முடிவு என்பது அடக்கம்

அன்று புதன் கிழமை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம், என்னை எங்கேயாவது ஓடிப் போய்விடு என்று விரட்டியது. இரண்டு போலிஸ் வாகனங்களும் ஒரு அம்புலன்ஸ் வாகனமும் வாசலில் நின்றிருந்தன. என்ன நடந்திருக்கும் என்று நிதானிப்பதற்குள் மைக்கல் என்னை நெருங்கி வந்தான். மைக்கல் ஒரு பொலிஸ்காரன். எனக்குத் தெரிந்தவன். அவன் என்னை நெருங்கி வரும்போதே தனது நெஞ்சில் சிலுவை வரைந்து காட்டினான். பக்கத்து வீட்டு ஸ்ராபில் செத்துப் போய்விட்டார் என்று புரிந்தது.

„அவர் செத்து நாளாயிற்றுது. துர்நாற்றம் வருறதாக தகவல் கிடைச்சதாலே வந்தோம். மாடன்புழு (maggots) வந்திட்டுது. அதுதான் இந்த நாற்றம்“ மைக்கல் சொல்லும் போதே ஸ்ராபில் வீட்டு யன்னலைப் பார்த்தேன் இலையான்கள் தங்கள் பரம்பரைகளோடு வந்து கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன. வாழ்நாளில் தனிமையை விரும்பி வாழ்ந்த ஒருவன் வீட்டில் இன்று கூட்டமாக மாடன் புழுக்களும், இலையான்களும் குடியேறிவிட்டன.

எனது மூக்கைப் பிடித்து தாங்க முடியாத துர்நாற்றத்தை மைக்கலுக்கு சாடையால் காட்டிய பொழுது,“கன நேரமாக இங்கே நிற்கிறன். இசைவாக்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாய்தானே?” என்று அவன் பரிதாபமாகச் சொன்னான்.

“உங்கள் சம்பிராதயம் எல்லாம் முடிய நேரம் எடுக்கும் போலே?“

„எல்லாம் முடிஞ்சு வாகனம் வந்து உடலை எடுத்துக் கொண்டுபோக எப்பிடியும் இரவு பன்னிரண்டு மணியாயிடும். அதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு சீல் வைச்சிட்டு நாங்கள் போகலாம்“

மைக்கல் ‚நாங்கள்‘ என்று சொல்லும் போதுதான் பொலிஸ் வாகனத்தைப் பார்த்தேன். வாகனத்துக்குள்,“ இனியும் இந்த வேலையை தொடரவேண்டுமா?“ என்ற பாணியில் தலையில் கை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு பொலிஸ்காரன் உட்கார்ந்திருந்தான்.

„வீட்டுக்கு எதுக்கு சீல் வைக்க வேணும்?“

„பிரேத பரிசோதனை இருக்கெல்லோ. சாவுக்கான காரணம் தெரிஞ்ச பிறகுதான் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் உள்ளே போகலாம். பிரேத பரிசோதனை முடிய எப்பிடியும் ஒரு கிழமையாவது பிடிக்கும்“

மைக்கலிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

அன்று குளிக்கும் போது, „புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய…“ என்று அன்று வெள்ளிக்கிழமைகள் தோறும் பாடசாலை மண்டபத்தில் நின்று பாடிய சிவபுராணம்தான் நினைவுக்கு வந்தது.

ஸ்ராபில் ஒரு ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர். எழுபத்தியெட்டு வயது. அவருடைய அறிவுக்கும், ஆற்றலுக்குமாக அரசாங்கத்திடம் இருந்து பல விருதுகள் கிடைத்திருக்கிறது. சில புத்தகங்கள் கூட எழுதி வெளியிட்டிருந்தார். நான் அறிந்த காலத்தில் இருந்து வாசிப்புதான் அவருடைய முழு வேலையாக இருந்தது. வாசித்த புத்தகங்களை எறியவும் மாட்டார். யாருக்கும் கொடுக்கவும் மாட்டார். தான் வாசித்த
புத்தகங்களை தன் வீட்டுக்குள்ளேயே அரண் போலவே அடுக்கி வைத்திருப்பார். தன்னிடம் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கு தன் வீட்டில் இடம் போதாமல் இருப்பதாக என்னிடம் ஒரு தடவை ஆதங்கப் பட்டிருக்கிறார். வாசித்த புத்தகங்களை வாசிகசாலைக்கு கொடுத்து விடுங்களேன் இடம் மிச்சமாகும் என்று நான் சொன்ன போது அதெல்லாம் பாவமான செயல் என்பது மாதிரி மறுத்து தலையாட்டி விட்டுப் போனார். இத்தனைக்கும் நான்கு அறைகள் கொண்ட விசாலமான வீடு அவருடயது.

அடுத்த புதன்கிழமை வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த பொழுது ஸ்ராபிலின் வீட்டு வாசலில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தார்கள். பல வருடங்களாடக நான் அங்கேதான் குடியிருக்கிறேன். அவர்களை இதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. பொலிஸ் சீல் அகற்றப்பட்டு ஸ்ராபிலின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. ஸ்ராபிலின் சகோதரியின் மகள் என்று அந்தப் பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அருகில் நின்றவன் அவளது கணவன். நிறைய சிகரெட் புகைப்பவன் என்பதை அவனிடம் இருந்து வந்த நெடி சொல்லிற்று. அடுத்த நாள் வந்து தேவையில்லாத பொருட்களை அகற்றப் போவதாகச் சொன்னார்கள்.

மறுநாள் மாலையில் பார்த்தேன். மூன்று கொண்டெயினர்கள் ஸ்ராபிலின் வீட்டின் முன்னால் இருந்தன. ஸ்ராபிலின் வீட்டின் யன்னலூடாக அந்த கொண்டெயினர்களுக்குள் புத்தகங்கள் விழுந்து கொண்டிருந்தன. புத்தகங்களில் என்ன விடயங்கள் அடங்கி இருக்கின்றன என்றெல்லாம் அவர்கள் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதற்குள் பணம் ஏதாவது இருக்கிறதா என்ற பாணியில் அவர்களது தேடல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. என்னைக் கண்ட போது மிச்ச மீதிப் புத்தகங்களுக்கு மேலும் இரண்டு கொண்டெயினர்களாவது தேவைப் படும் என்றார்கள்.

„ஸ்ராபிலின் நல்லடக்கம் எப்போ?“ என்று அவர்களிடம் கேட்டேன். „இப்போதைக்கு இல்லை. அம்மா விடுமுறைக்கு பிறேசில் போயிருக்கிறார். நாங்களும் அடுத்த கிழமை விடுமுறைக்கு தென் ஆபிரிக்கா போகிறோம். விடுமுறை முடிந்த பிறகுதான் நல்லடக்கம். செப்ரெம்பர் நடுப்பகுதியில் நல்லடக்கத்துக்கு தேதி கேட்டிருக்கிறோம்.“ என்று ஸ்ராபிலின் மருமகளிடம் இருந்து பதில் வந்தது.

அந்த வீட்டுக்கு குடிவரும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதும் அதை நல்ல விலைக்கு விற்பதே அவர்கள் நோக்கம் என்பதும் அவர்களின் பேச்சில் இருந்து அறிய முடிந்தது.

அவர்களிடம் இருந்து நான் விடைபெறும் போது ஸ்ராபிலின் சாவுக்கு கவலை தெரிவிப்பதா அல்லது அவர்களது விடுமுறைக்கு வாழ்த்து தெரிவிப்பதா என்று எனக்குள் ஒரு குழப்பம். வெறுமனே “மீண்டும் சந்திப்போம் “ என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.

பக்கத்து வீட்டுக்காரன், அத்துடன் அவருடன் ஏற்பட்ட பழக்கம் இரண்டுக்குமாக ஸ்ராபிலின் நல்லடக்கத்துக்காக நான் காத்திருக்கிறேன்.

- ஆழ்வாப்பிள்ளை
16.07.2017

பிரசுரம் - வெற்றிமணி (Sep 2017)

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை