கொட்டங்கா

1996 - அப்ப சரியான சின்னப் பெடியன் வன்னியால வந்த புதுசு. பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்டாலும் மன்னாரைத்தான் பேய்த்தனமா பிடிக்குமெனக்கு. வன்னிக்காலயும் யாழ்ப்பாணத்தாலயும் இடம்பெயர்ந்து வந்த சனத்துக்கு அடைக்கலம் குடுத்த பூமி இது.

இப்பத்தானே பில்ற்றர் தண்ணி லீற்றர் 3 ரூபாக்கு விக்கிறாங்க. இன்னும் என்னத்தையெல்லாம் விக்கப்போறாங்களோ..?? அந்த நேரம் மன்னாரில பத்துப் பண்ரெண்டு வீடுகளுக்கு ஒரு குழாய் இருக்கும் காலம்பிற ரெண்டு மணி நேரம் அதுல தண்ணி வரும். மன்னாரில இருக்கிற முழுக் குடும்பப் பொம்பிளைகளையும் குழாயடில பார்க்கலாம். சில பணக்காரக் குடும்பம் மட்டும் ராங் கட்டி பௌசர் ல கீரித்தண்ணி அடிச்சு வைப்பாங்க. தண்ணி பிடிக்க வாற சனத்தில பத்துப் பேர்ல நாலு பேர் இடம்பெயர்ந்து வந்த சனம்தான். ஏதும் சின்னப் பிரச்சனை வந்தாலும் உடன வந்து விழுற வசனம் "வந்தான் வரத்தானுக்கெல்லாம் தண்ணி குடுக்கேலாது " எண்டு தொடங்கி பச்சைத் தூசனத்தில போய் நிக்கும். இப்பிடிச் சிலநேரம் எங்கட அம்மா ஆரோடயும் கொழுவிக்கொண்டு வந்திடுவா. மனிசியும் லேசுப்பட்ட ஆளில்ல தண்ணியெடுத்து முடியும் மட்டும் ஒரே புடுங்குப்பாடும், கிழிபாடாவும் தான் கிடக்கும் குழாயடி. அப்பா குழாயடிப் பக்கமே போறேல்ல. ஆனால் வீட்ட இருந்து கொண்டு "சாதி சரியில்லை சாதி சரியில்லையெண்டு கொண்டாட்டங்களுக்குப் போனால் எத்தின வீடுகள்ள பச்சைத் தண்ணி கூட குடிக்காமல் வந்திருப்பாய். உனக்கு இது வேணுமடி" எண்டு அம்மாவத்தான் பேசுவார். காலம்பிற போட்ட சண்டை அண்டைக்கு இரவு கோலங்கள், மெட்டியொலி நாடகம் பார்கிற இடத்திலயே சமாதனத்தில முடிஞ்சுடும்.

அந்த நேரம் இலங்கையிலயே மன்னாரில மட்டும் தான் சன் ரீவி வேலை செய்யும் ரெலோக்காரங்கள் தான் பெரிய குடை பூட்டி மன்னாருக்குள்ள இழுத்துக் குடுத்தவங்கள். அதோட பொதிகை DD one எண்டு சொல்லுற சனலும் ஸ்ரீ லங்கா ட ITN சனலும் இழுக்கும். எங்கட வயசுப் பொடி பெட்டையளுக்கு பொதிகை வேலை செய்தால் காணும். அதில தானே சக்திமான் போடுவாங்கள். ஊருக்குள்ள எங்கயாவது ஒரு விட்டில தான் ரீவி இருக்கும் சக்திமான் தொடங்க ஒரு மணிநேரம் முன்னுக்கே அங்க போய் அன்ரனாவ திருப்பித் திருப்பி பொதிகையை பிடிச்சு வைச்சுடுவோம். அந்த வீட்டுக்காரம்மா பொடி பெட்டையளட்டை தன்ரை வீட்டு சின்னச் சின்ன வேலையள் முழுக்க வாங்கிப் போட்டுத்தான் ரீவி போட்டு விடுவா.

பாவம் ரீவி இருக்கிற வீட்டில உள்ள பெரிய அண்ணாமாருக்கும் வீட்டுக்காரா அம்மாமாருக்கும் தான் அடிக்கடி சண்டை வரும். ITN ல போடுற இந்தியா ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மட்ச் பார்க்கிறதா..?? சன்ரீவி ல மெட்டியொலி பார்க்கிறதா..?? எண்டு பெரிய பிரச்சினை போகும். ஆனால் எங்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. சக்திமான் முடிஞ்ச உடன நேர போறது ஈ.பி.ஆர்.எல்.ஏவ்ப் ஒபிஸ்க்கு முன்னுக்கு இருக்கிற கொட்டங்கா மரத்துக்குத்தான். கீழ கொட்டுண்டு கிடக்கிற முழுக்கொட்டய்களையும் பொறுக்கி ஒரு கல்லுக்கு மேல வைச்சு இன்னொரு கல்லால குத்தி உடைச்சு உள்ளுக்க இருக்கிற பருப்பெல்லாத்தையும் சேர்த்து உடைச்சு முடிய நானும் தங்கச்சியும் பங்கிட்டு சாப்பிடுவோம். அந்த ரேஸ்ட் டே தனி தான். அதை இப்ப நினைச்சால் காக்கா முட்டை படம் பார்க்கிற நினைப்புத்தான் வருது. அப்ப என்னட்ட இருந்த நல்ல காற்சட்டை 2 தான். அதுவும் சுரேஸ் அண்ணா போட்டுட்டு அளவில்லை என்டு தந்த காற்சட்டை. அதவிட ஒரு நல்ல காற்சட்டை என்டால் பள்ளிக்கூடக் காற்சட்டை. சக்திமான் வரைக்கும் பொறுமையா இருக்கிற அம்மா கொட்டங்கா பொறுக்கப்போய் நீலக்காற்சட்டை முழுக்க கயரப்பிரட்டிக் கொண்டு வார என்னில ஒரு பேயாட்டம் ஆடிப்போடுவா. குண்டியும் முதுகும் புளிச்சுப் போயிரும். அண்டைக்கு வாங்கிற அடியில இனிமேல் கொட்டங்கா மரப்பக்கம் போகக்கூடாதென்டு எடுக்கிற சபதம் அடுத்த ஞாயிறு சக்திமான் முடிய ஏனோ மறந்து போயிடும். இண்டைக்கும் கொட்டங்காயைப் பார்த்தால் அதை உடைச்சுச் சாப்பிட ஆசையா இருக்கும். வளந்திட்டம். பெரியமனிசர் ஆகிட்டம். ஆரும் ஏதும் நினைப்பாங்களெண்டு தொட்டும் பார்க்கிறேல்ல. ஆரும் ஏதும் நினைக்கட்டன். வளந்திட்டம் ஆனால் இன்னும் பெரிய மனிசர் ஆகயில்லை. எவ்வளவோ பெரிய தகிடுதத்தங்களை யாருக்கும் தெரியாமல் செய்யிறம். ஆனால் ஒரு கொட்டங்காயை உடைச்சு சாப்பிட முடியாத அளவுக்த்தான் வளந்திருக்கிறம்..!!

- ந. பிரதீப்
Quelle - https://www.facebook.com/

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை