இலவசமாக கொஞ்சம் ஹைட்ரஜன் சல்பைட் தரவா?

கெமிரிக் எனது வேலையிடத்து நண்பன். ஒருநாள் திடீரென எழுந்து நின்று தனது வலது கை மோதிர விரலை நீட்டி “இழு” என்று கண்களால் சாடை காட்டினான். விரல்களில் வலி ஏற்பட்டால் விரலை இழுத்து நெட்டி முறிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒருவேளை கெமிரிக்குக்கு விரலில் வலி ஏதாவது ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் அவனது விரலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான் அவன் பின் பக்கம் இருந்து “புர்..புர்..” என்ற சத்தம் வரத் தொடங்கியது. நான் திகைத்துப் போனேன். சொர்க்கம் பக்கத்தில் வந்தது போல் கண்ணை மூடி கெமிரிக் சுகம் கண்டு கொண்டிருந்தான். சத்தம் அடங்கியபின் கண்களைத் திறந்து, “வயித்திலை நீண்ட நேரமா ஒரு அழுத்தம் இருந்தது. இப்போ அது சரியா போச்சுது. நன்றி” என்றான். இது கெமிரிக்கின் ஒரு விளையாட்டு என்பதை பின்னர் மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். திடீர் திடீரென எழுந்து நின்று “யாராவது விரல்களை இழுத்து விடுங்கள்” என்பான். நாங்கள் மறுத்து விட்டால் தானே தனது விரலை இழுத்து பயம் காட்டுவான். அவனது இந்தச் செயல் பழகிப் போனதால் இப்பொழுது எங்களில் யாருமே அவனது மோதிர விரலை மறந்தும் தொட்டுப் பார்ப்பதில்லை. ஆனாலும் “புர் புர்... “ சத்தம் அவனிடம் இருந்து வந்துகொண்டுதான் இருந்தது.

இன்னும் ஒரு நாள் வேலையிடத்தில் மதியம் சாப்பிட்டு விட்டு லிப்றில் ஐந்தாம் மாடியில் இருந்து வந்து கொண்டிருந்தோம். நான்காம் மாடியில் ஒரு ஆணும், நான்கு பெண்களும் லிப்றில் பயணிக்க நின்றிருந்தார்கள். “போதுமான இடம் இல்லை. கொஞ்சம் காத்திருங்கள். லிப்ற் திரும்ப வரும்” என்று கெமிரிக் அவர்களிடம் பணபாகச் சொன்னான். கெமிரிக் சொன்னது அங்கே நின்று கொண்டிருந்த ஆணுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆண் லிப்றுக்குள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “16 பேர்கள் பயணிக்கலாம் என்று போட்டிருக்கு. உள்ளே ஒன்பது பேர்கள் தானே நிற்கிறீர்கள்” என்று சொல்லிவிட்டு நான்கு பெண்களுடன் உள்ளே நுளைந்து விட்டான். லிப்ற் தாங்கும் எடையை வைத்தே எத்தனை பேர்கள் பயணிக்கலாம் என்று குறிப்பிட்டிருப்பாரகள். ஆனால் உண்மையில் அத்தனை பேரும் ஒருங்கே நின்று பயணிப்பது என்பது சிரமமான சூழ்நிலையாகவே இருக்கும்.

கெமிரிக்குக்கு அந்த ஆண் அப்படி நடந்து கொண்டது பிடிக்கவில்லை. “பொம்பிளைகளுக்கு விலாசம் காட்டுறான் போலை. ஏதாவது இவனுக்கு செய்யவேணும் போலை இருக்கு. நேற்று ராத்திரி புளூமன்கோலும் (cauliflower), உருளைக்கிழங்கும், பன்றிச்சிங்கனும் (ham) சேர்ந்த சாப்பாடுதான் சாப்பிட்டனான். இப்ப மத்தியானமும் நல்லா வெட்டினதாலை வயித்திலை பயங்கர அழுத்தமாக இருக்கு. யாராவது என்ரை மோதிரவிரலை தயவு செய்து இழுங்கோ” என்று எங்களுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னான். எங்களுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சிலர் சாதாரணமாகச் சிரித்துக் கொண்டோம். நடக்கப் போவதை அதீதமாகக் கற்பனை செய்து கொண்டு சிலர் அடக்க முடியாமல் பலமாகச் சிரித்தாரகள். ஆனாலும் லிப்ற்றுக்ககுள் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை. தன்னை ஏதோ கேலி செய்கிறார்கள் என்று அந்த ஆண் மட்டும் குழம்பிப்போயிருந்தான் என்பது அவனது முகத்தில் இருந்து தெரிந்தது.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு சிறிய செய்தி, எனக்கு கெமிரிக்கின் மோதிர விரலை நினைவு படுத்தியது. Medicinal Chemistry Communications என்ற ஆய்வுப் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் பிரித்தானிய பல்கலைக் கழக பேராசிரியர் Matt Whiteman ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையே அது.

விவாகரத்துகளுக்காக பல காரணங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. குறட்டை, குசுக்கள் விடுதல் கூட அந்த காரணங்களுக்குள் அடங்கி இருக்கிறன. கட்டுப்படுத்த முடியாமல் அதுவும் இரவில் படுக்கையறையில் உடலில் இருந்து வெளியேறும் வாயுவும் இல்லற வாழக்கையின் முறிவுகளுக்கு இங்கே ஒரு பிரதான காரணியாக இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்கள், இயற்கையாகவே அமைந்துவிட்ட உடலமைப்புகள் என்று பல விசயங்கள் வாயு வெளியேற்றத்துக்கான காரணங்களாக இருக்கின்றன. ஆனால் உடலில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் மனதளவில் வெறுப்பை ஏற்படுத்தினாலும் அது வாழ்க்கைத் துணைவருக்கு சில நல்ல விளைவுகளையே தருகிறது என பேராசிரியர் Matt Whiteman அறிவித்திருக்கிறார். நீண்டகாலம் வாழ்வதற்கான காரணியாக அது இருக்கிறது என அவர் தனது ஆய்வில் மேலும் தகவல் தந்திருக்கிறார். உடலில் இருந்து வெளியேற்றப்படும் அந்த வாயுவில் அதிகளவு
ஹைட்ரஜன் சல்பைட் இருக்கிறது. அந்த வாயு, நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. அத்தோடு சிறிய அளவிலான மின் அதிர்வை உடலின் செல்களில் ஏற்படுத்தியும் விடுகிறது. புற்றுநோய், பக்கவாதம் மற்றும் இதயத் தாக்குதல்கள் போன்றவைகளில் இருந்து பாதுகாப்பதோடு முதுமை, அதனூடாக வரும் ஞாபகமறதி போன்றவற்றில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது என அவரது ஆய்வின் முடிவாகப் பதிவிட்டிருக்கிறார்.

ஆக பேராசிரியர் Matt Whiteman அறிவித்திருப்பதைப் பார்த்தால், இல்லறவாழ்க்கையில் கணவனும் மனைவியும் தங்களை அறியாமலே ஆளாளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என விளங்கிக் கொள்ள முடிகிறது.

எல்லோரும்தான் குசு விடுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி வெளிப்படையாகக் கதைக்கத்தான் தயங்குகிறார்கள். இது ஒரு இயற்கையான விடயம்தான். வெட்கம் மற்றும் சங்கடம் இரண்டும், அதை மற்றையவர்கள் முன் செய்ய, பேச அவர்களைத் தடுக்கிறது.

யேர்மனியில் எழுத்தாளர் Jan Rein வெளியிட்ட304 பக்கங்கள் கொண்ட Das Pups-Tabu என்ற புத்தகம், குசு பற்றிய அவரது அனுபவங்களைப் பேசுகிறது. 9,99 யூரோ விலை கொண்ட அந்தப் புத்தகம் யேர்மனியில் நல்ல விற்பனையில் இருக்கிறது.

- ஆழ்வாப்பிள்ளை
24.11.2017

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை