Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக என்னுள் அந்த விருப்பம் இருந்தும் ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும் என்பதாகவும் இருந்திருக்கலாம். இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது.
நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில் பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள். ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்பு. ஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னது ‘காசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்’ என்று.
Stuttgart SI Cntrum என்ற இடத்தில் நிகழ்ச்சி. முதலில் SI Centrum பற்றிச் சொல்லிவிடுகிறேன். இதை ஒரு கேளிக்கை நிலையம் எனலாம். நடன இசை நிகழ்ச்சிகளுக்காக Stage Apollo Theater, Stage Palladium Theater என இரண்டு அரங்குகள், 11 உணவு விடுதிகள், 7 மதுபான பார்கள், 3 கோப்பி நிலையங்கள், ஆறு சினிமா தியேட்டர்கள், 3 சூதாட்ட மையங்கள், 22 மாநாட்டு மண்டபங்கள் அத்தோடு ஒரு ஆரோக்கிய நிலையம் என்று யேர்மனியர்களுக்காக மட்டுமல்லாமல் சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் மையப் படுத்தி உருவாக்கப்பட்டது இந்த SI Centrum .
நாங்கள் நிகழ்ச்சி பார்க்கப் போன Aladdin இசை நடன நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் 1807 இருக்கைகள் கொண்ட Palladium Theater. பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சோதனைகள் நடத்தியே அரங்குக்குள் அனுமதித்தார்கள்.
அரங்கம் முழுமையானதாக நிறைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் போதே "போட்டோ எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ, தொலை பேசி உரையாடலோ அரங்கத்துக்குள் தயவு செய்து வேண்டாம்" என்று அறிவித்து விட்டார்கள்.நிகழ்ச்சி ஆரம்பித்த நேரத்தில் இருந்து எந்த ஒரு வினாடியும் இடை விடாது நிகழ்ச்சி போய்க் கொண்டே இருந்தது.. மேடையிலே நகரும் கட்டிடங்கள், ஓடும் மேகங்கள், ஒளிபாய்ச்சும் சூரியன், பாழிக்கும் நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், களை கட்டி நிற்கும் சந்தை, வண்டிகள் போகும் வீதிகள் என ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையே இருந்தது. நாடகத்தை ரசித்து, பார்வையாளர்கள் கைதட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரியப்படுத்தாமல் மட்டும் இருந்திருந்தால் கண் முன்னாலே அவர்கள் வந்து நடித்துக் கொண்டிருந்ததை ஒரு அகன்ற திரையில் ஒரு சினிமா என்றுதான் நினைத்திருப்பேன்.
அலாவுதீன் கதை ஏற்கனவே தெரிந்திருந்ததால், Aladdin நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சோர்வு வந்து விடுமோ என்ற என்னுள் இருந்த அச்சம் வீணாகிப் போனது. மேடையிலே மறைந்து தோன்றும் பூதம், நொடிப் பொழுதில் அரண்மனை மறைந்து சந்தைகள், வீடுகள், அந்தப்புரம், படுக்கையறை தோன்றும் காட்சிகள், எம்ஜிஆர் பாணி வாள்ச் சண்டைகள் என்று எல்லாவற்றிலும் என்னை நான் மறந்து போனேன்.
நடிகர்கள் பாடி ஆடி நடித்தது இன்னும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. நடிகர்களில், ஆபிரிக்கவைச் சேர்ந்தவர்கள் மூவர் இருந்தார்கள். அலாவுதீன் இளவரசியுடன் கம்பளத்தில் பறக்கும் காட்சி வருமா, அது இந்த மேடையில் சாத்தியமாகுமா என்ற ஆவலான கேள்வி எனக்குள் இருந்தது. என் எதிர்பார்ப்புக்கு மேலாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. அலாவுதீனும் இளவரசியும் கம்பளத்தில் பறந்த காட்சி என்னை மட்டுமல்ல மற்றைய பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்திருந்தது என்பது அரங்கம் வெடித்து விடும் அளவுக்கு எழுந்த கரகோசம் சொன்னது.
எண்ணிக்கைகளில் குறைந்த நடிகர்கள்தான் பங்கு பற்றி இருந்தார்கள். ஆனால் உடைகளை, வேசங்களை நொடிப் பொழுதில் மாற்றி வந்து மேடையை நிறைத்திருந்தார்கள். நடிப்பில் இசையில் ஏதேனும் பிழைகள் இருந்திருக்கலாம். அவை எல்லாம் பார்வையாளரைச் சென்றடையாமல் கையாளும் திறமை அவர்களிடம் இருந்திருக்கும்.
நிகழ்ச்சி முடிந்த போது எழுந்த கரகோசம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
Back stage பார்ப்பதற்கு மறுநாள் 11.30க்குப் போனோம். அதற்கும் கட்டணம் இருந்தது. 20 பேர் கொண்ட குழுக்களாக அழைத்துப் போய் காட்டி விளக்கம் தந்தார்கள்.
நடிகர்கள் உடனடியாக ஓடி வந்து இருட்டினிலும் எடுத்து மாற்றக் கூடிய முறையில் உடைகளை தனித்தனியாக ஒழுங்காக வைத்திருந்தார்கள். அதேபோல்தான் தலையில் போடும் விக்குகள், ஆபகரணங்கள், கையில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டிருந்தன. தலை விக்குகளில் எப்படி மைக்கை பொருத்தி மறைத்து வைப்பது, தலைமயிர் இல்லாத பூத்த்தின் தாடிக்குள் மைக்கை எப்படி பொருத்துவது என்பதை எல்லாம் விளக்கினார்கள். பத்தாயிரம் யூரோ பெறுமதியான ஆடைகள் இருபது கிலோவரையிலான அலாவுதீனின் உடைகள் எல்லாம் காட்டினார்கள். ஆனால் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதி தரமாட்டோம் என்றார்கள். மேடைத் தளத்திலேயே சிறிய லிப்ற் அமைத்திருந்தார்கள். அதனூடாகத்தான் பூதம் தோன்றி மறைவதை விளங்கப் படுத்தினார்கள். கம்பளத்தில் அலாவுதீனும் இளவரசியும் எப்படிப் பறந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்கள்.
திரும்பி வரும் பொழுது Aladin நிகழ்ச்சியைப் பார்தத்தற்கு கொடுத்த பணத்துக்கு மேலான திருப்தி இருந்தது. ஆனாலும் எங்களவர்களது நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரத்திற்கு பின்னால் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம் இருந்தது.
- ஆழ்வாப்பிள்ளை
21.02.2020