டானியல் கிழவரும் நானும் - 2

குளித்தல் என்பது வெறுமனே ஊத்தை போவதற்கான விடயம் மட்டுமல்ல. குளிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மனதிலுள்ள எரிச்சல்கள், கோபங்கள், வேதனைகள் எல்லாம் தண்ணீருடன் கூடவே வழிந்தோடும். அப்படி எல்லாவற்றையும் கழுவி ஊற்றி, குளித்து முடித்து, வேலைக்குப் போகும் போது மனமும் குளிர்ந்து, புத்துணர்ச்சி பெற்றிருக்கும். அன்று நான் குளித்து, வெளிக்கிட்டு அப்படியொரு புத்துணர்ச்சியுடன்தான் படிகளில் இறங்கினேன்.

டானியல் கிழவரின் குடியிருப்பும், கதவும் அசுமாத்தம் எதுவுமின்றி அமைதியாக இருப்பது போன்றதொரு பிரமையைத் தோற்றுவித்தன. வழி நெடுகலிலும் யோசித்துக் கொண்டே போனேன். கடைசியாக அவரை எப்போது கண்டேன் என நினைவுபடுத்திப் பார்த்தேன். எதுவும் பிடிபடவில்லை. வேலையில் மூழ்கி வெவ்வேறு நினைவுகளோடு மனம் அலைந்து கொண்டிருந்தாலும் டானியல் கிழவரும் அடிக்கடி மனதுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பதினைந்து படிகள் இடைவெளியில் எங்கள் குடியிருப்புகள் இருந்தாலும் டானியல் கிழவரை சில சமயங்களில் வாரங்கள், மாதங்களாக நான் காண்பதில்லை. ஆனாலும் அவரது இருப்பை உணர்ந்து கொண்டே இருப்பேன்.

காலையில் எனது கணவர் சரியாக ஐந்தரைக்கு வேலைக்காக வெளியில் போவார். ஒவ்வொரு காலையும் நானும் எங்கள் குடியிருப்புக்கு முன்னுள்ள கொறிடொருக்குப் போய் யன்னலினூடு வெளியைப் பார்ப்பேன். மேலே இரண்டாவது மாடியிலிருந்து பார்க்கும் போது அந்த யன்னலுக்கு நேரெதிரே அப்பிள், பெரி, மேப்பிள் மரங்களுக்கு மேலால் பிரதான வீதியைத் தாண்டி அமைந்திருக்கும் முதியோர் இல்லம் உயிர்ப்புடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அந்த இல்லத்துக்குத் தீட்டப்பட்டிருக்கும் வர்ணம் சிவப்பும் இல்லாமல், தவிடும் இல்லாமல் இடைப்பட்ட நிறத்தில் ஒரு அழகு வர்ணம். அந்த அதிகாலையில் உள்ளிருக்கும் முதியோரைப் பராமரிப்பதற்கான பெண்கள் வெள்ளை உடைகளுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்து கொண்டிருப்பார்கள். பிரதான வீதியில் கார்கள் ஒளி பாய்ச்சியபடி ஓடிக் கொண்டேயிருக்கும். சற்றுக் கீழே நோக்கினால் எங்கள் வீட்டின் வாசற்பகுதி தெரியும். வாசலுக்கு முன்னால் சில அடிகள் தள்ளி ஆறு குப்பை போடும் கொள்கலன்கள், ஒரு ஓர்கனிக் குப்பை போடும் கொள்கலன், இரு பெரிய பழையதாள்கள் போடும் கொள்கலன்கள் என்று எல்லாம் ஒரு வரிசையில் நேர்த்தியாக அடுக்கப் பட்டிருக்கும். அதற்கு நேரே மேலே, பக்கப் பாடாக எனது மாடிக்குக் கீழே டானியல் கிழவரின் குசினி யன்னல். அதற்குள்ளே மின்சாரவிளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதுதான் டானியல் கிழவர் காலை எழுந்து விட்டார் என்பதை நான் அறிந்து கொள்வதற்கான முதல் சாட்சியும், சாதனமும்.

மீண்டும் நான் எனது குடியிருப்புக்குள் நுழைந்து கதவை இரு தாட்பாள்கள் போட்டுப் பூட்டி விடுவேன். கூடவே வானொலியையும் முடுக்கி விடுவேன். அதிகாலையில் நான் கேட்பது யேர்மனிய வானொலியைத்தான். அன்றைய செய்திகள், புதினங்கள், பகிடிகள், போட்டிகள்... என்று நான் அதனோடு சங்கமித்திருக்கும் போது கீழே குளிக்கும் சத்தம் கேட்கும். அது டானியல் கிழவராகத்தான் இருக்கும்.

சரியாக ஆறரைக்கு டானியல் கிழவர் தனது குடியிருப்புக் கதவைத் திறந்து திறப்பை வெளிப்பக்கமாகப் போட்டுப் பூட்டுவார். தொடர்ந்து அவர் கீழே வெளிவாசலை நோக்கிய பதினைந்து படிகளில் இறங்குவார். தபால்பெட்டியைத் திறந்து பார்த்து, மூடி திறப்பால் பூட்டுவார். அதைத் தொடர்ந்து சற்றுப் பெரும் ஓசையுடன் வீட்டின் வெளிக்கதவு சாத்தப்படும். நேரம் பார்க்கவே தேவையில்லை. அது தினமும் காலை 6,30க்கு நடந்து கொண்டே இருக்கும்.

இந்த நித்திய ஓசைகளினூடுதான் நான் டானியல் கிழவரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வேன். அல்லது உணர்ந்து கொள்வேன்.

டானியல் கிழவர் அந்த நேரத்தில் பேக்கரிக்குத்தான் போவார் என்று நினைக்கிறேன். கூடவே பத்துநிமிட நடையில் இருக்கும் ஓர்கானிக்கடைக்கும் போவார் போலும். சில சமயங்களில் பல்கணிக்குச் சென்று பார்ப்பேன். அந்த நேரத்தில் கிழக்குச் சூரியன் மெதுமெதுவாக மேலெழுந்து லிண்டன் மர இடுக்குகளினூடு வெளி முற்றத்திலும், என் பல்கணியிலும் கோலம் போட்டுக் கொண்டிருக்கும். குருவிகள் செல்லங் கொஞ்சுவதும், செல்லச் சண்டை போடுவதுமாய் கீச்சிடுங்கள். சில சிறகடித்துப் பறக்குங்கள். டானியல் கிழவர் ஒழுங்கை தாண்டி, லிண்டன் மர மூலையில் திரும்பி, வீதியில் நடந்து கொண்டிருப்பார். இரு கைகளிலுமாக இரு துணிப்பைகள் வைத்திருப்பார். ஆனாலும் இந்தக் கிழவர் தினமும் அப்படி என்னத்தைத்தான் வாங்குவாரோ?

சரியாக எட்டரைக்குத் திரும்புவார். கீழ்க்கதவு பெரும் ஓசை எழுப்பி அவர் வரவைப் பறைசாற்றும். மீண்டும் தபாற்பெட்டி திறக்கும். பின் மூடும். தொடர்ந்து பொருட்கள் நிறைந்த பைகளுடன் அவர் பதினைந்து படிகளையும் ஏறிக் கடப்பதை அவரது மூச்சுச்சத்தம் சொல்லும். அவரது குடியிருப்புக்கதவில் திறப்பை நுழைத்து திறந்து, உள்நுழைந்து சாத்தும் சத்தம் கொஞ்சம் அதீதமாகவே இருக்கும். அதன் பின் நான் வேலைக்குப் புறப்படும் வரை அவரது சத்தங்கள் எதுவும் எனக்குக் கேட்காது. நான் தமிழ்வானொலிக்கு மாறி விடுவேன். சற்று வானொலியின் ஓசையையும் கூட்டி விடுவேன்.

ஆனாலும் இந்தப் பெரிய வீட்டில் நான் தனியே இல்லை. டானியல் கிழவரும் இருக்கிறார் என்ற நினைப்பு எனது உள்ளுக்குள் பதிந்திருக்கும். நான் தைரியமாகவே எனது வானொலியோடு பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் வீட்டுக்குள் திரிவேன்.

இரவில் கூட எத்தனை மணி சென்றாலும் பயமின்றிக் கீழே போய் எனது குப்பைப்பையை கொள்கலனுள் போட்டு விட்டு வருவேன். டானியல் கிழவரின் குசினி யன்னலுக்குக் கண்கள் இருப்பது போலவும் அது வெளியைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போலவும் நானே எனக்குள் ஒரு பிரேமையை வளர்த்து வைத்து அதனோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இப்படியே காலங்கள் ஓடிக் கொண்டிருந்தது தெரியவேயில்லை. விடிவதும், இருள்வதும், திங்கட்கிழமை காலையில் எழுவதும், அடுத்த சனி ஞாயிறுக்காகக் காத்திருப்பதும், அந்தச் சனி ஞாயிறுகள் வந்து போவதே தெரியாது அடுத்த திங்கள் வந்து விடுவதுமாய் நான் இந்தக் குடியிருப்புக்கு வந்தும் பத்துவருடங்கள் ஓடியிருந்தன. டானியல் கிழவரும் பத்துவயதுகள் கூடி முன்னரை விடத் தளர்ந்து போயிருந்தார். அவர் படிகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் விடும் மூச்சின் பெருஞ்சத்தம் அவருக்குள் நுழைந்து விட்ட இயலாமை என்ற ஒன்றை பறைசாற்றிக் கொண்டேயிருந்தது. „ஏதாவது உதவிகள் வேணுமானால் கேள்“ என்று நானும், கணவரும் அவருக்குச் சொல்லி வைத்தோம். ஆனாலும் அவர் ஒரு போதும் உதவி கேட்டதில்லை. தனது வேலைகளைத் தானேதான் பார்த்துக் கொண்டிருந்தார். நடக்க முடியாத பொழுதுகளில் தூரம் போக வேண்டிய தேவைகளுக்கு ரக்சியை அழைத்துப் போய் வந்தார்.

ஒவ்வொரு விடயத்துடனும் மனமும் உடலும் இசைவாக்கம் பெற்று விடுவது போல ஒவ்வொரு சத்தங்களுடனும் என் காதுகளும் இசைவாக்கம் பெற்றிருந்தன. டானியல் கிழவர் காலையில் கதவைத் திறப்பது சாத்துவது பூட்டுவது... என்று எல்லாச் சத்தங்களையும் கேட்கிறேனா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாதிருந்தது. அல்லது அவைகளை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியாதிருந்தது.

இரண்டு மூன்று முறைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பார்த்தேன். ஒரு எதிர்வினையும் இருக்கவில்லை. வேலை முடிந்து போகும் போது அவரது அழைப்புமணியை அழுத்தி சுகம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தேன்.

அப்போதுதான் எனது கணவர் தொலைபேசியில் அழைத்தார். ஏதாவது ஒரு அவசிய அலுவல் இன்றி அவர் வேலை இடத்துக்கு அழைப்பை மேற்கொள்வதேயில்லை. அதனால் அவசரமாக எடுத்து „என்ன பிரச்சனை?' என்றேன்.

„டானியல் கிழவரின் அசுமாத்தத்தைச் சிலநாட்களாகவே காணவில்லையாம். டானியல் கிழவரின் பக்கத்துக் குடியிருப்பாளர் சொல்கிறார். அதுதான் பொலிசுக்குப் போன் பண்ணியிருக்கிறேன். திறப்புத் தேவை“ என்றார். டானியல் கிழவரின் குடியிருப்புத் திறப்பு ஒன்று என்னிடம் உள்ளது என்பது அங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதை நான் ஒரு போதும் பாவித்ததில்லை. பாவிக்க வேண்டிய தேவை வந்ததும் இல்லை.

திறப்பு இருக்கும் இடத்தை கணவருக்குச் சொன்னாலும் அதற்கு மேல் என்னால் வேலை செய்ய முடியவில்லை. மனதுக்குள் ஒரு வித பதட்டம். மேலதிகாரியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

டானியல் கிழவரின் குடியிருப்பின் முன் ஒரு பெண் பொலிசும், ஒரு ஆண் பொலிசும் நின்றார்கள். „அவசரகால மருத்துவர் வரும் வரை நாம் கதவைத் திறக்கக் கூடாது. அதனால் காத்திருக்கிறோம்“ என்றார்கள்.

பொழுது மம்மல் ஆகிக் கொண்டிருந்தது. மேற்குச்சூரியன் மலைகளுக்குக் கீழே மறைந்து கொண்டிருந்தது. வானம் தங்கப்பாளம் எனத் தகதகத்துக் கொண்டிருந்தது. டானியல் கிழவரின் குசினியன்னலிலும் ஒளி பட்டுத் தெறித்துக் கொண்டிருந்ததால் குசினிகுள்ளே மின்சாரவிளக்கு எரிகிறதா என்பதைக் கண்டுகொள்ள முடியாதிருந்தது.

டானியல் கிழவருக்கு எதுவுமே ஆகிவிடக் கூடாது என்ற பிரார்த்தனையுடன் நான் அந்தப் பதினைந்தாவது படியில் காத்து நின்றேன்.

(தொடரும்)

- சந்திரவதனா
10.07.2018


டானியல் கிழவரும் நானும் - 1

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை