரித்துக் கொண்டே அவர்களது சீட்டுக்கட்டு விளையாட்டு தொடங்கும்.போதை ஏற ஏற அவர்களுக்குள் சண்டைகள், சத்தங்கள் மெதுவாக ஆரம்பிக்கும்.

'நீ கலாவரை மணலைப் போட்டிருந்தால் கதை வேறை மச்சான்",
"ஆடித்தன்தான் துரும்பு எண்டு எனக்கு அப்பவே தெரியும். ஒரு துரும்பும் மாட்டமாட்டன் எண்டுட்டுது",
"நீ அடிச்ச கம்மாறிஸ் பிழை",
"விசர் விளையாட்டு விளையாடுறாய், முதலிலை ஜக்கை அடிச்சு ஒன்பதை விழுத்தி இருந்தால் கதை வேறை. கையிலை கம்மாறிஸ்“
என்று பலவித உரையாடல்களோடு அவர்களது சீட்டுக் கச்சேரி நகரும். ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்தில் ராஜா எது ராணி எது என்று தெரியாமல் கலாவரையும், ஆடித்தனும் ஒன்றாகக் கலந்து தெரிய, சீட்டுக்கட்டு சிதறி நிலத்தில் கிடக்க அதன் மேல் விழுந்து கிடப்பார்கள். என்னதான் போதையில் விழுந்தாலும் அதிலும் உசாரான ஆட்களும் இருந்தார்கள். மார்ட்டினின் நிறைந்த போதையில் அவனது வீட்டில் தவறு நடக்க ஆரம்பித்தது.

அன்றொருநாள் ஏதோ ஒரு அவசரமாரன விடயமாக வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த மார்ட்டினுக்கு மார்க்கிரேற்றின் விளையாட்டு தெரிந்து போயிற்று. தனது நண்பர்களின் நட்பும் மார்ட்டினுக்குப் புரிந்து போயிற்று. சாராயம் குடிக்கும் போது வரும் போதையைவிட அதிகமான வெறி கண்டான். விளைவு, மார்க்கிரேற்றின் உடம்பு பல காயங்களை கண்டது.

துரோகம், கோபம், இயலாமை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மார்ட்டினை சோர்வடையச் செய்திருந்தது. இந்த நிலையை மறக்க அவனுக்கான மருந்து சாராயம்தான். துரைசிங்கம் கடைக்குப் போய் சாராயம் வாங்கிக் கொண்டான். மதியம் அவன் வீட்டுக்கு வரும் போது அவனது தள்ளாட்டத்தை ஊர் நின்று வேடிக்கை பார்த்தது.

வீட்டுக்கு வந்தவன் நேரடியாகக் கிணற்றடிக்குப் போய் குளிக்க ஆரம்பித்தான். துலாவில் கட்டியிருந்த கயிறு சற்று சிறிதாக இருந்ததால், கிணற்றில் தண்ணீர் அள்ளும் ஒவ்வொரு தடவையும் துலாவை நன்றாகக் கீழே தாட்டுத்தான் அவனால் தண்ணீரை அள்ள முடிந்தது. தண்ணீர் அள்ளுவதில் சிரமமும், அதிகமாகக் குடித்ததால் தள்ளாட்டமும் அவனிடம் இருந்தது. ஆனாலும் தொடரந்து குளித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் இருந்து எடுத்து தலையில் ஊற்றிய தண்ணீர் மார்ட்டினை சிறிது குளிர வைத்துக் கொண்டிருந்தது.

குளித்துவிட்டு வந்தவுடன் மார்ட்டினுக்கு சூடாக உணவு பரிமாறுவது மார்க்கிரேற்றின் வழமை. மார்க்கிரேற் குடத்தைப் பார்த்தாள்.அது வெறுமையாக இருந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் குடிக்க தண்ணீர்கொடுக்கவில்லை என்றால் அது இன்னுமொரு பிரச்சனையை உருவாக்கி விடலாம் என்று நினைத்தாள். இப்பொழுது குடத்தைக் கொண்டுபோய் கிணற்றடியில் வைத்தால் குடத்தில் தண்ணீர் ஊற்றி விடுவானா? இல்லை தன்னை எட்டி உதைப்பானா? என்ற கேள்வியும் மார்க்கிரேற்றிடம் இருந்தது. ஆனாலும் மார்ட்டினுடைய கோபத்தை ஆழம் பார்க்க இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த மார்க்கிரேற் எண்ணினாள்.

குடத்தைக் கொண்டுபோய் கிணற்றடியில் வைத்தாள். மார்க்கிரேற்றையோ, குடத்தையோ மாட்டின் கண்டு கொள்ளவில்லை. அவன் தன்பாட்டுக்கு குளித்துக் கொண்டிருந்தான். மார்க்கிரேற் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்று விளங்கியது. அது, மார்ட்டினுக்கு இன்னமும் கோபம் தணியவில்லை என்று. அத்தோடு அவனது கோபம் இனி தணியுமா? என்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் குடித்து விட்டு வந்து உதைப்பானோ என்ற பயமும் அவளுடன் சேர்ந்து கொண்டது. மார்ட்டினோ எதுவித உணர்ச்சிகளையும் காட்டாமல் துலாவை நன்கு தாட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளிக் குளித்துக் கொண்டிருந்தான். அவனது செயலை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கிரேற் மார்ட்டினை நெருங்கி வந்தாள். துலாவை தாட்டு தண்ணீரை அள்ள மாட்டின் எத்தனித்த அந்த தருணத்தில் அவனைத் தள்ளிவிட்டாள்.

ஆழமான அந்தக் கிணற்றுக்குள் இருந்து மார்ட்டினின் உடலை வெளியே எடுத்துப் போடும் பொழுது, மார்க்கிரேற்றைச் சுற்றி இருந்து பெண்கள் கூட்டம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. சோகம் பகிர வந்தவர்களில் பக்கத்து வீட்டு மாணிக்கத்தின் பார்வை மட்டும் மார்க்கிரேற்றை தலைகுனிய வைத்தது. "ஒருவேளை பாரத்திருப்பானோ?" என்று அவளுக்கு அச்சம் வந்தது.

மரியநேசன் சொன்ன மார்க்கிரேற்றின் கதை இதுதான். எல்லாவற்றையும் நேரில் நின்று பார்த்தது போல் அவன் இந்தக் கதையைச் சொன்னதில் எனக்கு அவன் மீது துளியும் நம்பிக்கையில்லை. மந்திரி குமாரி திரைப்படத்தில் மலை உச்சியில் இருந்து நாயகி தனது கணவனை கீழே தள்ளிவிடும் காட்சியை மார்க்கிரேற் அன்ரியின் கதையோடு சேர்த்து அவன் எனக்கு கதை விட்டிருக்கலாம். இல்லாவிட்டால் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பேசும் “தருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி” என்ற கலைஞர் கருணாநிதியின் வசனத்தை தனது கதையோடு பொருத்திப் பார்த்திருக்கலாம்.

„என்ன நடந்தது என்று யாருமே பார்க்காத போது, இதுதான் என்று எப்பிடி உங்களால் சொல்லேலும்?“ எனது அந்தக் கேள்விக்கும் மரியநேசனிடம் பதில் இருந்தது.

„பக்கத்து வீட்டு மாணிக்கம்தான். அவன்தான் விசயத்தை வெளியே விட்டவன்“ மரியநேசனே தொடர்ந்து சொன்னான், „அண்டைக்கு நடந்த சம்பவத்தை வேலிக்குள்ளாலை பாத்தவன் அவன். எதுக்கு வம்பு எண்டு பேசாமல் இருந்திட்டான். ஒருநாள் மார்க்கிரேற்றுக்கும் அவனுக்கும் வந்த ஒரு காணிப் பிரச்சினையிலை, நீ புருசனையே கிணத்துக்குள்ளை தள்ளிக் கொண்டவள்தானே எண்டு ஆக்களுக்கு முன்னாலே மாணிக்கம் கேட்ட பொழுது வாயை மூடிக் கொண்டு போனவள்தான் மார்க்கிறேற். அதுக்குப் பிறகுதான் ஊருக்கே விசயம் தெரிஞ்சுது“

மார்ட்டின் இறந்து 53 வருடங்களாயிற்று. எனக்குக் கதை சொன்ன மரியநேசனும், இந்தக் கதையின் நாயகி மார்க்கிரேற் அன்ரியும் இப்பொழுது உயிரோடு இல்லை. „விளையாடுறதோடை நிக்காமல் நல்லா படிக்கவும் வேணும்“ என்று, அன்று அன்போடு என்னைப் பார்த்துச் சொன்ன மார்க்கிரேற் அன்ரி உண்மையில் ஒரு கொலையாளிதானா? என்னுள் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இந்தக் கேள்வி.

- ஆழ்வாப்பிள்ளை
19.06.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை