கப்டன் மயூரன்(சபா)

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன். மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும், அத்தான் கணேசுடனும், பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டான்.

அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும், போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது... தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும், கலகலப்பும்தான் வீட்டில்.

"என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே" என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.

அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். "மருமகனா, மருமகளா" என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌனநிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.

ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.

அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.

பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது "நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?" என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனைக் கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.

இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ, நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.

அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான், அவன் போனதும் அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.

என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.
"என்னப்பு..! என்ன விசயம்?" என்று கேட்டேன்.

"வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்" என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.

அதற்குள் அவனது சின்னக்கா பிரபாவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.
"உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா." என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே "பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க.." என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.

வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.

எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். "மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்" என்று.

வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.
பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.


11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.

விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.

அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.

அம்மா
சிவா தியாகராஜா

மன்கைம்
யேர்மனி

Drucken   E-Mail

Related Articles

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

பெருநினைவின் சிறு துளிகள்

நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை!

`மே´ மாதம்

நானும் காத்திருக்கிறேன்