
மீண்டும் நிச்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே"
- கப்டன் மொறிஸ் (பரதன்)
அது அவன் சொன்ன வரிகள். அந்த வரிகளை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அவை வெறும் வரிகள் அல்ல. அது அவனது மனதினுள் இருந்த உண்மையான எதிர்வு கூறல். அவன் அதனைக் கூறும் போது சிரித்த முகத்துடனே தான் கூறுவான். அதனால் அதன் கனத்தை அப் போது என்னால் உணர முடியவில்லை. இப்போது எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கிறேன்.
எத்தனை விடயங்களை வெகு சாதாரண மாகக் கடந்து வந்து விட்டேன்! ஆச்சரியமாக இருக்கிறது! ஒரு பெரும்போரை, பேரிழப்புகளை, துயரங்களை, பயங்கரங்களை, ஆபத்துக்களை, அழுகைகளை, சிரிப்புகளை.. என எல்லாவற்றையும் எப்படிக் கடந்து வந்திருக்கிறேன்! நினைத்துப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது.
பரதன் எனக்கு ஆறாவது பிள்ளை. 1969ம் ஆண்டு செப்டெம்பர் 12ம்நாள் பிறந்தான். அவனை எல்லோரும் 'தகப்பனைப் போலவே தோற்றத்தில் இருக்கிறான்' என்று சொல்வார்கள். எப்போதும் சிரித்த முகம். கலகலப்பு நிறைந்த எங்கள் குடும்பத்தில் மேலும் கலகலப்பூட்டுபவனாக அவன் இருந்தான். நகைச்சுவை அவனின் உடல் முழுவதும் பரவிக் கிடக்கிறதோ என்று நான் யோசிப்பதுண்டு.
ஆனால் அந்தக் கலகலப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. எல்லாக் குடும்பங்களைப் போலவும் சந்தோசமும் கலகலப்பும் நிறைந்த எங்கள் குடும்பத்திலும் துயர்படியும் நாட்கள் மெல்ல மெல்ல ஆரம்பமானது. 1983 யூலைக் கலவரம் எங்கள் சந்தோசங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு கட்டியம் கூறுவது போல் நாடெங்கும் தமிழ்மக்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. அந்நேரம் எனது கணவரும் எனது மூத்த மகனும் சிங்களவர்கள் அதிகமாக வாழும் தென்னிலங்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலவரத்தில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பி வந்தார்கள். ஆனால் எமக்குத் தெரிந்த நூற்றுக் கணக்கான உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள் எனப் பலர் இக்கலவரத்தில் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டிருந்தார்கள். இந்தக் கலவரத்தின் தாக்கம் எல்லோரையும் மிகவும் பாதித்திருந்தது. அது எங்கள் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. இதுவே என் மகன் பரதனையும் விடுதலைப் போராட்ட உணர்வுக்குள் இழுத்துச் சென்றிருக்க வேண்டும்.
அவன் கதைகள் கேட்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். அப்பாவிடம் கதைகள் கேட்டுக் கேட்டே வளர்ந்தவர்கள் என் பிள்ளைகள். அப்பா சொல்லும் சமயக் கதைகள், சரித்திரக் கதைகள், அரசியல் கதைகள்... எல்லாம் நாளும் பொழுதும் பிள்ளைகளின் சிந்தையைத் தீட்டிக் கொண்டே இருந்திருக்கின்றன. இதுவே பரதனையும் அவனது இளவயதில் ஒரு திடமான நேர்மையான துணிச்சலான முடிவினை அவனுக்குள் எடுப்பதற்கு உந்து கோலாக அமைந்திருக்கிறது.
நான் அவனைத் தடுக்கவில்லை. காலம் அப்படி இருந்தது. அவன் எடுத்த முடிவு தேவையானது என்றும் அவசியமானது என்றும் எனக்குத் தோன்றியது. உறவினர்கள் என்னைப் பேசினார் கள். "அவனின் முடிவினைமாற்றி அவனைத் திருப்பி அழை" என்று என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவும் இல்லை. அதனைச் செய்யவும் இல்லை. அவன் மேலும் சில காலம் படித்து, அந்தப் படிப்பை பூரணமாக முடித்து விட்டுப் போயிருக்கலாம் என்று மட்டுமே மனசுக்குள் யோசித்தேன். அவ்வளவுதான். 'எமக்கானதெல்லாம் கிடைத்து விட்டால்... எல்லோரும் சந்தோசமாகப் படிக்கலாம்' என்றுதான் நான் நினைத்தேன். ஆசைப்பட்டேன். அது நடக்கும் என்றும் மிகவும் நம்பினேன்.
அவன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டான். அவர்களது கட்டுப்பாடுகளுக்கமைய பயிற்சிகள்பெற்று பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகவும் பணிகளைச் செய்யத் தொடங்கினான். அவன் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இயங்கிக் கொண்டிருக்கும் போது இந்திய இராணுவம் திடீரென்று இலங்கைக்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் இந்திய இராணுவத்தின் வரவை நாங்கள் மகிழ்ச்சியுடன்தான் ஏற்றுக் கொண்டோம். நாளடைவில் அவர்களின் இலக்கு என்ன என்பதை அறியத் தொடங்கியபோது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஏமாற்றமும் துயரமும் சொல்லில் அடங்காதவை! அவர்கள் இலங்கையின் வடபகுதியையும் கிழக்குப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுதலைப் போராளிகளை தமது கைப்பாவைகளாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் கள். அப்போதுதான் நிலைமையே தலைகீழாக மாறத் தொடங்கியது. இந்திய இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமது செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் ஆரம்பித்திருந்தது. இது நாம் வாழ்வில் ஒருபோதும் எதிர் பார்க்காதது.
அந்நேரம் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த என் மகன் பரதனைத் (மொறிஸ்) தேடி அவர்கள் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். அவனைத் தேடுவதாகச் சொல்லி பருத்தித்துறையில் இருக்கும் அப்பாவி இளைஞர்களைப் பிடித்து சித்திரவதை செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருந்தது. அமைதிகாக்க வந்தபடை ஆக்கிரமிப்புப் படையாக மாறியிருந்தது. மொறிஸைத் தேடி அவர்கள் கொலைவெறி பிடித்தவர்கள்போல அலைந்து கொண்டிருந்தார்கள். புலிப் போராளிகள் பலரைச் சல்லடை போட்டுத் தேடிப் பிடித்து ஈவு, இரக்கம் இன்றிக் கொலை செய்து கொண்டிருந்தார்கள்.
பரதன்(மொறிஸ்) மிகவும் நேர்மையானவன். எல்லோரிடமும் அன்பும் அக்கறையும் கொண்டவன். மக்களின் கஷ்டங்களைப் புரிந்து நேரில் சென்று அவர்களுக்கான உதவிகளைச் செய்பவன். அதனால் அவனை நேசிக்காத மக்களே கிடையாது. எல்லோரும் என்னிடம் வந்து அவனின் நல்ல பண்புகளைக் கூறிப் பாராட்டுவார்கள். அவனின் பண்பை, வீரத்தை, துணிச்சலைக் கூறி வியந்து நிற்பார்கள். அது எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கும். ஆனால் அவற்றைக் கண்ணாரக் கண்டு, அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அனுபவிப்பதற்குக் காலம் எனக்கு இடம் தரவில்லை.
இந்தச் சமயம் எனது அடுத்த மகன் சபாவும்(மொறிஸின் தம்பி மயூரன்) விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு விட்டான். தொடர்ந்த நாட்களில் அவன் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று தலைவரின் இருப்பிடப் பகுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டு விட்டானென எமக்கு இரகசியச் செய்திகள் வந்து சேர்ந்தன.
இந் நிலையில் இந்திய இராணுவமோ அல்லும் பகலும் எங்கள் வீட்டிற்கு வந்து "மொறிஸ் எங்கே? மொறிஸ் எங்கே?'' என்று கேட்டு எம்மை சித்திரவதைப் படுத்தத் தொடங்கி விட்டது. அந்தச் சமயம் என் சின்ன மகள் பிரபாவின் கணவரான கணேஷை(டக்கி)யும் சிங்கள இராணுவம் கைது செய்து கொண்டு போய் பூசா கடற்படைத்தடுப்பு முகாமில் வைத்திருந்தது. அவரின் கைது அவருக்கும் எங்களுக்கும் மேலும் எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஒருபுறம், துயரம் ஒரு புறம் என நாங்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லில் வடிக்க முடியாதவை!
தினமும் எங்கள் வீடு தேடி வரும் இந்திய இராணுவத்தினர் எங்களுக்குச் செய்யும் அட்டூழியங்கள் வர வர அதிகரித்துக் கொண்டேயிருந்தன. அவற்றைத் தாங்க முடியாமல் நானும் எனது இரண்டு மகள்மாருமாக எமது வீட்டை விட்டுப் புறப்பட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று விட்டோம். அப்போது எனது கணவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபராக அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். என் இளையமகள் சந்திராவும் யாழ்ப்பாணம் கச்சேரியில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் யாழ்ப்பாணத்தில் குடியிருப்பது எங்கள் எல்லோருக்கும் வசதியாகவும் கொஞ்சம் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அங்கே யாழ். புகையிரத நிலையத்தை அண்டியிருக்கும் என் கணவரது ரெயில்வே பங்களாவில் நாம் குடி கொண்டு விட்டோம். அங்கும் எமது பங்களாவைச் சுற்றி இந்திய இராணுவ முகாம்களும் சென்றிப் பொயின்றுகளும்தான். ஆனாலும் பருத்தித்துறையில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரிடமிருந்து கொஞ்சமாவது தொலைவிற்கு வந்து விட்டோம் என்ற ஒரு ஆறுதல். அவ்வளவுதான்.
நாங்கள் ஊரைவிட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்து விட்டாலும் பருத்தித்துறையில் என் மகன் எத்தனை சிரமப் படுகிறானோ என்று எனக்கு ஒரே யோசனையாகவே இருக்கும். இராணுவச் சுற்றி வளைப்புகளுக்கு மத்தியில் அவனும் பெடியளும் எங்கு சென்று சாப்பிடுவார்கள், எப்படித் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற தவிப்பு எப்போதும் எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.
இந்திய இராணுவம் "மொறிஸைப் பிடித்தே தீருவோம்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது என்ற செய்திகள் நாளும் பொழுதும் ஒவ்வொருவர் ஊடாகவும் எமக்கு வந்த வண்ணமே இருந்தன. ஒவ்வொரு நாட்களும் எங்களுக்குக் கலக்கமானதும் பதட்டமானதுமான நாட்களாகவே இருந்திருக்கின்றன. அவனைப் பார்த்து விட்டு வந்தால் மனம் ஆறும் என்ற நிலையில் நானும் என் மகள் சந்திராவுமாக ஒவ்வொரு வாரமும் இராணுவக் கெடுபிடிகளினூடாகப் பஸ்ஸில் பயணம் செய்து போய் அவனைப் பார்த்து விட்டு வருவோம். சந்திராவை அவன் 'இளையக்கா..' என்று தான் அழைப்பான். அவனது தோழர்களும் அப்படித்தான் அழைப்பார்கள். அவள் தனது சம்பளம் வந்ததும் அவனுக்காக ஒரு தொகையை என்னிடம் தருவாள். எனது கணவரும் அவனுக்காக அவ்வப்போது பணம் தந்துவிடுவார். நான் அவற்றைச் சேர்த்துக்கொண்டு போய் அவனிடம் கொடுத்து "பசியோடிராமல் எல்லாருமாகச் சாப்பிடுங்கோ..'' என்று சொல்லி அவர்களுடன் உரையாடி விட்டு வருவேன். அது அவனுக்கும் அவனோடு நிற்கும் அவனது நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்காகத்தையும் கொடுக்கும். என் மனதிற்கும் மிகுந்த ஆறுதலாக இருக்கும்.
எங்கள் பருத்தித்துறை வீட்டில் அப்போது எனது கணவரின் தாயார்(என் பிள்ளைகளின் அப்பாச்சி) மட்டுமே தனியாக இருந்தா. அவ தன் சமையல், குளிப்பு, படுக்கை யாவற்றையும் தனியாகவே கவனித்துக் கொண்டிருந்தா. சில சமயங்களில் எங்களால் பருத்தித்துறைக்குப் போக முடியாமல் நிலைமை மோசமாகியிருக்கும். அந்தத் தருணங்களில் மொறிஸ் அங்கு வந்து "அம்மா வந்தவவோ? இளையக்கா வந்தவவோ?' என்று மிகுந்த ஏக்கத்துடன் அப்பாச்சியைக் கேட்டுவிட்டுப் போவானாம். பின்னர் எங்களைக் காணும் போது அப்பாச்சி சொல்லுவா. அதனைக் கேட்கும் போது துயரம் எங்களை வாட்டி எடுக்கும்.
1989 மார்ச்சில் ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் சந்திராவும் பாமாவும் அவனைப் பார்ப்பதற்காக பருத்தித்துறை நோக்கி பஸ்ஸில் புறப்பட் டார்கள். சந்திரா தனது சம்பளத்தில் அவனின் செலவுக்குப் பணமும் கொடுத்து, இரண்டு நாட்கள் ஊரில் நின்று, பெடியளுக்கு விருப்பமான சாப்பாடுகளும் ஏதும் செய்து கொடுத்து விட்டு வரப்போவ தாகக் கூறிவிட்டுத்தான் பாமாவையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள். அன்று யாழ்ப்பாணம் முழுவதுமே சற்றுப் பதற்றமாகத்தான் இருந்தது. இராணுவச் சோதனைச் சாவடிகளில் சோதனைகள் வலு உக்கிரமாக நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அவர்கள் போவது எனக்கு யோசனையாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர்கள் துணிச்சலுடன் புறப்பட்டு விட்டார்கள்.
அங்கு போய்ச் சேர்ந்ததும், சந்திரா மொறிஸையும் தோழர்களையும் மறுநாள் சாப்பிட வரும்படி ஆளனுப்பிச் சொல்லி விட்டு, தோசைக்கு அரைத்துக் குழைத்து வைத்து விட்டு, மறுநாள் அதிகாலை எழுந்து அம்மியில் சம்பல் அரைத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அச்சமயம் பார்த்து மொறிஸைத் தேடி வீட்டுக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் தோசைமாப் பானையை இழுத்துக் கொட்டி, அம்மியில் சம்பல் அரைத்துக் கொண்டு இருந்த சந்திராவையும் வீடு சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த பாமாவையும் பிடித்து, சித்திரவதைகள் செய்து மந்திகை இராணுவமுகாமிற்குக் கொண்டு சென்று விட்டார்கள். முகாமில் அவர்களைப் போலவே வேறும் பல இளம் பெண்களைக் கொண்டு வந்து பணயக் கைதிகளைப் போல வைத்திருந்தார்கள். அங்கு நடந்த விசாரணைகளும் மரணப் பயமுறுத்தல்களும் தனியான ஒரு கதை. அந்தக் கொடுமைகளையெல்லாம்கடந்து அங்கிருந்து விடுபட்டு மறுநாள் இரவு அவர்கள் ஏதோ விதமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தமை ஒரு பெரிய கதை.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் நாங்கள் மொறிஸைப் பார்ப்பதற்காக எங்கள் சொந்த வீட்டின் பக்கமே போவதில்லை. இராணுவம் எப்போதும் எங்கள் வீட்டைக் குறிவைத்துப் பார்த்த படியே இருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம். அதனால் மொறிஸிலும் எங்கள் குடும்பத்திலும் பெரிதும் அன்பு கொண்ட ஐயனார் கலட்டி திருநாவுக்கரசு மாஸ்ரர் வீட்டுக்குத்தான் நேராகச் செல்வோம். அங்கு போனால் அவரின் மகன் ராசு, பெடியள் நிற்கும் இடம் தேடிப் போய் நாமங்கு வந்திருப்பது பற்றி அறிவித்து விட்டு வருவான். அதன் பின்னர் மொறிசும் அவனது நண்பர்களும் அங்கு வந்து எம்மைச் சந்தித்துக் கதைத்துப் போவார்கள்.
கடைசியாக நான் போய் மொறிஸைச் சந்தித்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது 1989 ஏப்ரல் மாதம் 27ம் திகதி. அவனின் மூத்தக்கா வதனா ஜேர்மனியிலிருந்து அவனுக்காக 200மார்க்குகள்(200DM) அனுப்பி வைத்திருந்தாள். அவனையும் தோழர்களையும் சந்தித்து, அந்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்து வருவதற்காக அன்று நான் ஊருக்குப் போயிருந்தேன். அன்றும் மாஸ்ரர் வீட்டிற்குத்தான் நேராகப் போனேன். வழமை போல் அவரின் மகன் ராசு குறிப்பிட்ட இடத்திற்குப் போய் அறிவித்து விட்டு வந்தான்.
அன்று மொறிஸ் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது நேரம் மதியம் ஒரு மணியிருக்கும். அன்றைக்கு அவனின் முகத்தில் யோசனை நிறைந்திருந்தது. திருநாவுக்கரசு மாஸ்ரரின் மனைவி தேவியும் அவவின் தங்கையுமாக சோறு கறி சமைத்து, எனக்கும் அவனுக்கும் அன்போடு மதியஉணவு பரிமாறினார்கள். அவனின் யோசனை நிறைந்த முகம் என் மனதை என்னவோ செய்தது. நிறையக் கதைக்க முடியாமல் எங்கள் இருவரது மனங்களும் சோர்வுடன் இருப்பது போல் தோன்றியது.
நாங்கள் இருவரும் சாப்பிட்டு முடிந்ததும் மாஸ்ரரின் மனைவி எங்களின் கைகளைக் கழுவுவதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். நான் கைகளைக் கழுவிவிட்டு வெளிவராந்தாவில் இருந்த வாங்கிலில் அமர்ந்து கொண்டேன். மொறிஸ் என்னருகில் வந்து அமர்ந்தான். அடுத்த கணமே தன் தலையை என் மடியின் மீது வைத்துச் சாய்ந்து படுத்தான். அவனின் கையிலிருந்த துப்பாக்கி அவனருகில் சுவரோடு சாய்ந்து கிடந்தது. ஒரு விடுதலைப் போராளிக்குரிய தடித்த அங்கியுடனும் இடுப்பில் சொருகியிருக்கும் கிரனைற்றுடனும் துப்பாக்கியுட னும் எப்படி இவர்களால் வசதியாகத் தூங்க முடியுமென நான் எப்போதும் யோசிப்பதுண்டு. அப்போதும், அவனைப் பார்த்த அந்தக் கணத்தில் என் மனதிற்குள் அந்த ஆதங்கம் தான் ஏற்பட்டது. 'இவற்றையெல்லாம் கழற்றியெறிந்து விட்டு நிம்மதியாக, ஆறுதலாக எப்போதுதான் இவன் தூங்கப் போகிறானோ, எப்போதுதான் அதற்கான காலம் வரப்போகிறதோ?' என்ற கலக்கமான யோசனையுடன் "ஏனப்பு சரியா யோசிக்கிறாய்? என்ன பிரச்சனை..?" என்று கேட்ட படியே அவனின் தலைமுடியை மெதுவாகக் கோதி விட்டேன்.
அன்று அவனின் முகத்தில் வழமையான அந்த மலர்ந்த சிரிப்பைக் காணவில்லை. "மூத்தக்கா காசு அனுப்பியிருக்கிறா" என்று சொல்லி அந்தப் பணத்தை அவனிடம் கொடுத்தேன். சட்டென்று ஒரு ஒளிக்கீற்று அவனின் முகத்தில் மின்னி மறைந்தது. உடனேயே அதனை அங்கு நின்றிருந்த தேவியக்காவிடம் கொடுத்து "அடுத்த சனிக்கிழமை பெடியள் எல்லாருக்கும் சாப்பாடு செய்யுங்கோ" என்று சொன்னான். அப்போது சாயந்தரம் மூன்று மணியிருக்கும்.
சடாரென்று எழுந்து அமர்ந்தான். "அம்மா நீங்களும் இருள முதல் வீட்டை போங்கோ. மிக்க சந்தோசம் எண்டு மூத்தக்காட்டைச் சொல்லுங்கோ நான் அவசரமாப் போகோணும்" சொல்லியவாறே முற்றத்தில் இறங்கி, கேற்றை நோக்கி நடந்தான். கேற்றடியில் நின்று திரும்பிப் பார்த்து, கையை அசைத்து விட்டு வேகமாக மறைந்து விட்டான்.
'கடவுளே… எப்பதான் இந்தப் பிள்ளை ஆறுதலாகச் சரிந்து படுக்க நேரம் கிடைக்கப் போகுதோ..' மீண்டும் மனதிற்குள் அதே கலக்கமும் தவிப்பும். அது தான் என் மகன் மொறிஸை நான் சந்தித்துக் கொள்ளும் கடைசித் தருணம் என்பது அப்போது எனக்குத் தெரியாது!
ராசு என்னைச் சைக்கிளில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாண பஸ்ஸில் ஏற்றி விட்டான். நான் யாழ். வீடு போய்ச் சேர இரவு ஏழு மணியாகி விட்டது. போய்ச் சேர்ந்தவுடன், பிள்ளைகள் ஓடி வந்து "அம்மா பரதனைக் கண்டனிங்களோ? காசு கொடுத்தனிங்களோ..?" என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். நான் சந்தித்த விபரங்களையெல்லாம் சொன்னபடி கதிரையில் அமர்ந்திருந்தேன். சந்திரா ஓடிப்போய் சுடச்சுட தேநீர் போட்டுக் கொண்டு வந்து தந்தாள். அவனைச் சந்தித்து விட்டு வந்தேன் என்பதில் எல்லோருக்கும் ஒருவித ஆறுதலாக இருந்தது.
மூன்று நாட்கள் கடந்திருக்கும். அது 1989ம் ஆண்டு மே,1ம்திகதி. திங்கட்கிழமை. என் மைத்துனி சிவநேசமும் ஒன்று விட்ட சகோதரி வடிவமும் பருத்தித்துறையிலிருந்து பஸ்ஸில் பயணித்து வந்து எங்கள் பங்களாவிற்குள் நுழைவது தெரிந்தது. நான் யோசனையோடு பார்த்த படி நின்றிருந்தேன். என்னைக் கண்டதும் அவர்கள் இருவரும் விம்மி விம்மி அழத் தொடங்கினார்கள். "ஐயோ மச்சாள்... மொறிஸ் போயிட்டான்.." என்று கதறியழுதபடி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்தார்கள்! எனக்கு உலகமே இருண்டுகொண்டு வருவது போலிருந்தது.
கனவிலும் நினைத்திராத அந்தச் செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிங்கள இராணுவத்துக்கு மிகச்சுலபமாகப் போக்குக் காட்டியவன் என் பிள்ளை. இந்திய இராணுவத்தின் ஐந்து தடவைகளிலான பெரிய பெரிய சுற்றிவளைப்புகளில் இருந்தெல்லாம் இலாவகமாகத் தப்பிக் கொண்டவன். ஒரு தடவை இராணுவத் துப்பாக்கிக் குண்டொன்று அவனது காலைத் துளைத்த பின்னரும் துணிகரமாகத் தாக்கிவிட்டுத் தப்பி வந்தவன். அப்படிப்பட்ட என் பிள்ளை அவர்களுக்கான அந்த இலக்கை அடையும் வரை தன்னுயிர் காப்பான் என்றல்லவா நம்பியிருந்தேன்!
என் கனவுகள் தோற்று விட்டனவா? என் நம்பிக்கைகள் தோற்கடிக்கப் பட்டு விட்டனவா? சிந்திக்கும் திறனை நான் முற்றிலுமாய் இழந்தேன். மிக மிகக் கொடுமையானதொரு தருணம் அது!
அன்று மாலை சந்திரா யாழ்.கச்சேரியால் வேலை முடித்து வந்தபின் கதைத்து முடிவுசெய்த படி மறுநாள் அதிகாலை நாம் எல்லோருமாகப் பருத்தித்துறைக்குப் புறப்பட்டோம். எந்நேரமும் எதுவும் நடக்கலாமென்ற அச்சம் பருத்தித்துறைப் பகுதியெங்கும் நிறைந்திருந்தது. வீதிகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள் யாவும் அடைக்கப் பட்டிருந்தன. மொறிஸ் இல்லாத ஒரு நாளைக் கடப்பதற்குக் கூட பருத்தித்துறை மக்களனைவரும் அஞ்சினார்கள் என்பது தெரிந்தது. "இனி எங்களை யார் காப்பது? ஆமிக்காரர் தங்கள் எண்ணத்திற்கு வந்து எங்களையெல்லாம் சுட்டுத் தள்ளப் போகிறார்கள்.." என்றெல்லாம் பலரும் தமக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். பருத்தித்துறை முழுவதும் கறுப்புக் கொடிகள் பறந்தன. வீதியெங்கும் தோரணங்கள். மதிற்சுவர்களெங்கும் அஞ்சலிச் சுவரொட்டிகள். பருத்தித்துறை மண் துயரத்தில் தோய்ந்து இருண்டு கிடந்தது!
"பருத்தித்துறை இராணுவ முகாமும் மந்திகை இராணுவ முகாமும் வியாபாரிமூலை இராணுவ முகாமும் இணைந்து முத்திசையில் சுற்றி வளைத்து நடாத்திய தாக்குதல் சண்டையில் மொறிஸ், தன்னோடு நின்றிருந்த எட்டுப் போராளிகளும் தப்பிப் போவதற்கான வழியைச் செய்து கொடுத்து விட்டு கடைசியாக றம்போவுடனும் சிறீயுடனும் மட்டும் நின்று இறுதிவரை போரிட்டு வீரமரண மடைந்தான்" தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக எம்மைத் தேடிவந்து தமக்குத் தெரிந்த விபரங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்திய இராணுவம் மொறிஸின் வித்துடலை எடுத்துச் சென்று மந்திகை முகாமில் வைத்து, பாடசாலை மாணவர்களை அழைத்துச் சென்று பெருமையாகக் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வந்து கொண்டிருந்தது.
மறுநாள், மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மொறிஸின் வித்துடலை எடுப்பதற்காக நானும் என் மகள் சந்திராவும், திருநாவுக்கரசு மாஸ்ரரும் சென்றோம். எம்மோடு போஸ்ற் மாஸ்ரர் மகேந்திரமும் இணைந்து கொண்டார்.
´இராணுவத்தினரின் அனுமதியின்றி அவனின் வித்துடலை யாரும் எடுக்க முடியாது` என்ற கடுமையான உத்தரவை இராணுவம் வைத்தியசாலைக்கு விடுத்திருந்தது.
'எனக்கு என் பிள்ளையின் வித்துடல் வேண்டும்'
நான் என் பிள்ளையின் வித்துடலை எடுப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக மந்திகை இராணுவ முகாமை நோக்கிச் செல்வதற்குத் தயாரானேன். என் மகள் சந்திராவோ நான் தனியாக இராணுவமுகாமிற்குப் போவதை எண்ணி மிகவும் பதற்றப் பட்டாள். இராணுவம் நிச்சயம் என்னை ஏதாவது செய்து விடும் என்று எல்லோரும் அச்சப் பட்டார்கள், தயங்கினார்கள். நான் எல்லோரையும் அமைதிப் படுத்தி விட்டு இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். இராணுவ சென்றிப் பொயின்ற்றுகளிலிருந்து துப்பாக்கிமுனைகள் என் பக்கம் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அடுத்து வரும் நிமிடங்களில் எதுவும் நடக்கலாமென்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னைத் தைரியமாக இயங்க வைக்கும் ஏதோ ஒரு சக்தி அப்போது என்னை ஆட்கொண்டிருந்தது. எதற்கும் முகம் கொடுக்கத் தயாராகவே நான் முகாம் நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அரைவாசித்தூரம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவக் கொமாண்டர் கள் முகாம் வாசலுக்கு வந்து, என் வருகையைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.
வாசலை அண்மித்ததும் "நான் மொறிஸின் அம்மா" என்றேன்.
அவ்வளவுதான். இராணுவக் கொமாண்டர் ஒருவர் அவசரமாக என் முன்னால் வந்து, என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று என்னை ஒரு கதிரையில் அமர்த்தினார். உடனே சுடச் சுட தேநீர் தயாரித்து வந்து எனக்குப் பரிமாறினார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் போலத் தோன்றிய மூவர் என் முன்னால் வந்து நின்று குனிந்து என்னை வணங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து,
"அம்மா... உங்கள் மகன் ஒரு பெரிய வீரன். அவனின் திறமையைக் கண்டு அவன் ஒரு வயதான பெரிய மனிதன் என்றுதான் இத்தனை நாளும் நாம் நினைத்திருந்தோம். ஆனால் அவன் வயதில்குறைந்த ஒரு இளைஞன் என்று அறியும் போது எங்களால் நம்பவே முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன். அதனால்தான் அவனை எல்லா மக்களும் நேசிக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. இத்தனை வீரமும் துணிச்சலும் மிக்க ஒருவனைப் பிள்ளையாகப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப் படுங்கள். உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். நீங்கள் ஒரு வீரத்தாய். உங்களை நாங்கள் வணங்குகிறோம்..." என்று ஆங்கிலத்தில் கூறிய படி இரு கைகளையும் குவித்து என்னை வணங்கினார்கள்.
என்னால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை! என் உடல் என்னையறியாமல் மெல்ல மெல்ல நடுங்கத் தொடங்கியது. அவ்வளவு நேரமும் எனக்குள் இறுகிப் போயிருந்த அத்தனை உணர்வு களும் பொங்கியெழுந்து என் கண்களைக் கண்ணீரால் மறைக்கத் தொடங்கியது! அந்தக் கணம் வரை நான் கட்டிக்காத்த என் தைரியம் அத்தனையும் ஒரு மேகம் நொருங்குவது போல் கீலம் கீலமாய் சிதறிப் போகத் தொடங்கியது!
நான் எழுந்து நின்றேன். பாதையைக் கண்ணீர் மறைத்தது. நான் அந்தக் கண்ணீரைத் துடைக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து என் மண்ணின் மைந்தனது வித்துடலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!
- சிவா தியாகராஜா