டானியல் கிழவரும் நானும்

என் பல்கணியிலிருந்து லிண்டன் மரம்நான் ஒரு பயந்தாங்கொள்ளி. சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் பயப்படுவேன். லிப்றினுள் கூட நுழைய மாட்டேன். 14வது மாடிக்கும் படிகளிலேயே ஏறுவேன். பல்கணிக்கதவினூடு வீட்டுக்குள் நடந்து வரும் காற்றின் காலடிச் சத்தம் கேட்டே கலவரப் படுவேன்.

இருந்தாலும் காலையில் எழுந்ததும் யன்னல்களையும், பல்கணிக்கதவையும் திறந்து வைத்து விடுவேன். பல்துலக்கி, முகம் கழுவி முகத்துக்குத் தயிர்பூசிக் கொண்டு தைரோயிட்டுக்கான அயடீன் குளிசையை எடுத்துக் கொள்வேன். கூடவே இரண்டு கோப்பை தண்ணீரும் குடித்து விடுவேன். கடற்காற்று இல்லாத இந்த ஊரில் வாழ்நாள் பூராவும் இந்தக் குளிசையை எடுக்க வேண்டுமென்று மருத்துவர் கூறி விட்டார். இது யேர்மனிக்கு வந்து ஓரிரு வருடங்களுக்குள்ளேயே ஆரம்பித்த ஒன்று.

அரை மணித்தியாலம் கழித்து தண்ணீர் கொதிக்க வைப்பேன். ஐந்து தேநீர் கொள்ளக் கூடிய ஒரு கெண்டிக்குள் தேயிலையைப் போட்டு ஒரு கணிசமானளவு இஞ்சித்துண்டையும் அரைத்துப் போட்டு கொதிக்கும் நீரை அதற்குள் ஊற்றி, மூடி வைத்து விடுவேன்.

எல்லா வேலைகளையும் அவசர அவசரமாக முடித்து விட்டு, குடிகோப்பை ஒன்றுக்குள் பால் விட்டு மின்நுண்ணடுப்பில் சூடு காட்டுவேன். சூடானதும் தேயிலையை அகற்றி விட்டு, கெண்டிக்குள் அந்தப் பாலைவிட்டு இரண்டு மூன்று தடவைகள் ஆற்றுவேன்.

எப்படித்தான் கவனமாக ஆற்றினாலும் பக்கம், அக்கங்களில் பாற்தேநீர் சிந்தியும், வழிந்தும் எரிச்சல் படுத்தும். அவைகளைத் துடைத்து விட்டு கெண்டித் தேநீரோடு வந்து கணினியின் முன் அமர்வேன்.

கெண்டிக்குள் நிறைந்த, பால்விட்ட அந்த இஞ்சித் தேநீரோடு கணினியின் முன் அமரும் காலைப்பொழுதுகள் மிகவும் இதமானவை. தண் என்ற காற்று பல்கணிக் கதவினூடு வரவேற்பறை விறாந்தையில் தவழ்ந்து தவழ்ந்து வந்து என்னைத் தழுவிக் கொண்டிருக்கும். வரவேற்பறைக்கு அடுத்தாற் போல் இருக்கும் வாசற்பகுதியிருக்கும் கொறிடோறில்தான் குசினிக்குப் பக்கத்து மூலைக்குள் எனது கணினி இருக்கிறது. சமயங்களில் இந்தக் காற்றுக்கு என்ன அவசரமோ எழுந்து, தடக்கி, காலை ஒரு விதமாக வரவேற்பறை விறாந்தையில் உரசி நடந்து வந்து என்னை அச்சுறுத்தும். காற்றுத்தான் என்று தெரிந்தாலும் சட்டென்று மனம் திடுக்கிடும். யாராவது பல்கணியால் ஏறிக் குதித்து வந்து விட்டார்களோ என்ற நினைப்பில் வெருண்டு, விருட்டென்று எழுந்து விடுவேன். எட்டிப் பார்ப்பேன். என்னை அப்படி ஏய்த்து விளையாடுவது காற்றுத்தான். வேறு யாருமே இருக்க மாட்டார்கள். இந்தக் காற்றுக்கும் நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்பது தெரியும் போலும்.

ஆனாலும் இந்தக் காலைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். நானே நான் மட்டுமாய் யாருடைய தொந்தரவுமின்றி என் கெண்டித் தேநீரை வார்த்து வார்த்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டு கணினியில் எனக்குப் பிடித்தவைகளைப் படித்தும், ரசித்தும், சிரித்தும், அவ்வப்போது கண்கள் பனித்தும், அழுதும்... அற்புதமான பொழுதுகள் இவை. அந்தப் பொழுதில் நான் வாழும் இந்த ஆறு குடியிருப்புகள் கொண்ட வீட்டில் என் கணவர் உட்பட எல்லோருமே வெளியே போய் விடுவார்கள். நான் மட்டுந்தான் தனியாக இருப்பேன்.

அப்படியொரு இனிமையான, தனிமையான காலைப்பொழுதில் தான் அதுவும் நான் முகத்துக்குத் தயிர் பூசி ஒரு கோமாளி போல கணினியின் முன் அமர்ந்திருந்த போது டானியல் கிழவர் வந்து அழைப்புமணியை அழுத்தினார். கதவில் பொருத்தியிருந்த கமராவினூடு கணினியில் பார்த்தேன். டானியல் கிழவர். வழமை போலவே கறுப்பு நீளக்காற்சட்டை, வெள்ளைக் கோர்ட், உள்ளே தெரியும் வெள்ளை சேர்ட் பொக்கற்றில் கொழுவியிருக்கும் பேனா, மூக்குக் கண்ணாடி, கூடவே கையில் ஒரு வெள்ளைத்தாள் சகிதம் நின்றார்.

ஏனிந்த அதிகாலையில் வந்திருப்பார்?

டானியல் கிழவர் அப்படிக் கண்ட நேரமும் வந்து தொல்லை தருபவர் அல்லர். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு உள்ளவர். பல்கலைக்கழக விரிவுரையாளர். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பேராசிரியர். பல நூல்களை எழுதி யேர்மனிய அரசிடமிருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் விருதுகளைப் பெற்றவர். மாணவர்களிடம் ஒழுங்கை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் வாழ்க்கையிலும் ஒழுங்காக இருப்பார்களோ என அடிக்கடி எண்ண வைப்பவர்.

யேர்மனியில் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளமும் பின்னர் நல்ல ஓய்வூதியமும் கிடைக்கும். டானியல் கிழவருக்கும் நல்ல ஓய்வூதியம் கிடைத்துக் கொண்டிருந்தது. போதுமானளவு பணம் வைத்திருந்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

யேர்மனியில் இது விடயமாக ஏதும் கணக்கெடுத்திருப்பார்களோ தெரியாது. நான் எனக்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தேன். யேர்மனியில் ஆசிரியர்கள் பலர் திருமணம் செய்து கொள்வதில்லை. ஒண்டிக்கட்டைகளாகவே வாழ்வைக் கழிப்பார்கள். இளமையில் பாடசாலையே கதியென்று இருந்து விட்டு முதுமையில் தனித்துப் போய் விடுவார்கள்.

தயிர் காய்ந்து முகத்தில் சொருசொருவென்றிருந்தது. அதைக் கழுவிவிட்டு கதவைக் திறக்கலாம் என்றுதான் முதலில் யோசித்தேன். பின்னர் டானியல் கிழவர்தானே பரவாயில்லை என்று நினைத்து, போய் திறந்தேன்.

காலைவணக்கம் கூறியவாறு கூசிய கண்களால் எனை நோக்கிச் சிரித்தார். குளித்து வாசனைத் திரவியம் தெளித்திருந்தார். மெல்லிய நறுமணம் வீசியது. உயர்ந்து நின்ற அவரை நிமிர்ந்து நோக்கியபடி சிரித்தேன்.

„உன்னைக் குழப்பினதுக்கு மன்னிச்சுக் கொள்..“ என்று தொடங்கி, ஒரு குறிப்பிட்ட நபரின் தொலைபேசி இலக்கத்தை தான் மறந்து விட்டதாகவும், தரும்படியும் கேட்டு எழுதிக் கொண்டு போனார்.

டானியல் கிழவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். எனது பிள்ளைகள் வளர்ந்து தனித்தனியாக வாழத் தொடங்கிய போது நாங்கள் வாழ்ந்த ஐந்தறைக் குடியிருப்பு ஒரு தண்டமாகியது. வாடகை கட்டி அண்டவில்லை. நானும் கணவருமாக ஒரு சிறுகுடியிருப்புத் தேடி அலைந்தோம். வாடகை, லொக்கேஷன், அண்டை அயலார்... என்று ஏதோ ஒன்று தோதாக அமையாமல் சலித்த பொழுதில்தான் சொந்தமாக ஒரு சிறுகுடியிருப்பை வாங்கத் தீர்மானித்தோம். ஆகக் கூடியது மூன்று அறைகள் கொண்ட குடியிருப்புத்தான் எங்கள் வயதுக்கும், வருவாய்க்கும் தோதாகும். அதுவும் சுலபமானதாக இருக்கவில்லை. தேடித்தேடி களைத்த ஒரு பொழுதில் இந்தக் குடியிருப்பு விலைபோக இருப்பது தெரியவந்தது.

அது ஒரு வைகாசி மாதம். வீடு பார்க்க நானும் கணவரும் வந்திறங்கினோம். அந்த வீடு கொஞ்சம் வித்தியாசமாக அமைந்திருந்தது. வீதியில் இருந்து சிறு ஒழுங்கை போன்ற ஒன்றுக்குள் உள்ளிறங்க வேண்டியிருந்தது. வீட்டின் வாசல் வீதிப்பக்கம் இல்லாமல் பின்புறத்தில் அமைந்திருந்தது. கார்த்தரிப்பிடம் விசாலமாக வாசல் பக்கமே இருந்தது. அதற்கடுத்தாற் போலிருக்கும் பிரதான வீதியை அப்பிள் மரங்களும், பெரி மரங்களும்,
மேப்பிள் மரங்களும், இன்னும் பெயர் தெரியாத மரங்களுமாக முழுவதுமாக மறைத்திருந்தன. இடையிடையே பைன் மரங்களும் உயர்ந்து நின்றன. ரோஜாச்செடிகள் பூத்துச் சொரிந்து, காடு போலப் பரந்து பிரதான வீதிக்கும் இந்த வீட்டுக்கும் இடையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன. ஏதோ ஒரு சோலைக்கு நடுவிலே நிற்பது போலிருந்தது. இவைகள் எல்லாவற்றையும் விட இன்னும் அதிகமாக என்னை ஈர்த்தது நேரே கார்தரிப்பிடப்பக்கமாக இருந்த கீழ்மாடிக் குடியிருப்பு யன்னல்கள். அந்த யன்னல்கள் ஒவ்வொன்றினூடும் தெரிந்தவை புத்தக அடுக்குகள். எனக்குள் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். ஏதோ ஒன்று பொருந்தி வருவது போன்ற உணர்வு.

அது ஒரு இரண்டடுக்கு மாடி வீடு. ஆறு குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. மேல்மாடியில்தான் நாங்கள் பார்க்க வந்த குடியிருப்பு. நான் தேடியது லிப்ற் இல்லாத, அதிகம் படிகள் ஏறவேண்டிய தேவையில்லாத கீழ்மாடிக் குடியிருப்பு. ஆனாலும் உள்ளே நுழையும் போதே என்னுள்ளே ஏதோ ஒரு உணர்வு `இதுதான் உனக்கான வீடு´ என்றது.

வரவேற்பறை தாண்டிய பல்கணியை அண்டி உயர்ந்த இரு பெருமரங்கள் கிளைபரப்பி நின்றன. ஒன்று பெற்றுலா (Betula) மரம். மற்றையது எமது ஊர் அரசமரத்தை ஞாபகப்படுத்தியது. குசினிக்கும், படுக்கையறைக்கும் இடையில் இருக்கும் ட துண்டுக்குள் ஒரு ´யப்பான் செரி` பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அது வருடத்தில் ஒரே ஒரு தடவைதான் பூக்கும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. கூடவே வீடமைந்திருக்கும் காணி மூலையில் தெருவோரமாக ஒரு லிண்டன் மரம் புத்தம் புதுத் தளிர்களோடு பெருத்துச் சடைத்து நின்றது.

`ஏதாவது ஒரு வீடு கிடைத்தால் போதுமென்றில்லாது இவ்வளவு தேடியது நல்லதாகப் போய் விட்டது. இதுதான் எமக்கு´ என்று உள்ளூர ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது.

விற்பவர்களுடன் விலைபேசி, வீடு வாங்கி, கார்த்திகையில் குடிவந்த போது பல்கணி மரங்கள் இரண்டும் இலையுதிர்த்து நிர்வாணக் கோலம் பூண்டிருந்தன. குசினியன்னலால் தெரிந்த யப்பான் செரியும் அப்படித்தான். கீச், கீச் என்ற படி லிண்டன் மரத்தைச் சரணாலயமாக்கிக் கொண்டிருந்த குருவிகள் எல்லாம் எங்கோ பறந்து போயிருந்தன. கீழ்மாடிக் குடியிருப்பு யன்னல்கள் மட்டும் புத்தக அடுக்குகளோடேயே எம்மை வரவேற்றன. அந்தப் புத்தக வீடுதான் டானியல் கிழவரின் வீடு.

காணும் போதெல்லாம் மெலிதாகப் புன்னகைப்பார். காலைவணக்கமோ, மாலைவணக்கமோ ஏதாவதொன்று அந்நேரத்துக்கேற்ப சொல்வார். சில பொழுதுகளில் அவரது புத்தகங்கள் பற்றியும் கேட்டிருக்கிறேன். அது அவரது பொக்கிஷங்கள். அவரே எழுதிய புத்தகங்கள்
லவும் அதற்குள் இருந்தன.

சற்று நேரம் கழித்து முகத்திலே சொருசொருவென்றிருந்த தயிரை உரஞ்சிக் கழுவி, முகத்துக்குக் கிறீம் பூசிக்கொண்டு குப்பைப்பையுடனும், மஞ்சட்பையுடனும் படிகளில் இறங்கினேன். அன்று குப்பை போடும் கொள்கலனையும், பிளாஸ்ரிக் போடும் மஞ்சட்பைகளையும் வெளியில் வைக்கும் நாள். என்னிடம் நான்கு மஞ்சட்பைகள் சேர்ந்திருந்தன. குப்பைபோடும் கொள்கலனிலுள்ள குப்பைகளை எடுத்துச்செல்வதற்கு நகரைச் சுத்தம் செய்பவர்கள் மாதத்தில் இருதடவைகள் வருவார்கள். ஆனால் மஞ்சட்பைகைளை எடுத்துச் செல்வதற்கு மாதத்தில் ஒரு தடவைதான் வருவார்கள். அது எப்படியும் நாலைந்தாகச் சேர்ந்து விடும். நான் ஒவ்வொரு கையிலும் இரண்டு பைகளாகத் தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கினேன். அந்த நேரம் பார்த்து டானியல் கிழவரும் தனது குடியிருப்புக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். எனது இருப்பிடத்துக்கும் அவரது இருப்பிடத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளி நானிறங்கிக் கொண்டிருக்கும் பதினைந்து படிகள்தான். எப்போதாவது அவர் இந்தப் படிகளில் ஏறி மேலே வந்து என்னிடம் ஏதாவது கேட்பார். அல்லது நான் இறங்கி அவரிடம் கேட்பேன். அதற்கு மேல் எனது வீட்டுக் கதவைத்தாண்டி அவர் உள்ளே வந்ததோ அல்லது அவரது வீட்டுக் கதவைத்தாண்டி நான் உள்ளே போனதோ அதுவரை நடக்கவில்லை.

என்னை மஞ்சட் பைகளுடன் கண்டதும் „சந்தியா நில்..
நில், நான் உதவிறன்“ என்றார். „இல்லை நீங்கள் கஸ்டப்பட வேண்டாம். நானே தூக்குவேன்“ என்று மறுத்தேன். டானியல் கிழவர் விடவில்லை. இரண்டு பைகளை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. அவருக்கே வயதாகி விட்டது என்று அவரது குப்பை போடும் கொள்கலனையே எனது கணவர்தான் வெளியில் வீதிக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவார்.

இப்படித்தான் டானியல் கிழவர். எப்போதாவது பாரமான பைகளுடன் நான் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டால் போதும் ஓடிவந்து விடுவார். வலுக்கட்டாயமாக என்னிடம் உள்ள பாரங்களை வாங்கி எனது வீட்டு வாசல் வரை தூக்கிக்கொண்டு வந்து தந்து என்னை மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்குவார்.

மஞ்சட்பைகளை எமது வீட்டிலிருந்து நூறு மீற்றரளவு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். டானியல் கிழவர் என்னோடு கதைத்துக் கொண்டு நடந்தார். அவரிடம் ஒரு வித சந்தோசம் துள்ளியதை அவதானித்தேன்.

„சந்தியா, உன்னைப் பார்க்கிற பொழுதெல்லாம் எனக்கு என்ரை அம்மான்ரை ஞாபகம்தான் வருது. உன்னைப் போலதான் என்ரை அம்மாவும் இவ்வளவு பெரிய ஒரு மகனை வைச்சுக் கொண்டு ஒரு சின்னப்பிள்ளை போல எப்பவும் இளமையா இருந்தவ. நீயும் அப்பிடித்தான். இரண்டு பெரிய ஆம்பிளைப்பிள்ளையளை வைச்சிருக்கிறாய். ஆனாலும் இன்னும் எவ்வளவு இளமையா இருக்கிறாய்“ என்றார்.

எனக்கு உள்ளூரச் சந்தோசமாக இருந்தாலும் மிகுந்த சங்கடமாயும் இருந்தது. சிரித்தேன்.

„நீ உப்பிடிப் பளிச்செண்டு சிரிப்பியே. உப்பிடித்தான் என்ரை அம்மாவும் சிரிப்பா. நீ சிரிக்கிற பொழுதெல்லாம் என்ரை அம்மாவைப் போலையே பிரகாசிக்கிறாய்“ டானியல் கிழவர் சொல்லிக் கொண்டே நடந்தார்.

இதன் பிறகு எனக்கு டானியல் கிழவர் மீது இன்னும் அதிகமான பிரியம் ஏற்பட்டிருந்தது. என்னைக் காணும் பொழுதுகளிளெல்லாம் அவர் கண்களிருந்து வழியும் பரிவுக்கும், பாசத்துக்குமான அர்த்தம் முழுமையாகப் புரிந்தது. நான் அவரை என் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தேன். அவர் என்னை தனது தாய்க்கு ஒப்பாக நோக்கினார்.

(தொடர்ச்சி)

- சந்திரவதனா
12.06.2018

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை