கண்ணின் மணிகள்

"கண்ணே மணியே கண்ணுறங்கு"

இவ்வாறு அன்னையர் பாடும் போது அது என் நெஞ்சைத் தொட்டதில்லை. இதுவும் இளம் வயதில் " என்னுயிர் நீதானே" என்று காதலர் ஒருவருக்கு ஒருவர் சொல்வது போல்தான் என்று எண்ணினேன். அதுவே பின்னர் "சொன்னது நீதானா? சொல் சொல்"என்றும் "அவளா சொன்னாள் இருக்காது" என்றும் முடியும் கதைகள் பல.

அன்று காலை நான் எழுந்த போது வானத்தில் பறப்பது போன்ற இனிய உணர்வு. ஏதோ இரவு தண்ணியைப் போட்டேன் அல்லது கஞ்சா, அபின் என்று கற்பனையைப் பறக்க விடாதீர்கள். நான் சுதந்திரக் காற்றை அனுபவிக்கின்றேன். என் மனைவி தன் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள். கட்டிலும் மெத்தையும் எனக்கே சொந்தம். குறட்டை ஒலியைக் குறை சொல்ல யாரும் இல்லை.

அடுத்த அறையில் அம்மா இருந்தார்கள். வழமை போல் கடவுளைக் கும்பிட்டுப் பின் சமையலறை செல்லும் ஓசை கேட்கின்றது. ஆனால் அன்று அந்த ஓசைகள் தாளம் தவறிய பாடலைப் போல்தான் எனக்குக் கேட்டன. அப்பொழுது அம்மாவிற்கு வயது 77 இருக்கும். சொந்த மண்ணை விட்டு எங்களோடு வெலிங்டன் நியுசிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அங்கு கோயில் குளங்கள் என்று வாழ்ந்தவளுக்கு இங்கு பனியிலும் தனிமையிலும் தன் அந்திக் காலங்களைக் கழிக்கும் தண்டனை கொடுத்திருந்தது சிறீலங்கா அரசு.

"அம்மா இந்த வயதில் கடவுளிட்ட என்ன வேண்டிறியள்? நூறு வயசு மட்டும் வாழத்தானே?"
இப்படி ஒரு நாள் அவளிடம் கேட்டேன்.

அவர்கள் சிரித்தார்கள்.  "இல்லை என்ரை பிள்ளைகள் சுகமாகவும் சந்தோசமாகவும் இருக்க வேணும். அதுக்குத்தான் கும்பிடிறன்" என்றாள்.

"உலகம் பிறந்தது எனக்காக" என்று பல ஆண்டுகளுக்குப் பின் வாய் முணுமுணுக்க, நான் ஒருவாறு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தேன். பல ஆண்டுகளாக என் மனைவி தன் தாய் வீட்டுக்குப் போகவில்லை என்ற கசப்பான உண்மையை இது வரை புரிந்து கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு 'டியுப் லைட்'தான்.

குளியலறைக்குச் செல்லும் போது அம்மா சமையலறையில் ஏதோ வெட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் அவர் கண்ணில் 'கட்டராக்' சத்திரச் சிகிச்சை ஒன்று செய்திருந்தோம். அந்தக் கண்ணால் இப்பொழுது அவர்களால் நன்கு பார்க்க முடிகின்றது. மறு கண் சிறிது மங்கல். வெங்காயம் வெட்டும் போது தன் விரல்களை வெட்டி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருக்கும். ஆனாலும் அம்மா சமையலில் உதவி செய்ய என்னை அனுமதிக்க மாட்டார்கள்.

"நீ வேலைக்குப் போக வேணும். அங்கால போ. கறி, வெங்காயம் எல்லாம் மணக்கும்" என்று துரத்தி விடுவார்கள்.

நான் குளித்து உடை மாற்றி வந்த போது காப்பி மேசையில் இருந்தது. நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தேன். யாரோ என் தலையில் ஓங்கி அடிப்பது போலிருந்தது. தொண்டைக் குழிக்குள் காப்பி உள்ளே போகவும் முடியாது வெளியே வரவும் வழி தெரியாது திக்கு முக்காடியது.

அம்மாவின் சத்திரச் சிகிச்சை செய்த கண்ணில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"அம்மா என்னம்மா நடந்தது?" நான் பதறினேன்.

"அது... விடிய எழும்பேக்க தடுமாறி பக்கத்தில இருந்த அலுமாரியில இடிச்சிட்டன்."  மெதுவாக வந்தன வார்த்தைகள்.

"ஏனம்மா உடனே சொல்ல இல்லை? வாங்கோ கெதியா. ஆசுப்பத்திரிக்குப் போக வேணும்" நான் அவசரப்படுத்தினேன்.

"இதுக்காகத்தான் உனக்கு உடன சொல்லயில்லை. தற்செயலாக ஆசுப்பத்திரியில என்னை நிற்பாட்டினால் உனக்கு என்ன சாப்பாடு? பொறு இந்தக் கீரைக் கறி அடுப்பில அதை இறக்கி வைச்சிட்டு வாரன்." மிக நிதானமாக அவள் பேசிய போது எனக்கு அழுவதா, ஆத்திரங் கொள்வதா என்று தெரியவில்லை.

வைத்திய சாலைக்கு நாங்கள் சென்ற போது உடனடியாக அம்மாவின் கண்ணுக்கு இன்னொரு சத்திரச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். சத்திரச் சிகிச்சை அறை வாசல் வரை அம்மாவுடன் சென்றேன். அவர்களை உள்ளே எடுத்துச் சென்றார்கள். ஒரு நாற்காலியில் என்னை நான் புதைத்துக் கொண்டேன்.

சாதாரணமாகக் கடவுளை எதையும் வேண்டாத நான் அன்று அம்மாவின் கண் சுகப்பட வேண்டுமென மனதுக்குள் மன்றாடினேன். ஆனால் கடவுளுக்குத்தான் கண்ணில்லை என்பார்கள். அம்மா தன் ஒரு கண்ணின் மணியை நிரந்தரமாக இழந்து விட்டார்கள்.

அம்மா மயக்கந் தெளிந்து பேசிய முதல் வார்த்தை "சாப்பிட்டியே?"

 மங்கலாகத் தெரியும் மறு கண்ணால் அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள். அந்தக் கண்ணில் சத்திரச் சிகிச்சை செய்தால் அதையும் இழந்து விடுவாளோ என்ற அச்சம் இருப்பதால் அதைச் செய்யக் கூடாது என்று வைத்தியர் கூறியிருந்தார்.

"கண்ணே மணியே கண்ணுறங்கு"
எனக்கும் பாடவேண்டும் போலிருந்தது.

- தெ. நித்தியகீர்த்தி
28.08.2005


Drucken   E-Mail

Related Articles

நேர்காணல்

ஓவியம்

பால்வினை

Datenschutzerklärung

Datenschutzerklärung

Logout

about