முள்ளிவாய்க்கால் நினைவுகள்

முள்ளிவாய்க்கால்
அது அப்படியே இருந்து விடட்டும்
ஒரு இன அழிவின் மிச்சத்தின் எச்சங்களாய்
அது அப்படியே இருந்து விடட்டும் - அங்கே
மாண்டவர் ஆத்மாக்கள் சாந்தியடையத் தேவையில்லை
விடுதலையின் உயிர்ப்பாய் அவை அங்கேயே உலாவட்டும்
அங்கே எஞ்சிக்கிடக்கின்ற புலிவரி உடைகள்
அவை அப்படியே இருந்து உக்கிவிடட்டும்
காலம் எதிர்பார்க்கும் காலத்தில் அவை தானாக உயிர்விடும்
அஞ்சலி அரசியலும் அகிம்சை நாடகமும்
முள்ளிவாய்க்காலுக்கு தேவையில்லை
அது போர்தின்ற மண்ணாகவே இருந்து விடட்டும் - அது
 ஒரு தலைமுறை தன் அடுத்த தலைமுறைக்கு கொடுத்த
சிந்தனைத் தெறிப்பாய் திகழட்டும்
அதை விட்டு விடுங்கள்
எஞ்சி இருக்கும் பதுங்கு குழிகளும் உடமைச்சிதறல்களும்
அப்படியே இருக்கட்டும் நீங்கள்
அதை தொட்டு விடாதீர்கள்
உங்கள் கைகளால் அவை அழுக்காகிவிடும்
தேவதூதர்களுக்காய் கட்டப்படாமல் காத்திருக்கும் எருசலேம் யூத தேவாலயம் போல்
முள்ளிவாய்க்காலும் அப்படியே காத்திருக்கட்டும் தன் மீட்பர்களுக்காய்.

- தி. த. நிலவன்
Quelle - https://www.facebook.com/photo.php?fbid=640933439631990&set=a.114014125657260.1073741828.100011460186618&type=3

சிலவருடங்களுக்கு முன் ஒரு வலிமைமிகு இனத்தின் வலிமிகுந்த நாட்கள் இவை
உலகெங்கும் பரவி வாழந்த ஒரு பேரினத்தின் இறுதி நாட்கள் இவை
மாவோவின் சீனவிடுதலைக்கான நெடும்பணயம் போல்
கோசிமின்னின் வியட்நாமிய விடுதலைக்கான நெடும்பயணம் போல்
தமிழினத்தின் விடுதலைக்கான நெடும்பயணத்தின் இறுதிநாட்கள் இவை
ஒரு உன்னத விடுதலைப்போராட்டத்தை உலகவல்லாதிக்கம் அழித்து முடிக்க இருந்த இறுதி நாட்கள் இவை
இரத்தமும் தசையுமாக தமிழன் வீதியோரங்களில் செத்தக்கிடந்த நாட்கள் இவை
நாட்டிற்கே உணவழித்த ஒரு மக்கள் கூட்டம் கஞ்சித்தொட்டிக்கு வரிசையில் நின்று செத்து மடிந்த நாட்கள் இவை
இன்றைய இதே நாட்களில் ஒரு பெரும் அரசியல் அவலம்
அதே முள்ளிவாய்க்கால் மண்ணின் மடிந்த உயிர்களின் பிணங்களை பிய்த்து உண்ண தயாராகிக் கொண்டிருக்கின்றது

- தி. த. நிலவன்
Quelle - https://www.facebook.com/photo.php?fbid=638445269880807&set=a.114014125657260.1073741828.100011460186618&type=3

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது. நானும் அம்மாவும் வெளியில் வந்தோம். ”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளாச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன். இது வரை காலமும் ஒரு சொட்டுக் கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண் அன்று அழுதது. இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து இடைநடுவே ஓர் இடத்தில் அன்றைய இரவு கழிக்க வேண்டிய சூழ் நிலை 60mm மோட்டார் செல்கள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே வெட்டி இருந்த அந்த பதுங்குகுழிக்குள் அன்றிரவு ரணமாய் சொல்லமுடியாத அளவு சிந்தனைகளால் நிரம்பியதாய் அந்த இரவு நகர்ந்தது.

- தி. த. நிலவன்
Quelle - https://www.facebook.com/photo.php?fbid=641147426277258&set=a.242296609495677.1073741829.100011460186618&type=3

அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாகி விட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை. காலை வேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்புப் பக்கமாக நகர்ந்தோம். சரமாரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன. செல்கின்ற வழியெங்கும் பிணங்கள். ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இருந்து இருந்து நகர்ந்தோம். இறுதியாக புதுக்குடியிருப்புப் பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவைச் சந்திக்க நேர்ந்தது. அந்த இடம் அடுத்து ஒரு அபரிவிதமான யுத்தம் ஒன்றுக்கு தயாரன இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.

அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்து கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும் படி சொன்னார். சிறிது தூரம் தானும் வந்தார். வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது. நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம். சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன. ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன். அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுறுதி கொண்டிருந்தார். அதே போல் எங்களுக்கும் அதைச் சரியாகத் தந்திருக்கிறார். அதனாலேயோ என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை.

- Thavabalan Thirunilavan
Quelle - https://www.facebook.com/photo.php?fbid=641541879571146&set=a.114014125657260.1073741828.100011460186618&type=3&theater

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை