கூடையிலே ரெலிபோனு

“சனிக்கிழமை ரெஸ்ரோரண்டுக்கு சாப்பிடப் போறம். நீயும் வருறாய்” உரிமையோடு றொனி என்னிடம் சொன்னான்.

வேலை இடத்தில் றொனிதான் இளைஞன். மற்றவர்கள் எல்லாம் நான் உட்பட அரை நூற்றாண்டைக் கடந்தவர்கள். இளைஞனாக இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் றொனி எங்கள் எல்லோருடனும் நண்பன் போலவே பழகுவான். அதனால் வேலை இடத்தில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும்.

எங்கள் வயதுக்கு வேலை முடிந்து வீட்டுக்குப் போய் ஷோபாவில் ஆசுவாசமாகச் சாயந்திருந்தாலே சொர்க்கம் மிக நெருக்கத்தில் இருப்பது போல் இருக்கும். அதுவும் வார இறுதியில் அந்த இரண்டு நாட்களும் சொர்க்கமே கைக்குள் அடங்கி இருக்கும். அந்த இரண்டில் ஒருநாளில்தான் றொனி என்னை ரெஸ்ரோரண்டுக்கு சாப்பிட அழைக்கிறான்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டான். “சனிக்கிழமை பகல் முழுதும் ஓய்வெடுத்துக் கொள். இரவுதானே ரெஸ்ரோரண்டுக்குப் போறம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரெஸ்ற். இங்கே ஒரு பிரச்சினையும் இல்லையே”

அடுத்து நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது அவனுக்கு தேவையில்லாதது. போய்விட்டான்.

பேச்சோடு பேச்சாக “கிறீஸ் ரெஸ்ரோரண்டுக்குத்தான் சாப்பிடப் போறம். சைனா சாப்பாடும் அங்கே கிடைக்கும். அனேகமாக சாப்பாட்டுக்கு ஒருத்தரும் காசு குடுக்க வேண்டி வராது” என்று றொனி எல்லோருக்கும் ஆசையையும் ஏற்படுத்தி விட்டதால், வேலை இடத்தில் சனிக்கிழமை ரெஸ்ரோரண்டுக்கு சாப்பிடப் போக அனைவரும் உடன் பட்டுக் கொண்டோம். ஆனால் எதற்காக இந்த சாப்பாட்டுக்கான ஏற்பாடு என்பதை மட்டும் றொனி யாருக்கும் சொல்ல மறுத்து விட்டான்.

றொனி கிறீஸ் நாட்டைச் சேர்ந்தவன். இன்னமும் திருமணம் ஆகவில்லை. பெற்றோரை விட்டு விலகி வந்து தனது காதலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். துடியாட்டமானவன். ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பவன். இந்த வருட கோடைக்கு நாலு கிழமைகள் காதலியோடு தனது நாட்டுக்கு போவதற்கு திட்டமிட்டிருந்தான். அலுவலகத்தில் வேலை அதிகமானதால் அதிகபட்சம் இரண்டு கிழமைகள்தான் இம்முறை விடுமுறை தர முடியும் என்று அறிவித்து விட்டார்கள். றொனியைக் காத்துக் கொண்டிருக்க அவனது காதலி தயாராக இல்லை. ஏற்கெனவே தனது விடுமுறைக்கு திட்டமிட்டபடி சென்ற கிழமையே அவள் கிறீஸிற்கு பறந்து விட்டாள். றொனி தனித்து விட்டான். தனது விடுமுறைக்கு இன்னும் இரண்டு கிழமைகள் காத்திருக்க வேண்டிய நிலையில்தான் வருகின்ற சனிக்கிழமை ரெஸ்ரோரண்டுக்கு சாப்பிடப் போவதற்கான ஏற்பாட்டை றொனி அறிவித்திருக்கிறான்.

சனிக்கிழமை மாலை ரெஸ்ரோரண்டில் சந்தித்துக் கொண்டோம். எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த மேசையில் பிளாஸ்ரிக்கால் செய்த ஒரு பெரிய கூடை இருந்தது. எதுக்கு இந்தக் கூடை என்று ஆராய எங்களுக்கு அவகாசமே தராமல் றொனியே காரணமும் சொன்னான்.

“முதலிலை நாங்கள் எல்லோரும் எங்களின்ரை ரெலிபோன்களை இந்தக் கூடைக்குள்ளை போட்டு வைப்பம்” சொல்லிவிட்டு எல்லோரையும் பார்த்தான். ஏன் என்ற கேள்வி எங்கள் முகங்களில் தெரியத் தொடங்கியது. அதை அவன் எதிர்பார்த்து இருக்க வேண்டும்.அவனே தொடர்ந்தான்.

“பயப்படாதையுங்கோ. சாப்பிட்டு முடிஞ்சு போகக்கை அவரவர்கள் தங்களுடைய ரெலிபோன்களை எடுத்துக் கொண்டு போகலாம்”

‘சாப்பிடுற போது இடைஞ்சல் இருக்க கூடாது என்று நினைக்கிறியா?” எனக்கருகில் இருந்த பவுலோ, றொனியைக் கேட்டான்.

“அதுதான். அந்த இடைஞ்சல் இருக்க கூடாது என்றதுக்குத்தான் இந்தத் திட்டம்” றொனியிடம் இருந்து உடனேயே பதில் வந்தது.

“கூடைக்குள்ளை இருக்கிறதாலே ரெலிபோன் மணி அடிக்காமல் விடுமா என்ன?” இது எனது கேள்வியாக இருந்தது.

“அடிக்கும். அப்பிடி அடிச்சால் பிரச்சினையாப் போயிடும்” றொனி சொல்லி முடிக்கு முன்னரே பல குரல்களில் “ஏன்?” என்ற வார்த்தை அங்கே ஒலித்தது.

“ஏனென்றால்….. யாருடைய ரெலிபோன் முதலிலை அடிக்குதோ அவர்தான் இண்டைக்கான முழுச் செலவையும் ஏற்கோணும்”

கோடையானாலும் வெளியே இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. அதில் ஒரு இடி யன்னலூடாக வந்து என்னருகில் விழுந்தது போல் இருந்தது. இவ்வளவு பேரும் குடித்து, சாப்பிட்டு மீண்டும் குடித்து இதுக்கு மேல் இயலாது எனும் நிலை வந்து, இனிப் போதும் என்று எழுந்திருக்கும் போது பல நூறு யூரோக்கள் ஆகிவிடுமே. இரவு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதால் மதியம் ஒரு துண்டு பாணோடு நிறுத்தி வயிற்றில் தனியாக இட ஒதுக்கீடும் செய்து வைத்திருந்தேனே. இப்போது நிம்மதியாகச் சாப்பிட முடியுமா?

“எனக்கு காயச்சல் குணமா இருக்கு” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விடலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது. “ஒரு பனடோலை போட்டுட்டு ஓரமாக இரு. ஒருவேளை உன்னுடைய ரெலிபோன்தான் முதலிலை அடிச்சால் காசை கட்டிட்டு வீட்டுக்குப் போ” என்ற பதில் கண்டிப்பாக றொனியிடம் இருந்து வரும் என்பது எனக்குத் தெரியும்.

எனது எண்ண ஓட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் முகத்தில் புன்னகையை ஒட்டிக் கொண்டு மற்றவர்களைப் பார்த்தேன். ஈரல் பறி போய்விடுமோ என்று பயத்துடன் முதலையின் முதுகில் குந்தி இருந்த குரங்கின் நிலையிலேயே அவர்களும் இருந்தார்கள். வந்து விட்டோம். வருவதை எதிர் கொள்ளத்தானே வேண்டும்.

சாப்பாடுகள் மேசையில் இருந்தன. சாப்பாட்டுக்களின் நடுவே கூடைக்குள் “மணி அடித்து விடுவேன்” என்று பயமுறுத்திக் கொண்டு எனது கைத்தொலைபேசி ஒய்யாரமாகப் படுத்திருந்தது. பொதுவாக நான் வெளியே எங்கேயாவது போனால், எனது மனைவி “எங்கே இருக்கிறாய்? எப்போ வந்து சேருவாய்?” என்று அடிக்கடி தொலைபேசி எடுத்து தொல்லை கொடுக்கும் ஆள் இல்லை. வீட்டை விட்டு வெளியே போனவனுக்கு வீட்டுக்கு திரும்ப வருவதற்கான வழி தெரியும்தானே என்பது அவளது எண்ணம். ஒருவேளை `கொஞ்ச நேரத்துக்கு கிழடின் தொல்லை விட்டது எதுக்கு ரெலிபோன் அடிச்சு அதை ஏணி வைச்சுக் கூப்பிட வேணும்´ என்ற எண்ணமாகும் இருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் சிறிதான ஒரு பயம் ரெலிபோனைப் பார்க்கும் போதெல்லாம் வந்து கொண்டிருந்தது. கூடுமானளவு ரெலிபோனைப் பார்ப்பதை தவிர்த்து உணவில் கவனம் வைக்க ஆரம்பித்தேன்.

நேரம் நள்ளிரவையும் கடந்து விட்டிருந்தது. கைத்தொலைபேசிகள் எல்லாம் கூடைக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தன.

“நேரமெல்லே போய்க் கொண்டிருக்குது. எப்ப நாங்கள் வீட்டை போறது? பேசாமல் செலவுகளை பங்கு போட்டு ஆளாளுக்கு பிரிச்சுக் கட்டிடுவம்” ரெக்காடோ சொன்னதில் எல்லோருக்கும் உடன்பாடு இருந்தது. முழுசா நனைவதிலும் பார்க்க சொற்பமாக நனைத்தால் துவட்டிக் கொள்வது சுலபம்தானே?

றொனி எதுவுமே சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே பியர் குடித்துக் கொண்டிருந்தான். பொறுமைகளை நாங்கள் முற்றாக இழந்து விடுவதற்கு முன்னர் ஒருவாறு தூக்கம் கலைந்து ஒரு கைத்தொலைபேசி சிணுங்கியது. எனக்குப் பரிட்சயமான மணியோசை. அது என்னுடைய தொலைபேசியின் அழைப்புமணி. விசயம் தெரியாமல் நள்ளிரவிலே என் வீட்டிலே வில்லங்கம் விழித்துக் கொண்டு விட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.

தொலைபேசியை எடுப்பதற்காக கூடைக்குள் கை வைக்கப் போன என் கையைத் தட்டிவிட்டு றொனி தன்னுடைய தொலைபேசியை எடுத்துக் கொண்டான். இதுவரை மணி ஒலித்து, அழுது கொண்டிருந்தது அவனது தொலைபேசிதான் என அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. என்னுடைய அழைப்புமணியைப் போலவே அவனது அழைப்பு மணியும் இருந்ததால் நான் தடுமாறிப் போயிருந்தேன்.

நிறைய பியர்களை உள்ளே தள்ளியும் மாறாமல் இருந்த றொனியின்முகம் இப்பொழுது மகிழ்ச்சியை மறந்து இறுக்கமானதாக மாறியிருந்தது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த நிலையிலேயே அவன் தொலைபேசியைப் பிடித்திருந்தான்.

றொனியின் காதலி கீறிஸ் நாட்டில், கடற்கரையை ஒட்டிய ஏதோ ஒரு ரெஸ்ரோறண்டில் இருந்து கதைக்கிறாள் என்று தெரிந்தது. அவள் கதைப்பது சத்தமாக இருந்தது. “இங்கே எல்லாம் சந்தோசமாகப் போகுது. அங்கை எப்பிடி? எந்தக் கிழடு காசு கட்டினது?” அவளது கேள்வி எல்லோருடைய காதுகளிலும் கேட்டது. ஆனாலும் அவள் கதைப்பதைக் கேட்டதாக யாருமே காட்டிக் கொள்ளவில்லை.

எது எப்படியோ சனிக்கிழமை சாப்பாட்டுக்கு அழைக்கும்போது, „அனேகமாக சாப்பாட்டுக்கு ஒருத்தரும் காசு குடுக்க வேண்டி வராது“ என்று றொனி சொன்னது மட்டும் உண்மையாகிப் போனது.

ரெஸ்ரோரண்டை விட்டு வெளியே வரும் போது, „…அறுபதை இருபது வெல்லுமா உலகிலே“ என்று கெளரவம் படத்தில் சிவாஜி மாதிரி சத்தமாகப் பாட வேண்டும் போல ஒரு எண்ணம் எனக்குள் வந்து போனது.

- ஆழ்வாப்பிள்ளை
23.08.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை