பேசுவது தமிழா?

Duden என்பது யேர்மன் மொழிக்கான (டொச்) அகராதி. 1880இல் தனது முதற்பதிப்பில் 27000 மூலச் சொற்களை மட்டுமே கொண்டிருந்த அது இப்பொழுது தனது 28வது பதிப்பில் 145000 மூலச் சொற்களை உள்ளடக்கி இருக்கிறது. Duden நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தன்னை புதுப்பித்துக் கொள்ளும். இம்முறை அது என்றும் இல்லாதவகையில் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தஞ்சம் கோருபவர்கள், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் இருந்து 5000 புதிய சொற்களை உள்வாங்கியிருக்கிறது. அதில் வேற்று மொழிகளில் இருந்தும் பல சொற்களை இணைத்திருக்கின்றது. அந்தப் பிறமொழிச் சேர்க்கை கொஞ்சமாக யேர்மனியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கான சொற்கள் ஆங்கிலத்திலேதான் அதிக பாவனையில் இருக்கின்றன. அப்படியே அவைகளை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை. ஆனாலும் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட சொற்களை யேர்மனியரான நாங்கள் அப்படியே பயன்படுத்துவதுதான் உகந்தது. அதைவிடுத்து அதற்கு ஒப்பான மாற்றுச் சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதால் தொழில்சார் துறைகளில் சர்வதேசங்களுடனான தொடர்பாடல்களில் சிக்கல்கள், பின்னடைவுகள் ஏற்படலாம். மேலும் இன்றைய தலைமுறையினர் புதிய தொழில்முறையிலான சொற்களை ஆங்கிலத்தில்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்தோடு வேற்றுமொழிச் சொற்களை டொச் மொழி ஏற்கனவே உள்வாங்கியும் இருக்கிறது. ஆகவே இது மொழி வளர்ச்சிதான்” என்ற ஊடகங்களின் கருத்துகளும் வந்திருக்கின்றன.

Selfie, Selfiestick, Tablet, Social Bot, Undercut, Work-Life-Balance, Low Carb, Hoodie, Urban Gardening, Roadtrip… போன்ற பல சொற்கள் இப்பொழுது புதிதாக டொச் மொழியில் அணிவகுத்து நிற்கின்றன. நான் அறிந்து ஏற்கெனவே தமிழிலே இருந்து டொச்சில் உள்வாங்கப் பட்டிருக்கும் இரண்டு பிரபல்யமான வார்த்தைகளில் ஒன்று ‘கறி’ (curry) மற்றையது ‘கட்டுமரம்’(catamaran). இதில் கறித்தூளோடு இவர்கள் செய்யும் உணவு (Currywurst) வருடத்துக்கு 800 மில்லியன் விற்பனையாகிறது. நாங்கள் ‘கறி’ என்று சொன்னால் “உனது உச்சரிப்பு பிழை ‘கரி’ என்று சொல்” என்று யேர்மனியர்கள் எங்களைத் திருத்தி விட்டுப் போவார்கள்.

`இது தமிழல்ல´ என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து விட்ட பிற மொழிச்சொற்கள் நிறையவே தமிழிலும் இருக்கின்றன. ஒருதடவை ஹொலண்டில் வசிக்கின்ற எனது நண்பர் ஒருவரோடு நான் உரையாடும் போது, “இந்த தொளவார வேலையை விட்டிட்டு உருப்படியான அலுவலைப்பார்” என்று ஊரில் பழைய ஆட்கள் கதைப்பதைப் பற்றிச் சொன்னார். இதில் ‘தொளவார’ என்கின்ற சொல் டச்சு மொழியில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதை அவர் எனக்கு விளக்கினார். டச்சு மொழியில் vertaler என்றால் மொழிபெயர்ப்பு என்று பொருள். டச்சுக்காரர்களின் காலத்தில் எங்களின் முப்பாட்டனார் பலர் வீட்டில் உள்ள வேலைகளை விட்டு விட்டு வேட்டியை இறுக கட்டிக்கொண்டு அப்பொழுது ஆண்டவனுக்கு விசுவாசமாக இந்தத் தொளவார் வேலைக்குப் போயிருப்பார்கள் போலும். அதனால்தான் ஊரில் ஆச்சிமார்கள் “துலைஞ்சு போன தொளவார் வேலை” என்று சலித்துக் கொண்டார்களோ என்னவோ? இதேபோல அன்று பேசியவர்களின் தமிழில் ஆஸ்பத்திரி, தபால் கந்தோர், வங்குரோத்து… என்று பல சொற்கள் இருந்தன. அவை இப்பொழுதும் பழக்கத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

அந்த ஹொலண்ட் நண்பர்தான் என்னைக் கேட்டார், “கொம்பியூற்றரை தமிழில் கணிணி என்று மொழி பெயர்த்திருக்கிறார்களே ‘ணி’க்கு அருகே இன்னொரு ‘ணி’ வந்து உட்காரலாமா? அப்படி வேறு ஏதாவது சொற்கள் தமிழில் இருக்கின்றனவா?” என்று. அப்படியான சொற்களை தேடிப் பாரக்க நான் நேரத்தை ஒதுக்கவில்லை. ஆனால் செல்லிடைத்தொலைபேசி, மடிக்கணிணி, விசைப்பலகை, மகிழுந்து, பாரவுந்து, தொடருந்து, பேருந்து என்று இப்பொழுது பல வார்த்தைகள் எங்களிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. எவ்வளவு பேர் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்தப் போகிறார்கள்? எவ்வளவு காலத்திற்கு அந்தச் சொற்கள் வாழப் போகின்றன? என்றொரு கேள்வி இருக்கின்றது.

எனது வேலை நண்பன் Joao போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். போர்துக்கீச மொழியில் இருந்து ஏகப்பட்ட சொற்கள் எங்களது தமிழில் கலந்திருக்கின்றன. ஆனால் ‘பேனா’ என்ற சொல் அவர்களது மொழியில் இருந்துதான் தமிழுக்குள் நுளைந்திருக்கிறது என்பதை அவனுடன் உரையாடும் போதுதான் என்னால் அறிய முடிந்தது. பேனா என்றால் போர்த்துக்கீச மொழியில் இறகு என்று பொருள். முன்னைய காலத்தில் பறவைகளின் இறகுகளின் முனையை மையில் தொட்டே எழுதுவார்கள். எங்களிடம் அப்பொழுது எழுத்தாணிதான் இருந்தது. எழுத்தாணியைவிட பேனா எழுதுவதற்கு வசதியாகத் தெரிந்ததால் ‘பேனா’ தமிழில் இலகுவாக நுளைந்து நிலைத்தும் விட்டது. இன்னுமொரு சொல்லை Joaoவிடம் இருந்து அறிய முடிந்தது. அது Nattal என்ற சொல். Nattal என்றால் போர்த்துக்கீச மொழியில் யேசு பிறந்ததினம். அதுவே எங்களுக்கு நத்தார் என ஆகிப் போனது. தமிழில் இருந்து எடுக்கப்பட்ட ‘மாங்காய்’ என்ற சொல் போரத்துக்கீச மொழியில் இடம் பெற்றிருக்கிறது. பழமானுலும் சரி காயானாலும் சரி போர்த்துக்கீசர்களுக்கு அது மாங்காய்தான்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது ஔவையார் சொன்ன ஆத்திசூடி. இதில் அன்னை(Anne) என்ற சொல் துருக்கிய முகமதியர்கள் எங்களுக்கு தந்துவிட்டுப் போனது. “அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்? தமிழா நீ பேசுவது தமிழா? “ என்று தேனியை செல்லப்பா ஏன் தனது தமிழ் வாயால் அம்மாவை ‘அன்னை ‘என்று அழைத்துப் பாடினாரோ தெரியவில்லை.

புற்றளை மகா வித்தியாலயத்தில் நான் இரண்டாவது வகுப்பு படிக்கும் போது ‘கதிரை’ என்று சொல்லப்போக “மூதேவி அதுக்குப் பேர் கதிரை இல்லை, நாற்காலி” என்று வேலுப்பிள்ளை வாத்தியார் என் காதைத் திருகியபோது வலி தாங்க முடியாமல் கால் பெருவிரல்களில் எம்பி, கொஞ்சம் மேலெழுந்து “ஐயோ” என்று நான் கத்த “ஐயோ என்று சொல்லாதே. அது யமனின்ரை பெண்சாதியின்ரை பெயர். தன்ரை பெண்சாதியை ஆர் கூப்பிடுறது என்று யமன் இப்ப இஞ்சை வந்திடப் போறான்” என்று தனது உயிரை நினைத்து பதறியபடி என் காதுப் பிடியை வேலுப்பிள்ளை வாத்தியார் கைவிட்டது நினைவில் நிற்கிறது.

நெருப்பில் வாட்டிய, ஒரு பக்க நுனி கறுப்பான பிரம்பு ஒன்று வேலுப்பிள்ளை வாத்தியாரின் மேசையில் அன்று இருந்ததால் “மேசைக்கும் நாலு கால்கள்தானே அதை எப்படிச் சொல்வது?” என்று அப்பொழுது என்னால் கேட்க முடியாமல் போயிற்று. அந்தக் காதுத்திருகலின் வலியை நான் ஏற்கெனவே அனுபவித்து இருப்பதால் இதை வாசித்து விட்டு யாரேனும் என் காதைத் திருக வந்துவிடாதீர்கள்.

- ஆழ்வாப்பிள்ளை
31.08.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை