குமாரியான குழந்தை

ஒருவரை ஒருவர் வேலைத்தளத்தில் கிண்டலடிப்பது வழமைதான். ஆனாலும் மேற்கத்தைய நாடுகளில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆசிய நாட்டவரைக் கிண்டலடிப்பது கொஞ்சம் கூடத்தான்.

யேர்மனியின் ஸ்ருட்கார்ட் விமான நிலையத்தில் மற்றைய விமான நிலையங்களில் உள்ளது போன்று நவீன தொழில்நுட்பத்தில் கழிப்பிட அறைகள் இருக்கின்றன. அந்த கழிப்பிட அறைகளின் வரிசையின் இறுதியில் ஆசிய நாட்டவருக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கழிப்பிட அறை ஒன்றும் இருக்கிறது.

“ஸ்ருட்கார்ட் எயார்போட்டுக்குப் போனால், நீ கடைசி ரொயிலற்றுக்குத்தானே போவாய்?” என்று வேலையிடத்தில் என்னைச் சீண்டிப்பார்ப்பது அவர்களுக்கு அன்று இனிமையாக இருந்தது. ‘குந்தி இருப்பதே மலம் கழிப்பதற்கான சிறந்த முறை’ என்ற ஆய்வுத் தகவலை தேடி எடுத்து வந்து அவர்களுக்கு காட்டியதற்குப் பிறகு அவர்கள் ஸ்ருட்கார்ட் எயார்போட்டை மறந்தே போய் விட்டார்கள்.

சமீபத்தில் வந்த ஒரு பத்திரிகைச் செய்தியை சென்ற கிழமை எனது பார்வைக்குத் தந்து “குழந்தைப் பருவத்தில்தான் மனிதனின் எதிர்கால ஆரோக்கியம் நிச்சயிக்கப்படுகிறது. குழந்தையாக இருக்கும் போது, விரைவாகக் கற்கும் திறன் அதனிடம் இருக்கிறது. ஒரு குழந்தை வளர்வதற்கு பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. இதை எல்லாம் யோசிக்காமல் மதங்களின் பெயரால் ஏன்தான் குழந்தைகளின் வாழக்கையை வீணடிக்கிறார்களோ? இவர்களை எல்லாம் குழந்தைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்று காதுக்குள் கத்திவிட்டுப் போனார்கள்.

நாய்க்கு எங்கே அடித்தாலும் அது காலைத்தான் தூக்கும். இவர்களுக்கு என்னைக் கிண்டலடிக்க ஏதோ ஒன்று கிடைத்து விட்டது என்பது புரிந்தது. “பாரம்பரியம் என்று எல்லா மதத்தவர்களும் தேவையில்லாத சில விடயங்களை தலையில் தூக்கிக்கொண்டுதான் அலைகிறார்கள்” என்று சொல்ல எத்தனித்தேன். ஆனாலும் „முதலில் செய்தியை வாசி“ என்று உள்ளுணர்வு சொல்ல பத்திரிகையைக் கையிலே எடுத்தேன்.

நேபாள நாடு ஏறக்கக்குறைய யேர்மன் நாட்டின் பாதி நிலப்பரப்பைக் கொண்டது. இங்கேதான் உலகின் மிகப் பெரிய மலையான இமயமலையின் பெரும்பகுதி இருக்கிறது.

நேபாளத்தில் காட்டமண்டு நகரத்தில் தலேயூ பவானி (Taleju Bhawani) என்ற ஆலயம் உள்ளது. இது 1564இல் மகேந்திர மாலா என்ற அரசனின் ஆட்சியில் அரச குடும்ப வழிபாட்டுக்காக கட்டப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறைதான் வெளியார் தரிசனத்துக்காக இந்த ஆலயம் திறக்கும். இந்த ஆலயத்ததுக்கு அவதார கடவுளாக குமாரிதேவி என்று சிறுமி ஒருவரை தெரிவுசெய்து வழிபடும் பாரம்பரிய முறை ஒன்று அங்கே இருக்கிறது.

பற்கள், குரல், விழியின் நிறம், தொடைகளின் அழகு… என்று 32 அங்க இலட்சணங்களும் ஒருங்கே பெற்ற ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த சிறுமியே குமாரிதேவியாக தெரிவு செய்யப் படுவார். இந்தச் சிறுமியான குமாரிதேவி, குமரியாகும் நேரத்தில் அவதார தெய்வம் எனும் தகுதியை இழந்து விடுவார். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டால், அல்லது காயங்கள் ஏற்பட்டு அதிக இரத்தம் வெளியேறும் நிலை வந்தால் மட்டுமே குமரியாகும் முன்னரே குமாரிதேவி கடவுள் என்ற நிலையில் இருந்து நீக்கப்படுவார். அதுவரை அவளை அவளது பெற்றோர்களே நெருங்க முடியாது.

குமாரிதேவி வணங்குதலுக்கு உரிய கடவுளானாலும், அவருக்கு கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார். நான்கும் மூன்றும் எவ்வளவு என்று ஆசிரியர் கேள்வி கேட்கும் போது குமாரி பதினேழு என்று பதில் சொன்னால் அதற்கு ஆசிரியர் சரியென்றுதான் தலையாட்ட வேண்டும். விடை பிழையானது என்று சொன்னாலோ அல்லது இதுதான் சரியானது என்று திருத்திச் சொன்னாலோ அது தெய்வக் குற்றமாகி விடும். இப்படி ஆசிரியரே பணிந்து போகும் நிலை இருந்தாலும் பெற்றோர்களுடன் இணைந்து வாழ குமாரிதேவியால் அவள் பூப்படையும் காலம்வரை முடியாது. அதேநேரம் வெளியாருடனான தொடர்புகளும் கிடையாது. குமாரிதேவியின் கால்கள் கூட நிலத்தில் படுவதற்கு அனுமதி இல்லை. வருடத்தில் நடக்கும் 13 புனித நாட்களில் மட்டுமே குமாரிதேவியின் தரிசனம் மக்களுக்கு கிடைக்கும். அதோடு செப்டெம்பரில் நடக்கும் ஒன்பது நாள் விழாவில் (நான் நினைக்கிறேன் ஒருவேளை அது நவராத்திரி விழாவாக இருக்கலாம் என்று) நகைகள் அணிந்து தேரில் பவனி வருவாள்.

இந்த வருடம் செப்ரெம்பரில் ரிஸ்ணா சக்யா (Trishna Shakya) என்ற 3 வயதுக் குழந்தை குமாரிதேவியாகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறாள்.“தமது குழந்தையின் வாழ்வை வளப்படுத்துவதுதானே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்” என்று இந்தத் தடவை எனது வேலையிடத்தில் அவர்கள் என்னைக் கேட்ட பொழுது என்னால் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

- ஆழ்வாப்பிள்ளை
3.10.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை