சித்திரம் பேசுதடி…

1968இல் பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி, ஜெயலலிதா, நம்பியார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் `எங்க ஊரு ராஜா´. அந்தப் படத்தில் சிவாஜி தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அதில் இடம் பெற்ற
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.
.” என்ற பாடல் பிரபல்யமானது. கவிஞருடைய சில பாடல் வரிகளைப் பார்க்கும் போது அது தனக்காகவே எழுதப்பட்டது போன்ற எண்ணம் வருவதாலேயே தன்னால் பாடலை அனுபவித்துப் பாடமுடிகிறது என்று ரி.எம். சௌந்தரராஜன் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளிவந்த பாடல். அடிக்கடி இலங்கை வானொலியிலும் கம்பீரமாக ஒலித்த பாடல் அது. பல தந்தையர்களது நெஞ்சங்களுக்கு ஒத்தடம் கொடுத்து வலிகளை ஆற்றி விட்ட பெருமையும் அந்தப் பாடலுக்கு உண்டு. இப்பொழுது எனது நினைவுக்குள் அந்தப் பாடல் வந்து நிற்கின்றது.

வருடத்தில் குறைந்தது நான்கு தடவைகளாவது எங்களைக் காண்பதற்காக எங்களது மகள் தனது குடும்பத்தோடு லண்டனில் இருந்து வந்து விடுவாள். இம்முறையும் கோடை விடுமுறைக்கு வந்திருந்தாள். ஒவ்வொரு தடவையும் யேர்மனிக்கு வருமுன்னரே ஏதாவது ஒரு நட்சத்திர ஹொட்டலில் ஒருநாள் இரவு உணவுக்கான ஏற்பாட்டை செய்து விட்டே எங்களிடம் வருவதற்கான பயணத்தை ஆரம்பிப்பாள். „எதுக்கு வீணான செலவு“ என நான் தடுத்து விடுவேனோ என்ற முன் எச்சரிக்கையாகவே இந்த ஏற்பாடு லண்டனில் இருந்தே நடந்திருக்கும். „ஒரு இரவு நேரச் சாப்பாட்டுக்கு ஆயிரங்களாகச் செலவு செய்ய வேண்டுமா?“ என்ற கேள்வி என்னிடம் இருக்கும். „இருக்கிற போதுதானே செலவு செய்ய முடியும், இல்லாத போது முடியாது“ என்பது அவளது பதிலாக இருக்கும்.

Hotel Landhaus Wolf இல் பிள்ளைகள் மருமக்களோடு இரவு உணவுக்காகப் போனோம். பொதுவாக இரவு நேரச் சூழல் மற்றும் இன்ன பிற சில காரணங்களுக்காக சிறுவர்களை இப்படியான ஹொட்டல்களுக்கு அழைத்துக் கொண்டு போவதில்லை. நாங்கள் ஹொட்டலில். பேரப்பிள்ளைகள் வீட்டில். அவர்களுக்கு பெரிசுகளின் தொல்லைகள் இல்லாமல் மகிழ்வாக இருந்திருக்கும். அவர்கள் Netflix, Fox, WhatsApp, Facetime என்று தங்களது ஏதோ ஒரு உலகத்தில் மகிழ்ந்திருப்பார்கள்.

உணவுக்கான menu card தந்தார்கள். வாங்கிப் பார்த்தேன் 7 courses menu போட்டிருந்தார்கள். நிமிர்ந்து பார்த்தேன். „சாப்பிட வந்திட்டு காசைப் பார்க்காதே. பேசாமல் ஓடர் பண்ணு“ என்று எனது மகளின் பார்வை சொன்னது.

பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை
பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான் என் கடமை
அந்த பெருமை எந்தன் உரிமை
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு
துள்ளி துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும் மகிழ்வதும் தனிமகிமை…
“ என்ற கவிஞரின் நிச்சயதாம்பூலம் பாடலை மனதில் ஓடவிட்டுக் கொண்டே எனக்கான உணவை ஒப்புவித்தேன்.

சாப்பிடும்போதே எனது மகள் தான் வரைந்த ஒரு படத்தை என்னிடம் தந்து „எதாவது புரிகிறதா?“ என்று கேட்டாள். அது ஒரு கேலிச்சித்திரம். பார்த்தவுடன் அதன் கருத்தைப் புரிந்து கொண்டேன். ஆனலும் அதன் கருத்தைச் சொல்ல ஒரு தயக்கம் என்னிடம் இருந்தது.

இரண்டாவது படத்தை நீட்டி, இது தனது மகள் வரைந்தது என்றாள். மந்திரக்கோலுடன் கூடிய ஓவியம். „அதிசயம் ஒன்று நடக்கப் போகிறது“ என்றேன்.

மூன்றாவது படத்தைத் தந்தாள். என்ன அதிசயம் என்பது புரிந்து போனது.

„இனி நீங்கள் வேலைக்கெல்லாம் போக வேண்டிய தேவையில்லை“ என்றாள்.

ஓய்வுக்கான வயதுதான். ஆனாலும் ஏனோ உடலும் மனதும் எனக்கான ஓய்வை விரும்பவில்லை. “இன்னும் இரண்டு வருசங்கள் வேலை செய்ய அனுமதி இருக்குது. முடியுமானளவுக்கு ஓடலாம் எனப் பாக்கிறேன்“ என்றேன்.

„உங்கள் வீட்டு Mortgage க்கான பணம் முழுவதையும் Bankல் நான் கட்டிவிட்டேன். நீங்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் எங்களுக்கு வேணும்“ என்றாள்.

என் கண்களில் வந்திருந்த நீர், மெழுகுதிரியின் வெளிச்சத்தில் மின்னியிருக்கலாம். அதைப் பிள்ளைகளும் பார்த்திருக்கலாம். எங்க ஊரு ராஜா படத்தில் இடம் பெற்ற „யாரை நம்பி நான் பிறந்தேன்..” பாடலின் இடையில் வரும்,
தென்னையைப் பெத்தால் இளநீரு
பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு
“ என்ற வரிகள் மனதில் வந்தது.

கவிஞர் சொன்ன கண்ணீரும் என் கண்ணீரும் எதிர்மறையானவை.

- ஆழ்வாப்பிள்ளை
14.08.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை