முதற் தண்ணி

இன்னும் வண்ணாத்தி வரவில்லை. வெயில் கொளுத்தும் அந்த வேளையிலும் எனக்குக் குளிர்ந்தது. நாரியைப் பிய்ப்பது போலவும், அடி வயிற்றில் அழுத்துவது போலவும் அவஸ்தையாக இருந்தது. கால்கள் இழுத்து இழுத்து வலித்தன. தொண்டை வரண்டிருந்தது. மதிய இடைவேளைக்கு பள்ளிக்கூடத்தால் வந்து 3மணி நேரமாகி விட்டது.

காலையே எனக்குள் வித்தியாசமான அவஸ்தைகள். ஏதோ பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. பாடசாலைக்குப் போன பின் கூடுதலான அவஸ்தை. சின்ன இடைவேளைக்கு... எனக்கும் வந்து விட்டது.

முதன்முதலாக ஐந்தாம் வகுப்பில் ஜெயலட்சுமி. பின்னர் மனோகரி. ஆறாம்வகுப்பில் ஒருத்தரும் இல்லை. அல்லது வெளியில் சொல்லவில்லை. ஏழாம்வகுப்பில் சிவமணியில் தொடங்கிப் பலர். இப்போதெல்லாம் எமது வகுப்பில் யாராவது பாடசாலைக்கு வராமல் விட்டாலே „`டும்´ போட்டுட்டாளோ..!“ என்பதான ஊகங்கள்.

எனக்கு எனது வலியை விட, யாராவது அறிந்து விடுவார்களோ என்ற வெட்கத்துடனான அச்சம். அழுகையாக வந்தது. குறைந்தது 14நாட்களுக்கு பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாது.

எல்லாம் போக சிறிய இடைவேளையின் பின் இன்னும் இரண்டு பாடம் முடியத்தான் பெரிய(மதிய) இடைவேளை. அதுவரை யார் கண்ணிலும் எந்த அசுமாத்தமும் தெரியாமல் என்னை நான் காப்பாற்றியாக வேண்டும்.

பெரிய இடைவேளைக்கான மணி அடித்த போது எழுந்து பார்த்தேன். எப்படித்தான் சட்டையை குடைபோல பரத்தி விரித்திருந்த போதும் சில துளிகள். சூட்கேசால் மறைத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். களைப்பாக இருந்தது. அம்மாவிடம் நேரே போய்ச் சொன்னேன். அங்குதான் வினையே ஆரம்பித்தது.

அம்மா சும்மா இருந்திருக்கலாம். அம்மம்மா, பக்கத்து வீட்டுப் பாட்டி, மாமி, மச்சாள் என்று எல்லோருக்கும் பறை தட்டி விட்டா. சொல்லாவிட்டால் குறை. சொல்லித்தான் ஆக வேண்டுமென்பது அம்மாவின் நிலை. ஊர்க்கிழவிகள் எல்லோரும் என் வீட்டில் கூடி விட்டார்கள். இனி அம்மாவின் கையில் ஒன்றுமில்லை. அவர்கள் சொற்படிதான் எனது ஒவ்வொரு அசைவும்.

குளித்து உடுப்பை மாற்றி எனது படுக்கையில் என்னைப் படுக்க விட்டால் எனக்குப் போதும். அத்தனை அசதி எனக்கு. வண்ணாத்தி வந்து சேலை தந்துதான் நான் மாற்ற வேண்டுமாம். அதுவரை மிடறு தண்ணீருக்கும் எனக்கு அனுமதியில்லை. வண்ணாத்தியிடம் இரண்டு பகுதியாக ஆட்கள் வெற்றிலை, பாக்கோடு போய் விட்டார்கள். அவளைக் கண்டு பிடிக்கவில்லையென்றும், இன்னுமொருதரம் கடற்கரைப் பக்கம் போய்ப் பார்த்து வருவதாகவும் ஒரு பகுதி வந்து சொல்லிப் போனது. கடற்கரையில் அவள் ஊர்த் துணிகளை உலர்த்திக் கொண்டிருக்கலாம் என்ற ஊகத்தை கிழவிகள்தான் சொன்னார்கள்.

கிழவிகள் அநாயசமாக இருந்து வெற்றிலை பாக்கோடு ஊர்க்கதைகளையும் மென்று கொண்டிருந்தார்கள். இடைக்கிடை கல்யாணமே ஆகாமல் முதிர்கன்னியாக இருக்கும் சரஸ்வதியையும், சண்முகத்தாரோடு ஓடிப்போன சாம்பவியையும் என்று கடித்துக் குதறினார்கள். எனக்கு நாரி வலித்தது. „அம்மா..!“ என்று கூப்பிட்டுப் பார்த்தேன். என் குரல் ஈனஸ்வரமாய் ஒலிப்பது போலிருந்தது.

அம்மாவின் முகத்தில் களைப்போடு வேதனை ரேகைகளும் தெரிந்தன. என்னைப் பார்க்க அவவுக்குப் பாவமாக இருந்திருக்க வேணும். யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கோப்பி போட்டுக் கொண்டு வந்து "சத்தம் காட்டாமல் மளமளவெண்டு குடி" என்றா. பால் விடாத கோப்பிதான். என்றாலும் எனக்குத் தேவாமிர்தத்தைக் கண்டது போன்ற மகிழ்ச்சி.

சுடச்சுடக் குடித்து விட்டேன். கொஞ்சம் குரல் வந்தது. "அம்மா.. எப்ப எல்லாம் முடியும் நான் படுக்கப் போறன்." என்று கெஞ்சினேன். அம்மா "கொஞ்சம் பொறு பிள்ளை" என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டா.

எனக்குச் சமையல், வண்ணாத்திக்குக் கொடுத்து விட சேலை - சாமான்கள், வந்தவர்களைக் கவனிப்பது என்று அம்மா பரபரத்துக் கொண்டிருந்தா. வந்த கிழவிகளில் சிலர் தேநீரையே வேண்டாமென்று விட்டு வெற்றிலை பாக்கோடு மட்டும் நின்றார்கள். அம்மம்மா என்னிலிருந்து பத்து மீற்றர் தள்ளியே நின்றா. நான் துடக்காம்.

ஒருவாறு வண்ணாத்தி வந்து சேர மாலையாகி விட்டது. கிணற்றடியில் சருகுகளும், சுள்ளிகளும் அடுக்கி அதற்கு மேல் என்னை இருந்தி... உள்ளாடைகளைக் களையச் சொன்னார்கள். எனக்கு முதற் தண்ணி வார்க்கப் போகிறார்களாம்.

நிமிர்ந்து பார்த்தேன். எல்லாக் கண்களுமே என் மேல் மொய்த்துக் கொண்டிருந்தன.

(1972)

- சந்திரவதனா

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை