முள்ளிவாய்க்கால் நினைவுகள்

மே 15 2009
கடற்கரைப் பகுதியில் சண்டை கடும் இறுக்கமாக இருந்தது. காலை 9 மணியளவில் இருந்து மதியம் 1 மணி தாண்டியும் சண்டை ஓயவில்லை. கடற்கரையைக் கைப்பற்ற படையினர் எடுத்த நகர்வு கடும் இறுக்கத்திலும் அவனுக்கு வெற்றி கிடைத்ததாகச் சொன்னார்கள். கடலும் மூடியாச்சு. 120அஅஇ60அஅஇ .50 caliber,LMG  என்று அனைத்துக் கனரக ஆயுதங்களினதும் சூட்டு எல்லைக்குள் வந்து விட்டிருந்தோம். வேவு விமானம் எந்தவித ஓய்வுமின்றி வட்டமிட்டபடியே இருந்தது. காலையில் இருந்து பகல் வரை எறிகணைகள் கணக்கின்றி ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. யாரோ ஒரு போராளி அண்ணா தியாகசீலத்துக்கு அடிவிழுந்திட்டுதாம் என்று சொல்லியபடி போனார்.

மதியம் செல் அடி கொஞ்சம் ஓய்வாக இருக்க சில போராளிகள் வரிசையாக நடந்து வந்தபடி இருந்தார்கள். எமது பதுங்கு குழியைக் கடக்கையில் அவர்களில் ஒருவராக சுதா மாமாவும் (தங்கன்) நடந்து சென்றபடி இருந்தார். அது தான் நான் அவரைக் கண்ணால் கண்ட கடைசிச் சந்தர்ப்பம். அருகில் நின்ற ஒரு அண்ணா அவர்களோடு மாதவன் மாஸ்ட்டரும் போவதாகச் சொன்னார்.

மதியம் 3 மணியளவில் எமது இருப்பிடத்தில் இருந்து கடற்கரைப் பக்கமாக 150அ களில் இருந்த பனங்கூடலொன்றில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததன் காரணமாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு தொகை ஆயுதங்களும் வெடித்தெரிய, களஞ்சியப்படுத்தியிருந்த எரிபொருட்களும் எரியத்தொடங்கின. நெருப்பின் சுவாலை பெரும் உயரத்துக்கு எழுந்து பனைமரங்களைப் பொசுக்கியபடி இருந்தது. நெருப்பு வர வர எம்மை நோக்கி நகர்ந்ததால் உடனடியாக பைகளை எடுத்தபடி நகர ஆயத்தமானோம். ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் நெருப்பு கட்டுப்பாட்டுக்குள் வருவது போலிருந்தது.

எனவே சிறிது நேரம் அந்த இடத்தில் இருந்து நோட்டமிடுகையில் எமது இருப்பிடத்துக்கு முன்னாலிருந்த வீட்டில் இருந்த காயமடைந்த போராளி அண்ணாமாரும் அங்கிருந்த பொருட்களும் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டபடி இருந்தது. அவர்களது கிணற்றடியில் ஒரு சிறுவன் நிற்பதைப் போல இருந்தது. அது கனியகன். மேற்சட்டை இல்லாமல் வழமைபோல போடும் கறுப்பு நிற நீள் காற்சட்டையோடு கிணற்றுக்குள் பார்த்தபடி நிற்க ஒரு அண்ணா தண்ணியள்ளியபடி இருந்தார். கனியகனையும் அன்றுதான் கடைசியாகப் பார்ப்பேன் என்று எண்ணியிருக்கவில்லை.

பழகியது சில மாதங்களே என்றாலும் தனது அக்காவோடு சண்டை பிடிக்க என்னோடு சேரும் 'கனியகனும்' தங்கையும் தோழியுமாயிருந்த 'ஜீவப்பிரியாவும்' இடப்பெயர்வின் போது மூங்கிலாற்றில் தனது இரு பிள்ளைகளோடு எனக்கும் சேர்த்து ஒரு தட்டில் சோறு கறி குழைத்து தனது கையால் தீத்தி விட்ட 'குருவி' அன்ரியும் இன்றும் கண்களுக்குள் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

நெருப்பின் பரவல் குறைய மீண்டும் பங்கருக்குள் வந்தோம். பக்கத்து கொட்டிலில் இருந்தவர்கள் நந்திக்கடல் பக்கமாக சென்றிருந்தனர். அவர்களது பங்கருக்குள் அன்று இரவு நானும் ஒரு அண்ணாவும் படுத்து உறங்கினோம். நள்ளிரவு தாண்டுகையில் முன்னாலிருந்த வீடு மீது விழுந்த மோட்டர் எறிகணை அங்கிருந்த எரிபொருட்களையும் ரவைகளையும் வெடிக்கச் செய்தது. குறைவான நேரம் நித்திரை கொண்டாலும் அன்று நான் நினைக்கவில்லைஇ என்னை எனது தாய் தந்தையர் பெற்றெடுத்த சுதந்திர தேசத்தில் அன்றிரவுதான் நான் இறுதியாக நித்திரை கொள்ளப்போகிறேன் எ;பதை. ஆக்கிரமிப்புப் படைகளும் நிம்மதியாக நித்திரைகொள்ள விடவில்லை.

- Swarnamyuran Thiyagarajah
Quelle https://www.facebook.com/swarnamyuran/posts/1687460254673940

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை