
நாங்கள் வன்னியில் வெண்புறாவில் நின்ற சமயத்தில் அடிக்கடி வந்து எம்மைச் சந்தித்து எமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். எப்போது வந்தாலும் அக்கா.. என்ற படி வந்து என்னோடு பேசி விட்டுத்தான் செல்வார்.
ஒருதரம் கதையில் சொன்னார் "மொறிஸ் வடமராட்சிக்கும், நான் தென்மராட்சிக்கும் பொறுப்பாய் இருந்தோம். நான் இங்கு வந்து விட்டேன். மொறிசும் வருவதாகத்தான் இருந்தது. அதற்கிடையில் மாவீரனாகி விட்டார்" என்று.
எம்மோடு அவருக்கு 2002 இலிருந்து மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தன. `அலெக்ஸ்´சும், `வசந்´துமே அவரது மின்னஞ்சல்களை அவரது பெயரில் எனக்கு அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு மின்னஞ்சலுமே அன்புடன் அக்காவுக்கு... என்றுதான் தொடங்கியிருக்கும். அன்புடன் சகோதரன், சு.ப. தமிழ்ச்செல்வன் என்று முடித்திருப்பார்.
`அலெக்ஸ்´சும், `வசந்´தும் ஒரே நபர்களா என்ற சந்தேகம் எனக்கு இடையிடையே ஏற்பட்டதுண்டு. பின்னர் ஒரு தடவை ஜேர்மனி, ஸ்ருட்கார்ட் நகரில் `அலெக்ஸ்´சுடன் அருகில் இருந்து கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழ்செல்வன் ஜேர்மனிக்கு வரும் போதுகளில் மின்னஞ்சல் மூலம் அறிவித்து விட்டுத்தான் வந்தார். வந்து நின்ற போதும் தொலைபேசியில் அழைத்து பலதடவைகள் கதைத்தார். நாங்கள் அவரை நேரே சென்றும் சந்தித்தோம். (ஒரு தடவை சந்தித்த போது பாலா அண்ணையும் கூட இருந்தார். பாலாண்ணை எனது தம்பி மயூரனை நன்கு அறிந்து வைத்திருந்தார்)
இறந்தாலும் இறவாது
நினைவுகளில் என்னோடு வாழ்பவர்களில் தமிழ்செல்வனும் ஒருவர்.
கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்பது போல
சிலர் பற்றி சொல்ல முடிவது சிறிதே. சொல்லாதவை பெரிது.
சந்திரவதனா
02.11.2015