கறுத்தக்கொழும்பான்

அது 1981 ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். எனது கணவர் கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு அவசிய வேலை காரணமாக நான் எனது கணவரிடம் கொழும்புக்குச் செல்ல வேண்டி வந்தது.

நான் புறப்படுவதற்கு முதல்நாள் எனது கணவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்காக யாழ்ப்பாணக் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வேண்டி வரச்சொன்னார். நானும், அவள் அவருடன் வேலை செய்யும் பெண் என்பதால் அவருடைய மரியாதைக்கு எந்த குறைச்சலும் வரக் கூடாதென நினைத்து, பார்த்துப் பார்த்து தேடி நல்ல கறுத்த கொழும்பான் மாம்பழங்கள் வாங்கிக் கொண்டு ரெயின் ஏறினேன்.

நான் கொழும்பு போய்ச் சேர்ந்த அன்றைய பொழுது மிகவும் இனிமையாகக் கழிந்தது. அடுத்தநாள் எனது கணவர் மாம்பழங்களுடன் வேலைக்குச் சென்று விட்டார். நான் சமைத்து விட்டு அவரது அறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்த அவரது பொருட்களை அடுக்கத் தொடங்கினேன். அடுக்கிக் கொண்டு போனபோது, பல பெட்டிகளின் அடியில் இருந்த ஒரு பெட்டி என்னைக் கவர்ந்தது. அது எனது கணவரது தானே என்பதால் எந்தவித யோசனையுமின்றி அதை முக்கித்தக்கி இழுத்தெடுத்துத் திறந்து பார்த்தேன்.

அதிர்ந்து போய் விட்டேன். அதற்குள் கொஞ்சப் புத்தகங்களும் அதனிடையில் நிறைய குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்களில் ஒன்றான ஆணுறைகளும் இருந்தன. நானின்றித் தனியே இருக்கும் எனது கணவர் ஆண் உறைகளை வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன? என் மனசு அதிருப்தியுடன் என்னையே குடைந்து குடைந்து வினாவியது. அது வரை என்னுள் ஓடிக் கொண்டிருந்த ஜிலு ஜிலுவென்ற சந்தோச நதியின் வெள்ளம் அப்படியே வடிந்து போக நான் துயரத்தில் துவண்டு போனேன்.

மனசு உடனடியாக அது பற்றிக் கணவரிடம் கேட்டு விட அவசரப் பட்டது. பதட்டமாகிப் போன எனக்குள் சந்தேகத் துளி விதையாக வீழ்ந்து முளையாகி தண்ணீர் ஊற்றாமலே அது கணத்துக்குக் கணம் வளர்ந்து விருட்சமாகி அதன் பிரமாண்டம் தாங்காது தலையெல்லாம் வலித்தது. கண்கள் குளமாகின. ஏதாவது தடயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பொறுமையின்றி அவர் உடைமைகளை எல்லாம் குடையத் தொடங்கினேன். இந்த விடயத்தில் மட்டும் என் நம்பிக்கை வீண் போகவில்லை. அவரது உடுப்பு அலுமாரிக்குள் அவரது துரோகத்துக்குச் சாட்சியாக சில புகைப்படங்கள் இருந்தன.

எனது பார்வையில் உலகையே இருளச் செய்த அந்தப் புகைப்படங்களில் எனது கணவனை பல்வேறு கோணங்களில் தழுவிய படியும், அணைத்த படியும் ஒரு இளம்பெண் காதலுடன் அமர்ந்திருந்தாள். நான் அடிபட்டவளாய் நிலத்தில் அமர்ந்து விட்டேன். வேலை முடிந்து வரப்போகும் கணவனுக்காக வெறும் ஜடமாகக் காத்திருந்தேன். சிலமணி நேரங்களில் அவர், அதுதான் என் கணவர் வந்தார். எனது அடுக்குதலில் தான் ஒளித்து வைத்திருந்த பெட்டி வெளியில் வந்திருப்பதை அவர் அவதானித்ததையும் திடுக்கிட்டதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

ஆனால் அவர் என்னை எதுவும் பேச விடவில்லை. ஏதேதோ பொய்க் காரணங்கள் சொல்லி என்னை அடக்கி விட்டு „இப்போ என்னோடு வேலை பார்க்கும் ஒரு பெண் வருவாள். அவளுக்கு உன்னை நான் என்ரை கசின் என்றுதான் சொல்லி வைச்சிருக்கிறன். பிறகு வேறையேதும் சொல்லிப் போடாதை“ என்றார்.

„ஏன் அப்படிப் பொய் சொல்லவேணும்?“ என்று நான் அழுகையுடன் கேட்டேன்.

உரத்துச் சண்டை பிடிக்குமளவு தைரியம் என்னிடம் இருக்கவில்லை. எமக்குத் திருமணமாகிச் சில வருடங்கள்தான். எனக்கு இருபது வயதுதான் அப்போது. புருசன் என்றால் வாய்காட்டக் கூடாது. என்ன செய்தாலும் பொறுமை காக்க வேண்டும் என்ற தத்துவம் என் மூளையில் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும்.

அந்தத் தத்துவத்தை மீற முடியாமல் நான் தத்தளித்துக் கொண்டிருக்கவே அந்தப் பெண் வந்து விட்டாள். அநாகரீகமாக நடந்து எனக்குப் பழக்கமில்லை. அவளை வரவேற்றேன். அவள்தான் புகைப்படத்தில் என் கணவருடன் ஒட்டிக் கொண்டிருந்தவள் என்பதை உடனேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் எதுவும் தெரியாதவளாய் வெட்கப்பட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.´

„நான் இவரது மனைவி. இவரது குழந்தை இப்போ என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும், என் கணவன் உன்னை ஏமாற்றுகிறான்“ என்றும் சொல்லி விட என் மனம், நா எல்லாம் துடித்தன.

ஆனால் அவள் வர முன்னமே என்கணவர் எனக்கிட்ட கட்டளை ஞாபகத்தில் வந்து என்னைத் தடுத்தது. என் கணவரை சமிக்ஞையால் பின்பக்க அறைக்குக் கூப்பிட்டு „நான் உண்மையைச் சொல்லப் போகிறேன். உங்கள் நாடகம் எல்லாம் எனக்குப் புரிகிறது“ என்று சொல்லி அந்தப் புகைப்படங்களைக் காட்டி „எனக்கு எல்லாம் தெரியும்“ என்றேன்.

எனது கணவர் கண்களில் அனல் தெறிக்க என்னை முறைத்துப் பார்த்தார். „சொன்னதைக் கேட்காமல் நடந்தியோ நடக்கிறது வேறை“ என்று என்னைப் பயமுறுத்தினார். நான் மௌனமாகி விட்டேன். மனதுக்குள் புயல் வீசிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண் „உங்கடை மாம்பழம் நல்ல ருசி“ என்றாள். „நன்றி“ என்றாள். என் கணவரை அடிக்கடி காதல் ததும்பப் பார்த்தாள். எனது கணவருடன் என் முன்னிலேயே செல்லங் கொஞ்சிக் கொஞ்சிக் கதைத்தாள். நான் எனக்குள்ளே உண்மைகளையும், உணர்வுகளையும் மென்று விழுங்கிக் கொண்டிருந்தேன்.

அவளுடன் பேசிக் கொண்டிருந்த சில நிமிட நேரங்களில் என் கணவர், தான் திருமணமாகாதவர் என்று அவளிடம் பொய் கூறியிருப்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நாடகம் அடுத்த நாளும் தொடர இருந்தது. "நாளை கோல்பேஸ் பீச் க்குப் போவோமா" என்று கேட்டாள் அவள். என் கணவர் „ ஓம்“ என்று தலையசைத்தார். ஆனால் அடுத்தநாள் நான் திரும்ப வேண்டிய நாள். முதலில் என் கணவரும் என்னுடன் வருவதாகச் சொல்லியிருந்தார். அவளுக்கு பீச்சுக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்த காரணத்தால் என்னைத் தனியே யாழ்தேவியில் ஏற்றி விட்டார். நான் போகமாட்டேன் என்று மறுக்கவோ, அல்லது நீங்களும் என்னுடன் வந்து விடுங்கள் என்று வற்புறுத்தவோ தைரியமின்றி ரெயின் ஏறி விட்டேன். மனசு மட்டும் எனது கணவரின் துரோகத்தால் உடைந்து நொருங்கிச் சிதறிப் போயிருந்தது.

இந்த
ச் சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஓடி விட்டாலும் இன்னும் என் மனதை நெருஞ்சி முள்ளாய் நெருடிக் கொண்டே இருக்கிறது.

- காந்தள்
2001

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை